ஸ்நேஹனாவும், அப்யங்கமும்

Spread the love

தொன்று தொட்டு இந்திய இல்லங்களில் உடலிலும், தலையிலும் எண்ணை தேய்த்து குளிப்பது வழக்கமான தொன்று. இந்த எண்ணைக் குளியல் சாதாரண பழக்கம். ஆயுர்வேதத்தில் எண்ணை தேய்த்து உருவி விடுதல், மசாஜ் செய்தலை ஒரு சிகிச்சை முறையாக பயன்படுத்துகிறது. இந்த சிகிச்சையில் சாதாரண எண்ணையில்லாமல் நோயாளியின் வியாதிக்கேற்ற சிறந்த மூலிகை எண்ணை தைலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆயுர்வேதத்தில் சிறந்த சிகிச்சைகளில் ஒன்றான பஞ்சகர்மாவுக்கு முன் செய்யப்படும் “பூர்வகர்மா” சிகிச்சையில் “ஸ்நேஹனா” எனப்படும் உடலுக்கு எண்ணைப்பதமிடும் சிகிச்சை செய்யப்படுகிறது. இதில் ஒரு அங்கம் அப்யங்கா எனப்படும் மசாஜ். ஸ்நேஹனா சிகிச்சை தேவையானால் தனியாகவும் செய்யப்படும்.

ஆயுர்வேதத்தின் படி, உடலின் ஸ்ரோதாக்கள் (நாளங்கள்), தோஷங்களிலும், மாசுகளாலும் பாதிக்கப்படும். அந்த தோஷங்களை எளிதில் திசுக்களிலிருந்து அகற்ற முடியாது. எண்ணை பதமிடுவதால், உராய்வுத் தன்மை குறைந்து ‘வழவழப்பு’ ஏற்பட்டு தோஷங்களை வெளியேற்ற முடியும். இதற்காக பயன்படுத்தப்படும் நெய் / எண்ணை மூலிகைகள் கலந்தவை. எண்ணை பசையினால் உடலின் வெளிப்புறத் தோலும், உட்புற அவயங்களும் பயன்பெறுகின்றன.

ஸ்நேகா (ஸ்நேஹனாவிற்கு பயன்படும் எண்ணை) வின் “பிறப்பிடம்” இரண்டு வகை. அவை

  1. ஸ்தாவரம் (அசையா பொருட்கள் – தாவர எண்ணைகள்) – சரகசம்ஹிதை 18 தாவர எண்ணைகளை பட்டியலிடுகிறது. அவற்றில் சில – எள், பிஸ்தா விதை, தான்றிக்காய், கடுக்காய், ஆமணக்கு விதை, இலுப்ப விதை, கடுகு, வில்வம், சேராங் கொட்டை, எலுமிச்சை, புங்க விதை, முருங்கை விதை முதலியன.
  • ஜங்கமம் (அசையும் பொருட்கள் – விலங்குகளிலிருந்து கிடைக்கும் எண்ணைகள்) – மீன்கள், மிருகங்கள், பறவைகள் இவை ஜங்கம எண்ணையில் பிறப்பிடங்கள். இவற்றின் பால், தயிர், நெய், இறைச்சி, வஸை (மாமிச ரசம்), மஜ்ஜை (எலும்புக்குள் உள்ள சோறு), இவை ஜங்கம எண்ணைகளாக கூறப்படுகின்றன.
  • ஸ்தாவர எண்ணைகளில் எள் எண்ணை உடல் வலிமைக்கும், எண்ணை பசையை உண்டாக்கவும் சிறந்தது.

ஆமணக்கு எண்ணை உடல் கழிவுகளை வெளியேற்றுவதற்கு சிறந்தது. ஸ்தாவர ஜங்கம எண்ணைகளில் சிறந்தவை நெய், எள் எண்ணை, வஸை, மஜ்ஜை – இந்த நான்கும் சிறந்தவை என்கிறது சரகசம்ஹிதை. எவ்வாறு துணி தண்ணீரை உறிந்து, அதிக நீரை வெளியேற்றுகிறதோ அவ்வாறே உயவுப் பொருட்களை (எண்ணை, தைலங்கள்) உடல் உறிந்து கொண்டு, அதிகப்படியான வெளித்தள்ளுகிறது சரகசம்ஹிதை.

எப்போதுமே ஆயுர்வேதத்திற்கு பிடித்த பொருள் – நெய், அதுவும் பசுந்நெய். நெய் தாதுக்களுக்கு வலிமையூட்டுகிறது. எரிச்சலை தணிக்கும். மேனிக்கு மிருதுத் தன்மையை தருகிறது. குரல், நிறம் இவற்றை தெளிவாக்கக் கூடியது. இந்த நான்கிலும் நெய் எல்லாப் பொருட்களுடனும் ஒத்துப்போவதால் சிறந்தது.

ஸ்நேஹனா சிகிச்சையில் எண்ணைகள் உள்ளுக்கும், வெளியிலும் கொடுக்கப்படும். உள்ளுக்கு கொடுக்கப்படும் க்ருதம் மற்றும் எண்ணை எப்போதும் மருத்துவ மூலிகைகளை கொண்டிருக்கும். இவற்றின் வழவழப்பான எண்ணை பசையினால் உடல் திசுக்களில் ஊடுருவி தோஷங்களை களைகின்றன.

வெளிப்பூச்சு ஸ்நேஹனா சிகிச்சை 12 வகைப்படும். அவை

1.         லேபம் – களிம்பு தடவுதல்

2.         உத்வர்த்தனா – உலர்ந்த பொடித்த மூலிகைளை உடலில் தடவுதல்

3.         முர்த தைலா – ஒற்றி எடுக்கும் மிருதுவான பஞ்சு மெத்தை போன்றவை சுற்றப்பட்ட குச்சி (Swab) யை மூலிகை தைலங்களில் நனைத்து தலை (அ) நெற்றி மேல் வைப்பது

4.         அக்க்ஷிதர்பனா – கண்களின் மீது எண்ணெய்யை தேங்க வைப்பது. கண்களை சுற்றி உளுத்த மாவு களிம்பினால் கரை கட்டி, அதில் மூலிகை எண்ணெய்யை ஊற்றி தேங்க வைப்பது. இதனால் கண்பார்வை தெளிவடையும். கண் நோய்கள் தவிர்க்கப்படும். நோயுள்ளவர்க்கு நிவாரணம் கிடைக்கும்.

5.         அப்யங்கா – மசாஜ்

6.         சம்வாஹனா – மிருதுவாக உடலை அழுத்துதல்

7.         கண்டூஷா – வாய் ‘கொப்பளிப்பது’. வாயில் எண்ணெய்யை அடக்கிக் கொள்வது. வாயிலடக்கிய மூலிகை எண்ணையால், பல்நோய்கள் விலகும். நாக்கின் சுவை அரும்புகள் ஆரோக்கியமடையும்.

8.         பரிசேகம் – எண்ணை, கஷாயங்களை உடல் மீது ஊற்றுவது

9.         மர்தானா – உடலை அழுத்துவது, விரல்களால் பிசைவது

10.       பாத காடா – கால்களால் உடலை அழுத்துவது

11.       கர்ண புராணா – காதுகளில் எண்ணை விட்டுக் கொள்வது காது வலி, கண் நோய்கள், தலை வலி போகும்.

12.       பிச்சு – பஞ்சு சுற்றிய குச்சியில் நெய் / எண்ணையை தடவுவது.

ஸ்நேக சிகிச்சையை மேற்கொள்ளக் கூடாதவர்கள்

1.         கபமும், மேதமும் அதிகம் உள்ளவர்கள்

2.         கபதோஷ அதிகரிப்பினால் மூக்கில் சளி ஒழுகுபவர்கள்

3.         ஜீரண சக்தி குறைந்தவர்கள்

4.         மயக்கமடைபவர்கள், தாகமுள்ளவர்கள்

5.         கர்ப்பிணிகள்

6.         வாய் மேலண்ணம் உலர்ந்து போதல்

7.         “அன்னத்வேஷம்”, பசியின்மை இருப்பவர்கள்

அப்யங்கம் (மசாஜ்)

அப்யங்கத்தின் பிரத்தியேக சிறப்பு – அதை ஆரோக்கியமானவர்களும் செய்து கொள்ளலாம். நோயுள்ளவர்களும் (சிகிச்சைக்காக) செய்து கொள்ளலாம். மகிழ்ச்சியூட்டும் மசாஜை தினமுமே நீங்களாகவே செய்து கொள்ளலாம். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போல, உடலுக்கு எண்ணை பதமிடுவது அவசியம்.

அப்யங்கா உட்கார்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும் செய்யப்படும். தடவப்படும் மூலிகை எண்ணை தோலினுள் சுலபமாக செல்லம். தாதுக்களை (திசுக்களை) அடையும். இதற்கு பயன்படும் மூலிகைகள் பொதுவாக பிரம்மி, அஸ்வகந்தா, சதவாரி, சங்கு புஷ்பம், துளசி, பிருங்கராஜ் போன்றவை. மேலும் சில மூலிகைகளை வைத்தியர், நோய்க்கேற்ப பயன்படுத்துவார். இந்த மூலிகைகளை எண்ணையில் இட்டு காய்ச்சப்படும். பிறகு அந்த எண்ணை வடிகட்டி பயன்படுத்தப்படும். அரோமா (நறுமண) சிகிச்சையாக, மசாஜ்ஜிற்கு, சந்தனத் தைலம், மல்லிகை, ரோஜா எண்ணைகளும் சேர்க்கப்படலாம்.

ஸ்நேஹனாவில் பயன்படும் எண்ணைகள்

நெய், நல்லெண்ணை, பாதாம் எண்ணை, ஆலிவ் எண்ணை, கடலெண்ணை, கடுகு எண்ணை முதலியவை. கீழ்க்கண்ட ஆயுர்வேத தயாரிப்புகளும் பயன்படுத்தப்படும்.

1.         மாஷாதி தைலம்

2.         மஹா மாஷாதி தைலம்

3.         பால தைலம்

4.         நாராயண தைலம்

5.         லக்ஷாதி தைலம்

6.         சந்தன பாலாக்ஷாதி தைலம் முதலியன.

ஸ்நேஹனா அப்யங்கத்தின் பயன்கள்

  1. வியாதிகள் வருமுன் காப்பதிற்கும், சரும பராமரிப்புக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவும்.
  • சில நாட்பட்ட நோய்களை நீக்க, சர்ம பாதிப்புக்களுக்காக   
  • பயனாகும்.
  • உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டி இளமையை காக்கும். திசுக்களை வலிமையாக்கும். ஏழு தாதுக்களையும் போஷாக்கு ஊட்டும்.
  • ‘வாத’ தோஷத்தை சரி நிலையில் வைக்கும்.
  • உடல் கழிவுகளை அகற்ற உதவும்.
  • களைப்பு நீங்கும்.
  • மசாஜ் இரத்த ஒட்டத்தை மேம்படுத்தும். நரம்பு நுனிகள், முடிச்சுகள் பலம் பெரும். நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
  • சர்மம் இளமையடைந்து பொலிவுறும்.
  • மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும். மன அழுத்தம் குறையும்.
  • இரவில் நல்ல உறக்கம் வரும்.

ஸ்நேஹனா சிகிச்சை சாதாரணமாக 7 நாட்கள் செய்யப்படும். நோய்களுக்கு சிகிச்சையாக செய்யும் போது 3 மாதங்கள் கூட தேவைப்படலாம்.

எண்ணெய் பருகுவதற்கான காலமும், தகுதியும்

வாதம், பித்தம் இவை அதிகம் உள்ளவர்கள், வெயிற்காலத்தில் இரவில் எண்ணெய் பருக வேண்டும். கபம் அதிகமுள்ளவர்கள், குளிர் காலத்தில் மேகமூட்டமில்லாத நேரத்தில் பகலில் கதிரவன் ஒளியில் எண்ணெய் பருக வேண்டும்.

முறை தவறி எண்ணெய் பருகுவதால் தோன்றும் தீமைகள்

வாதம் அல்லது பித்தம் அதிகம் உள்ளவர்கள் மிக்க வெயிற் காலத்தில் பகலில் பருகிய எண்ணெய், மூர்ச்சை, நாவறட்சி, பைத்தியம், காமாலை, இந்நோய்களைத் தூண்டிவிடும்.


Spread the love