கேள்வி பதில்

Spread the love

கேள்வி

ஆயுர்வேதம் டுடே ஆசிரியர் அவர்களுக்கு, நான் தனியார் ஆலை ஒன்றில் பணி புரிகிறேன். வயது 45. அலுவலக வேலையில் உள்ளேன். கடந்த ஒரு வருடமாக எனக்கு சரியான தூக்கம் வருவதில்லை. அலுவலகத்தில் உள்ள வேலை நெருக்கடி தவிர வேறு எவ்வித பிரச்சனையுமில்லை. தூக்கம் வருவதற்குரிய எளிய மருத்துவச் சிகிச்சைகளை தாங்கள் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

பதில்

தூக்கமின்மை என்பது பொதுவாக எல்லா மனிதர்களிடம் பரவலாக காணப்படுகிற நோய். தூக்கமின்மை நோய் மிக நீண்ட நாட்களாகவோ அல்லது ஒரு சில மாதங்கள் வரை குறுகிய கால அளவிலோ என இரு வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீண்ட நாள் பாதிப்பு எனில் மனம் மற்றும் உடல் சோர்வை, உடல் எடைக் குறைவு அல்லது உடல் பருமன் மற்றும் சிந்திக்கும் அறிவாற்றல் திறனையும் குறைக்க காரணமாகிறது.

தூக்கம் வருவதை தடுக்கும் காரணங்கள் என்ன?

சரியான சாப்பாடு எடுத்துக் கொள்ளாது இருத்தல் அல்லது சத்துக்கள் இல்லாத உணவுகளை சாப்பிடுதல்

உடலுக்கு போதிய உடற்பயிற்சி செய்யாது அல்லது உடலுக்கு வேலை எதுவும் தராமல் இருப்பது.

மன ரீதியான, உணர்ச்சி பூர்வமான நிலைகளில் மன அழுத்தம் கவலை போன்றவைகள் தூக்கம் கெடுவதற்குரிய காரணங்கள்.

ஆஸ்துமா, அஜீரணக் கோளாறு, வலி போன்ற நோய் தாக்கத்தின் போது தூக்கம் வராமல் தடுக்கும்.

அதிக அளவு மருந்துகள் எடுத்து கொள்ளுதல் அல்லது வேறு உடல் நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து சரியான தூக்கம் வருவதை தடுக்கும்.

இரவுப் பணிகள் அல்லது இரவில் நீண்ட நேரம் விழித்தல், நேரம் தவறிய வேளையில் தூங்குவதும் ஒரு காரணமாகும்.

காபி, கோகோ, தேநீர் போன்ற பானங்களை படுக்கைக்குச் செல்லும் முன்பு அருந்துவது.

மொபைல் மற்றும் கணினியில் நீண்ட நேரம் வேலை செய்வது.

தூங்கும் அறையில் அதிக வெளிச்சம் தரும் விளக்குகள், மற்றும் சத்தம் தரும் கருவிகளினால் இடையூறு ஏற்பட்டு தூக்கம் கெடும்.

புதிய இடங்களில், ஒரு சிலருக்கு தூக்கம் வருவதில்லை.

தூக்கம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்.?

தினசரி படுக்கைக்கு செல்லும் நேரத்தையும், படுக்கையை விட்டு எழும் நேரத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் திட்டமிட்டுக் கொண்டு செயல்படுத்தவும். வார விடுமுறை நாட்களிலும் இதனை கடைபிடியுங்கள்.

பகல் நேரத் தூக்கத்தை தவிர்க்க வேண்டும். பகல் நேரத் தூக்கம், இரவில் சரியான, ஆழ்ந்த தூக்கத்தை தடை செய்யும். பகலில் தூங்காமல் இருக்க முடியாது என்று கூறுபவர் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்க வேண்டாம்.

மொபைல் மற்றும் கணினி செயல்பாடுகளை தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு அணைத்து விடவும்.

உறங்கச் செல்லும் வேளையில் காபி, மது, சிகரெட், சுருட்டு போண்றவைகளை தவிர்க்கவும். காபின் கலந்த பானங்கள், ஆல்கஹால், நிகோடின் போன்றவை தூக்கத்தைக் கெடுக்கும்.

படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்னர் அதிக அளவு உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். கொழுப்பு கலந்த உணவுகள் வயிற்றில் செரிமானம் ஆக நீண்ட நேரமாகும் கடின அதிககாரம் மற்றும் அமில வகை உணவுகள் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி தூக்கத்தைக் கெடுக்கும்

தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சியும், யோகா, பிரணாயாமம், மூச்சுப் பயிற்சி செய்து வருவது உடலை லேசாக்கி, ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.

தூக்கமின்மையைக் குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்துகள்

அஸ்வகந்தா

அஸ்வ என்றால் குதிரை என்று பெயர். அஸ்வகந்தா என்றால் குதிரையின் வாசனை என்று பொருள் தரும். இதன் இரண்டு முக்கியமாக என்னவெனில் அஸ்வகந்தா மூலிகையின் வேரில் இருந்து பெறப்படும் நறுமணமும், குதிரையின் சக்தியும் இதில் அம்சம் இருப்பதாகும். மனதை சாந்தப்படுத்தி, நம் நினைவுத் திறனை மேம்படுத்துகிறது. அஸ்வகந்தா மூலிகையானது மனிதனின் நரம்புகளை உற்சாகப்படுத்தி வலுப்படுத்துவதுடன் தூக்கத்¬யும் அளிக்கிறது.

ஜடாமான்சி

ஜடாமான்சி மனிதனின் நரம்புகளை அமைதிப்படுத்தி மனதை ஒரு நிலைப்படுத்தி தூக்கத்தை வரவழைக்க உதவுகிறது. நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளை சீராக்குவதுடன் நியூரோசிஸ் என்ற நரம்பு சார்ந்த வியாதியை குணப்படுத்தும் மருந்தாகிறது. மூளை நரம்புகள், கடத்தும் திறனை அதிகரித்து நினைவுத் திறனையும் மேம்படுத்துகிறது. மனிதனின் களைப்பு, அசதியைப் போக்கி ஆழந்த உறக்கத்தை கொடுக்கிறது.

சங்கு புஷ்பம்

வயதானவர்களுக்கு மூளையின் செயல் திறனை கூட்டவும், புத்துணர்ச்சி பெற்றுத் தர உதவும் மிகப் பழமையான மூலிகை சங்கு புஷ்பியாகும். சங்கு புஷ்பி மூலிகையானது மனிதனின் மூளைச் செல்களில் காணப்படும் நச்சுக்களை வெளியேற்றி, இரத்தக் குழாய்களை விரிவுபடுத்தி இரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதன் மூலம் தூக்கமின்மை நோயைக் குணப்படுத்துகிறது. மன ரீதியான சோர்வுகளை தடுத்து, மூளைக்கு ஓய்வு தருகிறது. இதனால் மூளையானது ஊக்கம் பெற்று உயர் மன அழுத்தம், தூக்கமின்மை, மனச் சோர்வைக் குணப்படுத்துகிறது.

சர்ப்பகந்தா

பல நோய்களைக் குணப்படுத்தும் ஒரே ஆயுர்வேத மூலிகையாக சர்ப்பகந்தா அமைகிறது. சர்ப்பகந்தா மூலிகையானது உடல் பருமன், உயர் மன அழுத்தம், தூக்கமின்மை, மனச் சோர்வு, களைப்பு போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. மனதை சாந்தப்படுத்தி தூக்கத்தை கொடுக்கிறது. இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்குவதுடன், இரத்த தட்டுக்கள், செரிமான மண்டலங்களில் உள்ள இரத்தம் சுத்தமாவதுடன் நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் மன நிலை சார்ந்த நோய்களுக்கும் மிகச் சிறந்த மருந்தாக சர்ப்பகந்தா பயன்படுகிறது.

வல்லாரை

தூக்கமின்மை மற்றும் மன ரீதியான பிரச்சனைகளை குணப்படுத்த மிகவும் முக்கியமான மூலிகை வல்லாரை ஆகும்.  மூளை மற்றும் மூளையில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெற மிகச் சிறந்த டானிக் வல்லாரையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மூளைக்கு சக்தியையும், நீண்ட செயல் திறனையும் வழங்குகிறது. தூக்கமின்மை, பரபரப்பு, களைப்பு, மன அழுத்தம் போண்றவைக்கு மிகச் சிறந்த மருந்துகள் வல்லாரையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எளிதில் தூக்கத்தை கொடுத்து மனதை சாந்தப்படுத்துவதில் துணை புரிகிறது.

நந்தியாவட்டை

புத்துணர்ச்சி தரும் வீரியமுள்ள மூலிகை இது. நரம்புகளை வலுப்படுத்தும். இரத்தத் தட்டுக்கள், மூட்டுகளில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. இந்திய வாளேரியம் என்று கூறப்படும். இந்த மூலிகையை தனியாக பயன்படுத்தக் கூடாது. வேறு சில மூலிகைகளுடன் கலந்து மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும்.

வீட்டு வைத்தியம்

ஒரு கோப்பை சூடான பாலில் ஏலக்காய் பொடி கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு அருந்தி வர மனது லேசாகும். நல்ல தூக்கம் கிடைக்கும். தினசரி காலை வெறும் வயிற்றில் ஒரு கோப்பை காய்ச்சாத பசும்பாலில் அதிமதுரம் ஒரு தேக்கரண்டி கலந்து அருந்தி வந்தால் தூக்கம் கண்களைத் தழுவும்.


Spread the love
error: Content is protected !!