சருமப் பாதுகாப்பில் மூலிகைகளின் சக்தி

Spread the love

சருமப் பாதுகாப்பில் நாம் அன்றாடம் சமையல் அறையில் வைத்துப் பயன்படுத்தும் இஞ்சி, பூண்டு, மஞ்சள், ஜாதிக்காய், கடுகு, புதினா போன்ற எளிதாக கிடைக்கும், யாரும் அறிந்த மூலிகைகளும் பயன்படுகின்றன. இயற்கை தந்த மூலிகைகளில், எவ்வித பின் விளைவுகளும் தராது சருமப் பாதுகாப்பிற்கு வெளிப் பூச்சு மருந்தாகவும், உள்ளுக்குள் உணவாகவும் சேர்க்கப் படுகின்றது. சருமத்திற்கு பயன் அளிக்கும் கார்போக அரிசி, வேம்பு, முல்தானி மட்டி, திருநீற்றுப் பச்சை, பப்பாளி, கீழாநெல்லி, கற்றாழை, ஆலிவ் போன்றவைகளும் விரிவான விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.

1. சந்தனம்: – குளிர்ச்சியூட்டும், முகப் பொலிவைக் கூட்டும். பருக்களை அகற்றும். இரத்தத்தை சுத்தம் செய்யும்.

2. செஞ்சந்தனம்: – குளிர்ச்சியூட்டும். சரும நோய்களுக்கு ஏற்றது. பருக்களை போக்கும்.

3. மஞ்சிட்டி: – பருக்கள், முகச்சுருக்கங்கள் இவற்றைத் தவிர்க்கும். முகம் பொலிவடையும்.

4. மஞ்சள்: – கிருமி நாசினி, பருக்கள் உட்பட பல தோல் நோய்களுக்கு மருந்தாகும்.

5. வசம்பு: – இதன் எண்ணெய் பாக்டிரியாவை எதிர்க்கும். பருக்களால் ஏற்படும் அரிப்பு, வலிகளைக் குறைக்கும்.

6. லோத்ரா: – பெண்களுக்கு ஏற்ற டானிக் ஆன லோத்ரா, மலச்சிக்கலை அகற்றும். பருக்களின் பக்க விளைவாக ஏற்படும் செரி, சிரங்குகளை தவிர்க்கும்.

7. மருது: – முகத்தை பருக்களிலிருந்து பாதுகாக்கும்.

8. நில வேம்பு: – சரும பாதிப்புகளுக்கு மருந்தாகும்.

9. பன்னீர்: – சுத்தமான ரோஜா பன்னீரால் முகத்தைக் கழுவி வர அழற்சி குறையும். பருக்களால் வரும் எரிச்சலைக் குறைக்கும்.

10. கருவேலம்: – இதன் பட்டை ‘எக்சிமா’வின் அரிப்பைக் குறைக்கும்.

11. கொன்னை: – தோலின் எரிச்சலைப் போக்க, இதன் இலையின் சாறு பயன்படுகிறது. படர் தாமரையின் அரிப்பைப் போக்கும்.

12. துளசி: – படர் தாமரை அரிப்பைப் போக்கும். பொதுவாகவே சரும நோய்களுக்கும் மருந்தாகும்.

13. காட்டு இலுப்பை: – இதன் மரப்பட்டையை களிம்பாக்கி, அரிப்பு இருக்கும் இடங்களில் தடவி வர நிவாரணம் கிடைக்கும். இலைகளின் மேல் நல்லெண்ணெய் தடவி பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்துக் கட்டலாம். இரண்டு மணிக்கு ஒருமுறை கட்டை மாற்ற வேண்டும்.

14. பரசமரம்: – இதன் விதைகளை அரைத்து எலுமிச்சைச் சாறுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ எரிச்சல் தரும் பருக்கள், கட்டிகள் குணமாகும். படர்தாமரை, சொறி, சிரங்கு, எக்சிமா, இவற்றின் அரிப்புகளும், நமைச்சலும் நீங்கும்.

15. அதிமதுரம்: – இதை வெந்நீரிலிட்டு அரைத்து பாலுடன் சேர்த்தும், சேர்க்காமலும் முகத்தில் பூசி வர முகம் பிரகாசமடையும்.

16. நாவல்: – இதன் விதைகளை தண்ணீரில் அரைத்துத் தடவி வரலாம். இதில் உள்ள அமிலம் பருவில் உள்ள சீழை சமன்படுத்தும்.

17. பாதாம்: – மலச்சிக்கலைப் போக்கும். பாதாம் எண்ணெய் சருமத்திற்குப் போஷாக்கு தரும்.

18. கற்பூரம்: – குளிர்ச்சியூட்டும். பருக்களின் வலியை, நமைச்சலைக் குறைக்கும்.

19. பப்பாளி: – மலச்சிக்கல் வராமல் தடுக்கும். பருக்கள் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். இரத்தத்தை அதிகரிக்கும். சுத்தப்படுத்தும். சீரணத்தை ஊக்குவிக்கும். பழக்களிம்பை பருக்கள் மேல் தடவி வர, அவை குறையும்.

20. கடுகு: – மிதமான மலமிளக்கி, ஜீரணமாவதற்கு உதவுவதால் மலச்சிக்கலால் பருக்கள் தோன்றுவதை தடுக்கும்.

21. ஆரஞ்சு: – ஆரஞ்சு தோலில் உள்ள எண்ணெய் சீழ் உண்டாக்கும் பாக்டிரியாக்களை அழிக்கும். அழற்சியைக் குறைக்கும். ஆரஞ்சு தோல்களை சேகரித்து உலர்த்திப் பொடி செய்து கொள்ளவும். அரைத்து, மாஸ்க் ஆகவும், டோனராகவும் உபயோகிக்கலாம். வெந்நீரில் தோல்களை இரவில் ஊற வைத்து, காலையில் அந்த நீரை முகம் கழுவ பயன்படுத்தலாம்;.

22. புதினா: – குளிர்ச்சியை உண்டாக்கும். சரும அலர்ஜியைக் குறைக்கும்.

23. குப்பைமேனி: – சொறி, சிரங்குகள் வராமல் தடுக்கும்.

24. நாயுருவி: – சருமத்தைக் காக்கும்.

25. கடுகு ரோகிணி: – சரும தோஷங்களைப் போக்கும். சருமத்தின் நீர் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும்.

26. வல்லாரை: – ஞாபக சக்தியை அதிகரிக்கும். சரும நோய்களைத் தீர்க்கும்.

27. புங்கம்: – சரும நோய்களுக்கு இதன் விதைகள் பலனளிக்கிறது.

சருமத்தைக் காக்கும் வேம்பு:

மக்கள் அன்றாடம் பயன்படுத்திய மருந்துப் பொருட்களில், வேப்பிலைக்கு சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய காலத்தில் இருந்தே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார். வட இந்தியாவில் மட்டுமல்லாது, தென்னிந்தியாவிலும் மருந்தாகப் பயன்பட்டதை தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் “ வேம்பும் கடுகும் போல ” என்று குறிப்பிடுகின்றது.

வேம்பு ஒரு இயற்கை கிருமி நாசினி. உடலில் நோயினை தடுக்கும் சக்தியினை அதிகப்படுத்துகிறது. பல ஆயுர் வேத, சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. அழற்சியினைக் குறைத்து, கிருமிகளைக் கொல்வதால், முகப்பரு, எக்சிமா, சோரியாசிஸ், தோல் அரிப்பு, சருமப் புண்கள் முதலிய சரும நோய்களுக்கு மருந்தாகிறது. பூஞ்சன (Fungus) நோய்களுக்கு வேம்பு நல்ல மருந்தாகும்.

வேம்பின் பயன்கள்:

  1. நாட்பட்ட முகப்பருக்களுக்கு, வேப்பிலையை அரைத்து பருக்களின் மேல் தடவவும். சருமத்தை உலர வைத்து, மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். இது மட்டுமன்றி பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.
  2. அடிக்கடி வேப்பிலைக் களிம்பை முகத்தில் தடவி வர முகம் இளமையாக பொலிவுடன் இருக்கும். தோலின் தன்மையை மேம்படுத்தும்.
  3. இரத்தத்தில் சேரும் நச்சுத் பொருட்களை நீக்கி, ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் சருமம் பளபளப்பாகும்.
  4. வேப்ப இலைகள், பொடி இவற்றை குளிக்கும் நீரில் இட்டு குளித்து வரலாம்.
  5. வேப்ப விதைகளிலிருந்து எடுக்கப்படும் கசப்பான வேப்ப எண்ணெய் தோல் வியாதிகளை எதிர்க்கும். பொதுவாகவே, வேம்பு எல்லா வித தோல் நோய்களுக்கும் ஏற்றது.
  6. வேப்ப எண்ணெயும், இலைச்சாறும் ஸோரியாசிஸ் நோய்க்கு மருந்தாகும். அரிப்பைக் குறைக்கிறது. வலியையும் குறைக்கிறது. வேப்ப எண்ணெய் எக்சிமா, படர் தாமரை, சொறி சிரங்குகளுக்கும் நல்லது.
  7. வேப்பிலையை நீர் விட்டு அரைத்து களிம்பாக கிண்டி, மேலுக்கு போட வீக்கம், நாட்பட்ட புண், தோலின் புண் நோய்கள் தீரும்.
  8. சொறி, சிரங்கால் அவதிப்படுபவர்கள், தினமும் வேப்பிலைகளைப் போட்டு காய்ச்சிய நீரால் உடல் முழுவதையும் கழுவி வர வேண்டும். வேம்பு எண்ணெயினால் தயாரிக்கப்பட்ட சோப்பைப் பயன்படுத்த வேண்டும். கொழுந்து இலைகளை மென்று உண்ணலாம்.

சருமத்தைக் காக்கும் கார்போக அரிசி:

இந்த பெயரைக் படித்தவுடன் ஏதோ ஒரு வகை அரிசி என்று நினைத்து விடாதீர்கள். இது ஒரு மூலிகை. பல கிளைகளுடன் வட்டமான இலைகள் கூடிய இச்செடி நேராக நிமிர்ந்து வளரும். பூக்கள் சிறிய நீல ஊதா வண்ணங்களுடையவை. பழங்கள் கரிய நிறமுடையவை.

கார்போக அரிசியின் முக்கியமான பயன் லுலீகோடெர்மா/விட்டிலிகோ (Leucoderma/Vitiligo) போன்ற தோல் நோய்களை எதிர்ப்பது தான். வெண்குஷ்டம் எனப்படும் லூகோடெர்மாவிற்கு காலம் காலமாக கார்போக அரிசி உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகைகளில் உள்ள ஸோராலென் (Psoralen) மற்றும் ஐஸோஸோராலின் (Isopsoralen) என்னும் பொருட்கள் வெண்குஷ்டத்தைக் குணப்படுத்தும் பண்புகளுடையவை. தோலுக்கு நிறமூட்டும் பழுப்பு பொருளை (Pigment) அதிகப்படுத்துகிறது. குஷ்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியது. குறிப்பாக விட்டிலிகோ என்ற தோல் வியாதிக்கு மருந்தாக பரவலாக உபயோகமாகிறது. விதைகளுடன் பசும் பால் விட்டு அரைத்து தேய்த்துக் குளித்தால் சருமத்திற்கு நல்லது. சொறி, சிரங்கு விலகும்.

  1. நரம்புகளுக்கு வலுவூட்டும் டானிக்காக பயன்படுகிறது. இருமலைக் குறைக்கும். ஜீரணத்திற்கு உதவும். மலச்சிக்கல், மூல வியாதிகளுக்கும் மருந்தாகும்.
  2. ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும்.

சருமத்தைக் காக்கும் திருநீற்றுப் பச்சை:

துளசியின் குடும்பத்தைச் சேர்ந்த திருநீற்றுப் பச்சை, துளசியைப் போலவே நமது நாட்டிலும், ஐரோப்பாவின் சில தேசங்களிலும் வணங்கப்படும் புனிதமான செடியாகும். திருநீற்றுப் பச்சை 50 செ.மீ. உயரம் வரை வளரும். சதுரமான தண்டுடன் செடியின் மேல் பாகத்தில் கிளைகளுடன் இருக்கும். பளிச்சென்று இருக்கும் பச்சை நிற இலைகள் நறுமணமுடையவை. பூக்கள் நீண்ட கதிரில் சுற்றி, சுற்றி வட்டமான அடுக்குகள் போல அமைந்து இருக்கும். செடியின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது.

திருநீற்றுப் பச்சையின் பயன்கள்:

1. இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயிலிருந்து கிடைக்கும் கற்பூரம் போன்ற ஒரு பொருள் மிகச் சிறந்த ஆன்டி செப்டிக் மருந்தாகும். இலைகளை நசுக்கி சாறு பிழிந்து காயங்களுக்கு இடலாம். இதன் அடிப்படை எண்ணெய் சரும வியாதிகளுக்கு நல்லது. தோலில் தடவ எக்சிமா, தோல் அரிப்பு குறையும்.

சருமம் காக்கும் பப்பாளி:

40 வயதினைத் தாண்டி விட்டால் பெண்களுக்கு கவலை தரும் விஷயம் சரும சுருக்கம் தான். தங்கள் தன்னம்பிக்கையையே இழக்கும் அளவுக்கு அவர்கள் தங்களுக்கு வயதாகி விட்டதோ என கவலைப் பட ஆரம்பித்து விடுகின்றனர். இயற்கை பெண்களுக்கு இக்குறையை போக்க பப்பாளியை வரமாக கொடுத்து இருக்கிறது. பப்பாளியைச் சாப்பிடுவதன் மூலம் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்குகின்றன. பப்பாளிப் பழத்தினை அரைத்து முகத்தில் பூசுவதன் மூலம் முகம் பளபளப்பு அடைகிறது. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின்பு சுடு நீரால் கழுவி வர முகச் சுருக்கம் மரி, முகம் அழகு பெறும். இதற்கு காரணம், முகத்தில் வலுவிழந்த செல்களுக்குப் புத்துணர்வு அளிக்கும் சக்தி பப்பாளியில் உள்ளது தான்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும். இலைகளைப் பிழிந்து எடுத்து வீக்கங்கள் மீது பூசி வர வீக்கம் கரையும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள்  மேல் தடவி வர புண்கள் ஆறும்.

சருமம் காக்கும் கீழாநெல்லி:

வீட்டு வைத்தியத்தியத்திலும், ஆயுர் வேதம், சித்த வைத்தியத்திலும் குறிப்பிடத்தக்க ஒரு மூலிகை கீழாநெல்லி. இந்த கீழாநெல்லிக்கு கீழக்காய் நெல்லி, இளஞ்சியம், அகதவாய், கீழ்வாய் நெல்லி, வித்துவேசரம், பூதாத்திரி, காமாலை விருத்தி என்கிற வேறு பெயர்களும் உண்டு. சுமார் அரை மீட்டர் உயரத்திற்கும் குறைவாகவே வளரும். ஈரப்பாங்கான எல்லா இடங்களிலும் வளரும் தன்மையுடையது. கீழாநெல்லியைப் பிழிந்து சாறு எடுத்து அதனைத் தலையில் தேய்த்துக் குளித்து வர முடி உதிர்வது நின்று விடும். கீழா நெல்லி, வெள்ளை மிளகு, பறங்கிப் பட்டை, ஆடு தின்னாப் பாளை, பெரியா நங்கை வகைக்கு சம அளவாக எடுத்து இடித்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தொடர்ந்து இரண்டு வேளை சாப்பிட்டு வர வெண் குஷ்டம், கருங்குஷ்டம், தோல் வியாதிகள், சிறு நீர் வழியில் புண், சர்க்கரை வியாதி குணம் பெறும்.

கீழா நெல்லி இலை, ஓரிதழ் தாமரை இலை, யானை நெருஞ்சில் இலை மூன்றையும் வகைக்கு ஒரு கைப் பிடி அளவு எடுத்து அரைத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் பத்து நாட்கள் காலையில் சாப்பிட்டு வர நீர்த்தாரை ரணம், வெள்ளை ஒழுக்கு குணமாகும். கீழா நெல்லி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் குணமாகும்.

கீழா நெல்லியின் சமூலம் ( வேர் உட்பட முழுச் செடியைத் தான சமூலம் என்று கூறுவார்கள் ) முழுச் செடியினை 30 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, 4 மிளகு சிதைத்து, இரண்டு தம்ளர் அளவு நீரில் போட்டு ஒரு டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி மூன்று வேளை குடித்து வர சுடு சுரம், தேக எரிச்சல் நீங்கும். கீழா நெல்லிக் காயுடன் கூடிய இலை, சிவனார் வேம்பு, குப்பை மேனி இவற்றை சம அளவாக எடுத்து வெயிலில் ஈரம் லேசாக உலர்த்தி, அதை மறுபடியும் பசுமை போகாத பதத்துடன் நிழலில் உலர்த்தி, இடித்துப் பொடியாக்கி சுண்டக்காய் அளவு எடுத்து ஒரு டம்ளர் பால் அல்லது வெந்நீரில் கலந்து 2 வேளை குடித்து வர படை, பற்று, சொறி, சிரங்கு, கரப்பான், பூச்சிக் கடி விஷம் நீங்கும். கீழா நெல்லிச் சாற்றை உள்ளுக்கு குடித்து வந்தாலும் முடி உதிர்வது நின்று விடும்.சருமம் காக்கும் கற்றாழை:

உடனடி சரும டாக்டர் என்று கூறப்படும் கற்றாழை கிராமங்களில் பரவலாகக் காணப்படுகிறது. கற்றாழையில் இருக்கும் ஆன்டி செப்டிக் ஏஜெண்டுகள் நம் தோலில் ஈரத் தன்மையை உண்டாக்கிப் பெரிதும் துணை புரிகின்றன. கற்றாழையில் வைட்டமின்கள், என்சைம்கள், தாது உப்புகள், அமினோ அமிலம் உள்ளன. வெப்பமான பகுதிகளின் வயல் வரப்புகளிலும், உயரமான வேலிகளிலும் வளரும் சதைப் பற்றான தாவரமாகும். காயகல்ப மூலிகை என்று கற்றாழையை சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. கற்றாழையைப் பயன்படுத்தினால் என்றும் இளமையாக வாழலாம் என தேரையர் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. கி.மு. ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்திய மக்களால் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. போரில் காயம் பட்ட வீரர்களின் காயங்களை ஆற்ற மகா அலெக்ஸாண்டர் கற்றாழையைப் பயன்படுத்தி இருக்கிறார்.

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்றாழை:

கற்றாழையின் நடுச் சதைப் பகுதியை எடுத்து, ஒரு பாத்திரத்தில் வைத்து இதில் சிறிது படிகாரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்ட காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு, தினசரி தலைக்கு தடவி வர கூந்தல் வளர்ச்சி மேம்படும்.

குளிர்ச்சி தரும் குளியல் எண்ணெயும் கற்றாழையில் கிடைக்கும்:

குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதி 250 கிராம் எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 நாட்கள் வைத்து எடுக்க எண்ணெய் பச்சை நிறமாக மாறி விடும். பின் அதனை வடிகட்டி தேவையான வாசனையைக் கலந்து கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்த குளிர்ச்சி தரும்.

ஆண்களுக்கு கற்றாழை வழங்கும் ஆப்டர் ஷேவ்:

ஆண்கள் ஷவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்களுக்கும், காயங்களுக்கும், தீக்காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாற்றை மேல் பூச்சாக பூசலாம்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் என எல்லா சரும நோய்களுக்கும் சிறிது கற்றாழைச் சாற்றை தினமும் மேல் பூச்சாக  தடவி வர நல்ல குணம் தரும். சருமத்தில் உள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்புச் சத்தைக் குறைக்கக் கூடிய புரதம் கற்றாழையில் உள்ளதால், முகத்திலுள்ள சுருக்கம் மற்றும் வயோதிக தோற்றத்தைக் குணப்படுத்துகிறது.

முக்கிய குறிப்பு:

கற்றாழை பெண்களின் மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும். எனவே கர்ப்பவதிகள் உள்ளுக்குள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சரும பாதுகாப்பில் ஆலிவ்:

உடலில் மறைந்துள்ள நோய்க்கிருமிகள் தான் புற்று நோயிலிருந்து இதய நோய் வரை பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகின்றன. ஒலிரோபெயின் என்ற கசப்பான பொருளானது பசுமையான இலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு பொருளாகும். ஒலிரோபெயின் பூஞ்சைக் காளான், பாக்டீரியா ஒட்டுண்ணி கிருமிகளுக்கு எதிராக வினைபுரியும். பழங்கால எகிப்தியர்கள், தங்களை ஆண்ட அரசர்களின் இறந்த உடல்களை கெடாமல் பாதுகாப்பிற்கு  ஆலிவ் இலை எண்ணெயைப் பயன்படுத்தினர். வாசனை திரவியங்கள் தயாரிக்க ஆலிவ் பூவானது சேர்க்கப்படுகிறது. ஆலிவ் எண்ணெய் மேனி அழகுப் பராமரிப்புப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

சருமம் காக்கும் வெப்பாலை:

சிறு மர வகையைச் சேர்ந்த வெப்பாலையானது ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் சோரியாசிஸ் நோயினை குணமாக்கும் மாமருந்தாக பயன்படுகிறது. இந்த மரம் அரளி குடும்பமாதலால் இலைகளிலிருந்தும், இலைக் காம்புகளிலிருந்தும் ஒடித்தவுடன் பால் வரும். இந்தப் பால் விஷத் தன்மை கொண்டது. பசும்பாலில் இந்தப் பாலின் சில துளிகள் கலந்தால் பசும்பால் தயிராக உறையாமல் பல நாட்கள் கெடாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சர்ம வியாதிகளில் அக்கி கட்டிகள் உடைத்து நீர் வெளியேற இதன் இலைகள் அரைத்துப் பூசப்படுகின்றன. வெப்பாலை மரப்பட்டை மற்றும் விதைகள் சோரியாசிஸ் நோய்க்குச் சிறந்த மேல் பூச்சு மருந்தாகும். வெப்பாலை மரப்பட்டையை பசு மாட்டின் சிறு நீரில் ( கோமியம் ) அரைத்து போட்டு வர எவ்வகையான சரும உபாதைகளும் குணமாகும்.

சோரியாசிஸ் என்னும் சரும நோய், நோய் எதிர்ப்புச் சக்திக் குறைபாட்டால் ஏற்படுகிறது. வெப்பாலை மரப்பட்டையிலிருந்து காய்ச்சி எடுக்கப்பட்ட வெப்பாலை எண்ணெய் தொடர்ந்து பூசி வர சரும வெடிப்புகள் மறையும். பின்னர் தழும்புகள் மறைந்து தோல் உதிர்வது முற்றிலுமாக மறைந்து விடும். வெப்பாலை தைலம் மூன்று தோஷங்களையும் ( வாத, பித்த, கபம் ) சமன் செய்யும் வல்லமை படைத்ததாகவும், கிருமிகளை எதிர்க்கும் அபூர்வ சக்தி கொண்டதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக் கூடியதாகவும் கருதப்படுகிறது.

சருமம் காக்கும் நெட்டிலிங்கம்:

உடலின் சருமத்தில் ஏற்படும் ‘படை’ மிகவும் அவஸ்தையானது. இந்த படை வந்தாலே வெயில் காலத்தில் உடலில் அரிக்க ஆரம்பிக்கும். இதற்கு காரணம் நமது தோலில் தோன்றும் வியர்வையின் ஈரப்பதத்தில் ஏராளமான பூஞ்சைக் கிருமிகள் வளர ஆரம்பிப்பது தான். பூஞ்சைக் கிருமிகளுக்கு,ஈரம் மிகவும் பிடித்த விஷயமாகும். அதுவும் துர்நாற்றத்துடன் தோலின் கொழுப்பு கழிவு கலந்து வியர்வையாக வெளியேறும். மனிதத் தோலை இவை பற்றிக் கொண்டு, வெகு விரைவாக இன விருத்தி செய்து வளர ஆரம்பித்து விடும். பூஞ்சையின் ஒவ்வாமை காரணமாக தோலில் தோன்றும் அரிப்பை கட்டுப்படுத்த நாம் சொறிவதால், தோலில் சிறிய இரத்தக் காயங்கள் உண்டாகி, இரத்தத்தில் பூஞ்சை கிருமிகள் செழிப்பாக வளர ஆரம்பிக்கும்.

பூஞ்சைக் கிருமிகளை அழிப்பதும், கட்டுக்குள் கொண்டு வருவதும் மிகவும் சிரமமான காரியம் தான். ஏனெனில் ஒருவரிடம் இருந்து அந்தக் கிருமிகள் அழிவதற்கு முன்பு குறைந்தது 10 பேருக்காவது தங்கள் இன விருத்திகளை பரிமாற்றம் செய்து கொண்டு தான் மறைகின்றன. எனவே தான் பூஞ்சையால் ஏற்படும படை வீட்டில் யாரேனும் ஒருவருக்கு கிருமித் தொற்று வந்தால், மற்ற அனைவருக்கும் பரவுகிறது.

இதே போல், விடுதியில் தங்கி படிப்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் பழைய, சுத்தமில்லாத ஈரத்துணியை மாற்றிப் போடுபவர்கள், பிறரின் அழுக்குத் துணியையும் சேர்த்து நன்றாக துவைத்துப் பயன்படுத்துபவர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு பூஞ்சை கிருமிகளின் தொற்று உண்டாகிறது. வெயில் காலத்தில் இது அதிகப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள், அசைவ உணவு அதிகமாக உண்பவர்களை பூஞ்சை கிருமிகள் அடிக்கடி பாதிக்கிறது.

பூஞ்சைக் கிருமிகளின் தொற்றைத் தவிர்க்க உடம்பை நன்றாக, சுத்தமாக தேய்த்துக் குளிக்க வேண்டும். கழுத்து, பிடரி, அக்குள், தொடையிடுக்குப் பகுதிகளில் நன்கு தேய்த்து சுத்தம் செய்வதுடன் உலர்ந்த துண்டால் ஈரம் தங்காமல் துடைக்க வேண்டும். வெயில் காலத்தில் காலை, மாலையில் தனித்தனி ஆடைகளை அணிய வேண்டும். படை உள்ளவர்கள் உடைகளை மற்றவர்கள் தவிர்க்க வேண்டும்.

பூஞ்சைக் கிருமிகளால் ஏற்படும் தொற்றானது, படை, படையாக பரவுவதால் பரவுவதற்கு முன்பே சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாகும். நமக்கு நன்கு அறிமுகமான நெட்டிலிங்க இலை மற்றும் பட்டையானது பூஞ்சைக் கிருமிகளை அழித்து படையினால் தோன்றும் புண்களை ஆற்றி விடும். நெட்டிலிங்க இலைகளை மை போல அரைத்து, பூஞ்சைக் கிருமியால் தோன்றிய அரிப்புள்ள இடங்களில் தடவி வர படை நீங்கும். நெட்டிலிங்க பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி அதனைக் கொண்டு படை உள்ள இடங்களில் தடவி வர படை நிறம் மாறும்.


Spread the love