ஜலதோஷத்தை அனுபவிக்காதவர்கள் யார்? நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான நோய் ஜலதோஷம். மழைக்காலத்தில, குளிர்காலத்தில், ஏன் ஒவ்வொரு பருவ மாற்றலின் போதும் ஜலதோஷம் தாக்கும். அதுவும் மழைக்காலத்தில், கிருமிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இதனால் தொற்றுநோயான ஜலதோஷம் எளிதில் பரவும்.
ஜலதோஷத்தை குணப்படுத்த முடியாது. வருமுன் காப்பதும் கடினம். ஏனென்றால், ஒன்றா, இரண்டா – 200 க்கு மேற்பட்ட வைரஸ்கள் ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன. தானே தோன்றி தானே மறையும் நோயானதால், ஜலதோஷத்தைப் பற்றி நகைச்சுவையாக “மருந்து கொடுத்தால் ஒரு வாரத்தில் குணமாகும், கொடுக்காமல் விட்டால் 7 நாட்களில் குணமாகும்!” என்பார்கள்.
ஜலதோஷம் என்றால் என்ன?
மூக்கு, சைனஸ் (எலும்புக்குழிகள்), தொண்டை, சுவாசக்குழாய்கள், இவற்றின் உட்படை (Lining) வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்டு உண்டாகும் தொற்று ஜலதோஷம்.
பலவைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன. அவற்றில் முக்கியமானது ரைனோ வைரஸ் (Rhino virus). இதிலேயே நூறு “டைப்” வைரஸ்கள் உள்ளன.
காரணங்கள்
· மேற்சொன்ன ரைனோ வைரஸ் தான் பெரும்பாலான ஜலதோஷத்திற்கு காரணம். இதர வைரஸ்களின் பட்டியல் – கரோனோவைரஸ் (Corono virus), மனித பாராஃப்ளூ வைரஸ் (Human para Influenza virus) அடினோ வைரஸ் (Adeno virus), முதலியன
பரவும் விதம்
· ஜலதோஷ நோயாளி தும்மினால், மேகப் புகை போல காற்றில், வைரஸ்கள் நீர்த்துகள்களாக மிதக்கும். பல மணி நேரம் நீடித்திருக்கும். பக்கத்திலிருப்பவர்கள் மற்றும் சுற்றிலும் உள்ள பொருட்களின் மீதும் வைரஸ் கிருமிகள் படியும். நோயாளியின் கைகளில் படிந்து, அவரின் கைகள் மூலமாக கூட அவருக்கும், மற்றவருக்கு பரவும். மாசு படிந்த கைகளால் தற்செயலாக முகத்தை தொட்டால், மூக்குக்குள் கிருமிகள் நுழைந்துவிடும். ஜலதோஷ கிருமிகள் படிந்து இருக்கும் பொருட்களை தொட்டாலும் போதும். கண்கள் மூலமாகவும் கிருமிகள் மூக்குக்குள் புகுந்து விடும்.
· ஜலதோஷ கிருமிகள் நோயாளி இருமினாலும் சுற்றுப்புற காற்றில் பரவும். இருமலை விட தும்பினால் அதிக கிருமிகள் வெளிவருகின்றன. பொது இடங்களில் மூக்கை சிந்தினாலும் கிருமிகள் பரவும்.
· தொற்று ஏற்பட்ட முதல் 3 நாட்களில் ஜலதோஷ கிருமிகள் மிக அதிகமாக பெருகும். இந்த 3 நாட்களில் தான் ஜலதோஷமுள்ளவர்கள் மற்றவர்க்கு பரப்புவது அதிகமாக ஏற்படும்.
· இவ்வாறு மூக்கில் நுழைந்த வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்க 1 லிருந்து 30 எண்ணிக்கைகள் போதும். வைரஸ் பெருகி மூக்கின் பின் பக்கமாக, அடினாய்டுகளில் படியும். தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தோன்ற 1 லிருந்து 3 நாட்களாகும்.
· உடலுக்குள் ஜலதோஷ வைரஸ்கள் நுழையும் வாசல் மூக்கு தான். கண்கள் வழியாகவும் கிருமிகள் நுழைந்து, கண்ணீரின் வடிகால்கள் வழியே மூக்கின் பின்பாகத்தை அடையும்.
அறிகுறிகள்
- மூக்கடைப்பு, சளி ஓழுகுதல். தொண்டை கர கரப்பு – இவை முதல் அறிகுறிகள்.
- தும்மல், கண்களிலிருந்து நீர் வடிதல்,
- இருமல்
- சளி ஓழுகும் மூக்கு, காதுகளில் தொற்று.
- தலைவலி, லேசான ஜுரம், உடல் வலி.
- ஜலதோஷ வைரஸ்கள் பல்கிப் பெருக, சுவாச மண்டலத்தில் உள்ள, சளி, கோழை நிறைந்த ஜவ்வுகள் உப்ப ஆரம்பிக்கின்றன. சளி சுரப்பு அதிகமாகிறது. உப்புவதால் காற்றுப்பாதை குறுகி விடும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். ‘சைனஸ்‘ பிரச்சனைகள் உண்டாகும். மூக்கில் சளி ஒழுக ஆரம்பிக்கிறது.
- சாதாரணமாக, ஜலதோஷம் தலைவலி, ஜுரம், இவற்றை உண்டாக்குவதில்லை. ஜுரம் 102 டிகிரி போனால் அது “ஃப்ளூ” வாக இருக்கலாம். அறிகுறிகள் குழந்தை, சிறுவர்களிடம் தீவிரமாக தெரியும்.
- ஜலதோஷம் வழக்கமாக வாட்டுவது 7 நாட்கள். சில சமயங்களில் 14 நாள்கள் வரை நீடிக்கும்.
- சளி கெட்டியாக பச்சை நிறத்தில் ஒழுகினால், அதில் “இறந்த” வைரஸ், திசுக்கள், பாக்டீரியாக்கள் இருப்பதால், ஜலதோஷம் முடியப்போவதின் அறிகுறி. முடிந்துவிடாமல் தொடர்ந்தால் “சைனஸ்” தொற்றாக இருக்கலாம்.
- ஜலதோஷம் மறைந்தாலும் சிலருக்கு இருமல் தொடரலாம்.
சிக்கல்கள்
· ரைனோ வைரஸால் ஏற்படும் ஜலதோஷம், ஆஸ்த்துமா நோயாளிகளில் ஆஸ்த்துமா தாக்குதலை தூண்டி விடும்.
· காது, சைனஸ்களில் பாக்டீரியா தொற்று ஏற்படலாம். இதனால் காது வலி, தலை வலி ஏற்படும்.
· ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட நாட்களில், நோயாளியின் நோய் தடுப்பாற்றல் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் வேறு நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
· நிமோனியா ஏற்படலாம்.
ஜலதோஷத்தை தவிர்க்க
· முதலில் சொன்னது போல் ஜலதோஷத்தை வராமல் தடுப்பது கடினம். ஒரு தடவை ஜலதோஷத்தால் தாக்கப்பட்டால் நோயாளி எந்த வைரஸ் தாக்கியதோ அதற்கு “இம்யூன்” ஆகிவிடுவார். அதாவது அந்த வைரஸ் மறுபடியும் அவரை தாக்க முடியாது. ஆனால் 200 வகை வைரஸ்கள் ஜலதோஷத்தை உண்டாக்கும். எனவே புதுப்புது வைரஸ்கள் மறுபடியும் தாக்கலாம்.
· உடலின் நோய் தடுக்கும் ஆற்றலை சீராக வைத்துக் கொண்டால், ஜலதோஷம் மட்டுமல்ல, வேறு நோய்களும் அண்டாது.
· சுத்தமான சுகாதார வாழ்க்கை முறையை கடைபிடிக்கவும். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
· விட்டமின் ‘C‘ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும் – குறிப்பாக குளிர்காலங்களில் காலையிலும், மாலையிலும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வரவும்.
· ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்காமல் இருப்பது.
சிகிச்சை
ஜலதோஷத்திற்கு என்று தனிப்பட்ட மருந்து என்று ஏதும் கிடையாது அறிகுறிகளின் உபாதையை குறைப்பதற்கும், சிக்கல்கள் வராமல் தடுக்க மட்டுமே மருந்துகள் தரப்படுகின்றன.
ஆன்டி – பையாடிக் மற்றும் ஆன்டி – வைரஸ் மருந்துகள் பலன் தராது தவிர இவற்றின் பக்க விளைவுகளும் அதிகம்.
ஆயுர்வேத அணுகு முறை
ஜலதோஷத்தை ஆயுர்வேதம் ‘பிரதிச்யாயம்‘ என்கிறது. இதில் ஐந்து வகைகளை சொல்கிறது.
1. வாத தோஷத்தால் உண்டாவது
2. பித்த சீர்குலைவால் வருவது
3. கபதோஷத்தால் உண்டாவது
4. இரத்த கோளாறுகளால் உண்டாவது
5. மூன்று தோஷங்களாலும் ஏற்படும் நாட்பட்ட ஜலதோஷம்.
ஜலதோஷத்தை தவிர்க்க ஆயுர்வேதம் பிரசித்தி பெற்ற “ச்யவன பிராச லேகியத்தை” பரிந்துரைக்கிறது. விட்டமின் ‘C‘ செறிந்த இந்த லேகியத்தை தினமும் 1 டீஸ்பூன் பால் அல்லது நீருடன் எடுத்துக் கொண்டு வந்தால் உடலின் நோய் தடுக்கும் திறன் அதிகரிக்கும். இதனால் உடலின் ஆரோக்கியம் சீராக இருக்கும். பல சிறப்பான மூலிகைகள், மருந்துகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. இவற்றை அறிந்து கொள்வதற்கு முன்பு, ஜலதோஷத்திற்கான வீட்டு வைத்திய முறைகளைப் பார்ப்போம்.
வீட்டு வைத்தியம்
- நீராவி நுகர்தல் – அடைபட்ட மூக்கை திறப்பதற்கு சிறந்த வழி ‘ஆவி பிடிப்பது‘. ஒரு கிண்ணத்தில் கொதிக்கும் நீரை விட்டு, அதிலிருந்து எழும் நீராவியை நுகரவும். துவாலையால் முழு நீராவியும் முகத்தில் / மூக்கில் படுமாறு, தலையை மூடிக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் மூலிகைகள் அல்லது ‘விக்ஸ்‘ போன்ற களிம்புகளில் சிறிதளவு போட்டும், நுகரலாம். வெங்காயம் அல்லது பூண்டை நசுக்கி போடலாம். யூகலிப்டஸ், லாவண்டர், எலுமிச்சை எண்ணை, ரோஸ்வுட் ஆயில் போன்றவற்றையும் கொதிக்கும் நீரிலிட்டு நுகரலாம்.
- சுக்கு, மிளகு, துளசி போன்றவற்றை சமஅளவு எடுத்து டீ ‘டிகாக்ஷன்‘ போல் டிகாக்ஷன் எடுத்து பருகி வர ஜலதோஷம் விலகும். இதை தினம் (ஜலதோஷம் இருக்கும் போது) 2 (அ) 3 முறை எடுத்துக் கொள்ளலாம்.
- காலையிலும், இரவும் சூடான பாலில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி, சிறிதளவு சுக்கு, மிளகு, திப்பிலி தூள்கள் சேர்த்து பருகி வர ஜலதோஷம் குறையும். வெறும் பால் + மஞ்சள்பொடி அல்லது நீர் + மஞ்சள் பொடி கூட போதுமானது. பாலில் குங்குமப் பூ சேர்த்து பருகினாலும் நல்லது.
- மூக்கில் சளி கொட்டினால் வெற்றிலைச் சாற்றில் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து எடுத்துக் கொள்ளலாம். தும்மலும் குறையும்.
- இஞ்சிப்பொடி, பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை – இவை ஒவ்வொன்றும் 1/2 தேக்கரண்டி எடுத்து, ஒரு சிட்டிகை கிராம்புப் பொடியுடன் சேர்த்து ஒரு கப் கொதி நீரில் இடவும். 10 நிமிடம் ஊறிய பின், வடிகட்டி நீரை குடிக்கவும். இதை தினம் 3 (அ) 4 தடவை குடிக்கலாம்.
- நாம் வழக்கமாக பருகும் தேநீரில் 3 (அ) 4 துளிகள் இஞ்சிச் சாறு விட்டு குடிக்கலாம். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.
- வெங்காயத்தின் ஒரு பெரிய துண்டை ஒரு கிண்ணத்தில் போட்டு, மிளகுப் பொடியை (ஒரு தேக்கரண்டி) தூவி இவற்றின் மேல் கொதிக்கும் நீரை விடவும். 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு இந்த நீரை இளம் சூட்டில் குடிக்கவும்.
- வெங்காய சூப்பும் நல்லது.
ஆயுர்வேத மூலிகைகள்
- நிலவேம்பு (Andrographis Paniculata) – இந்த மூலிகை ஒரு சிறந்த கிருமி நாசினி. உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும்.
- பூண்டு – இதில் உள்ள அல்லிசின் (Allicin) ஒரு இயற்கை ஆன்டி – பையாடிக். இரத்தத்தில் சீக்கிரமாக கலந்து, பிராங்கைடீஸ் மற்றும் இதர சுவாச மண்டல கோளாறுகளை குணப்படுத்தும். உடலின் நச்சுப்பொருட்களை போக்கும். இரண்டு பூண்டு “பற்களை” நசுக்கி நீரிலிட்டு காய்ச்சவும். கூடவே அரை தேக்கரண்டி மஞ்சள் பொடியையும் சேர்த்துக் கொள்ளவும். ஆறவைத்து, வடிகட்ட குடிக்கவும்.
- வெங்காயம் – இது பூண்டைப் போலவே செயலாற்றும். ஜலதோஷத்தின் போது, பூண்டு மற்றும் வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் ஜலதோஷ பத்தியமாக, நிவாரணம் கிடைக்கும்.
- இஞ்சி – இதிலிருக்கும் சில வேதிப்பொருட்கள், ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ்களில் ஒன்றான Rhinovirus ஐ எதிர்க்கும் திறனுள்ளவை.
- சீரகம் – ஒரு தேக்கரண்டி சீரகத்தை நீரிலிட்டு காய்ச்சவும். குளிர வைத்து வடிகட்டி குடிக்கவும்.
- இலவங்கப்பட்டை, துளசி, கிராம்பு, அதிமதுரம் இவைகள் ஜலதோஷ உபாதைகளை தணிக்க வல்லவை. இவற்றை பொடித்து, ஒவ்வொன்றில் 1 லிருந்து 4 கிராம் வரை எடுத்து கொதிக்கும் நீரில் சேர்த்து கலக்கி, ஆற வைத்து குடித்தால் ஜலதோஷ கபம் நீங்கும். அதிமதுரப்பொடியை தேனில் குழைத்து சாப்பிடலாம்.
- மஞ்சள் – மஞ்சள் துண்டை நல்லெண்ணையில் நனைத்து, அனலில் காட்டி, எரிய விடவும். அப்போது வரும் புகையை நுகரவும். அடைபட்ட மூக்கு திறக்கும்.
- கற்பூரவல்லியின் சாறு நல்லது. இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் சளி அடைப்பு நீங்கும். கற்பூர வல்லி இலையை பஜ்ஜியாக செய்து சாப்பிடலாம்.
உணவு முறைகள்
· ஜலதோஷத்தின் போது உணவு (குறிப்பாக குழந்தைகளுக்கு) பிடிக்காமல் போகலாம். அதிகமாக திரவ உணவுகளை சேர்த்துக் கொள்ளவும்.
· “சிக்கன் சூப்” மிகவும் நல்லது.
· சளி வெளியேற உதவுகிறது. வெங்காய சூப்பும் நல்லது.
· சமச்சீர் உணவை உட்கொள்ளவும்.
· இனிப்புகளை தவிர்க்கவும். அவை அமிலத்தை அதிகரித்து, ஜலதோஷத்தை நீடிக்கும்.
· சாக்லேட்டுகளையும் தவிர்க்கவும்.
· ஜலதோஷம், அதனுடன் வரும் ஜுரத்தால் (குறிப்பாக குழந்தைகளுக்கு) உடலின் நீர்மச்சத்து குறைந்து விடும். எனவே Electrolytes போன்றவற்றை கொடுக்க நேரிடும்.
· பால் சார்ந்த உணவுகளை தவிர்க்கவும். இவை சளியை கெட்டிப்படுத்தும்.
· கொழுப்பு நிறைந்த உணவுகளை ஒதுக்கவும். இவற்றால் அஜீரணம் ஏற்படும். உடலில் நச்சுப்பொருட்கள் தேங்கி விடும்.
· மது அருந்துவதை, புகைப்பதை நிறுத்தவும்.
இதர குறிப்புகள்
- அடிக்கடி கைகளை கழுவவும். சாதாரண சோப்பினால் கிருமிகளை அழிக்க முடியாது. இருந்தாலும் கைகளிலிருந்து கிருமிகளை “தள்ளிவிட” சோப் உதவும்.
- ஜலதோஷ தாக்குதலின் போது தேவையான அளவு ஒய்வு எடுத்துக் கொள்ளவும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். மற்ற சிறுவர்களுக்கும் “பரப்புவது” மற்றுமன்றி, நிமோனியா போன்றவற்றை மற்றவர்களிடமிருந்து தொற்றிக் கொள்ளலாம். காரணம் ஜலதோஷத்தின் போது, குழந்தைகளின் நோய் தடுப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் சுலபமாக பல தொற்று நோய்கள் குழந்தைகளை தாக்கும்.
- குளிரில் அலைய வேண்டாம். உடலை “கதகதப்பாக” வைத்துக் கொள்ளவும்.
- ஜலதோஷத்துடன் இருமும் போதும், தும்மலின் போது கைகளால் முகத்தை மூடிக் கொள்ள வேண்டாம். கைகளில் படிந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவும். அந்த கைகளால் நீங்கள் பல இடங்களை தொட்டால், உங்கள் ஜலதோஷம் பலருக்கு பரவும். ‘டிஷ்யூ‘ காகிதத்தால் மூக்கை மூடி, தும்மின பிறகு, டிஷ்யூ பேப்பரை எறிந்து விடவும். ஜலதோஷ வைரஸ்கள் பல மணி நேரம், ஏன், பல நாட்கள் கூட உயிருடன் இருக்கும். எனவே தும்மின பிறகு உங்கள் கைகளால், கதவுத் தாழ்ப்பாள்கள், குழாய்கள், டெலிபோன் முதலியவற்றை தொடுவீர்கள். இவற்றை தொடும் வேறு நபர்களுக்கும் வைரஸ் கிருமிகள் பரவும்.
- பிரசித்தி பெற்ற பழைய எழுத்தாளர் ‘கல்கி‘ கிருஷ்ணமூர்த்தி, ஜலதோஷம் பிடித்தால், வீட்டு வாசலில் உள்ள கார்ப்பரேஷன் குழாயில், தலையை நனைத்து கொள்வது வழக்கம் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அந்த அளவு “முரட்டு குளியல்” வேண்டாம். தலைக்கு குளிக்காமல், உடல் வரை வெந்நீரில் குளிக்கவும். தீவிர ஜலதோஷத்தின் போது டாக்டரிடம் கேட்டு குளிக்கவும். ‘நீராவி‘ குளியல் நல்லது. கால்களை சுடுநீரில் கழுவுவதால் ஜலதோஷம் குறையலாம். ஒரு மேஜைக்கரண்டி கடுகுப் பொடியை இரண்டு லிட்டர் சுடு தண்ணீரில் கரைக்கவும். 10 நிமிடம் இந்த நீரில் கால்களை அமிழ்த்தி வைக்கவும்.
- ஜேம்ஸ் பான்ட் (James Bond) கதைகளில், அவர் ஷவரில் குளிக்கும் போது மாற்றி மாற்றி தண்ணீரிலும், வெந்நீரிலும் குளிப்பாரென்று வரும். ஜலதோஷம் அதிகம் ஏற்படாத கோடைக்காலத்தில் நீங்களும் சிறிது நேரம் குளிர்ந்த நீரில் குளித்து, பிறகு வெந்நீரில் குளித்தால் நோய்களை எதிர்க்கும் சக்தி அதிகமாகும். ஆனால் மழை, குளிர்காலங்களில் இதை செய்ய வேண்டாம்.
ஆயுர்வேத மருந்துகள்
1. லக்ஷ்மி விலாஸ் ரஸ் சிறந்த மருந்து
2. சீதோபலாதி சூரணம்
3. திரிபுவன கீர்த்தி ரஸ்
4. மஹா லக்ஷ்மி விலாஸ் ரஸ்
5. வியோஷாதி வடி
6. ச்யவன பிராசம்
7. அம்லாக்கி ரசாயனம் முதலியன.
நாஸ்யம்
இவை தவிர ஆயுர்வேதத்தில் நாசியில் மருந்துகளை விட்டு, ஜலதோஷத்தை போக்கும் ‘நாஸ்ய‘ கிசிச்சையும் உண்டு.