நீரிழிவுக்கு ஆயுர்வேத மூலிகைகள்

Spread the love

நீரிழிவு நோய் எய்ட்ஸைக் காட்டிலும் கொடுமையானது என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். அது ஒரு நோயல்ல. நோய்களின் ஊற்று. உலகமெங்கும் பரவு வரும் நோயாக நீரிழிவு உருவெடுத்து வருகிறது. 2010 க்குள், புற்றுநோய், இதய நோய்களை விட, மனிதர்களின் இறப்புக்கு நீரிழிவு நோய்தான் முதல் காரணமாகப் போகிறது. நீரிழிவு நோயால் ஏற்படும் இறப்பு, நோயில்லாதவர்கள் விட இருமடங்கு அதிகம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில், வருங்காலங்களில் நீரிழிவு நோய் 170 சதவிகிதம் அதிகரிக்கும். நோயில்லாதவர்களை விட, நீரிழிவு நோய் உள்ளவர்களின் ஆயுட்காலம் 4லிருந்து 8வருடங்கள் குறைந்து விடும். இவை வெறும் பயமுறுத்தல்கள் அல்ல. நிதரிசனமான உண்மை. எனவே இதை சமாளிக்க, விழிப்புணர்வு அவசிய தேவை. வருமுன் காக்கும் வழிகளும், வந்த பின் காக்கும் முறைகளும் மக்களுக்கு போதிக்கப் பட வேண்டும்.

நீரிழிவு என்றால் என்ன?

வண்டிகளுக்கு பெட்ரோல் தேவை. அதே போல் உடலுக்கு எரிசக்தி தேவை. இந்த எரிசக்தி – க்ளூக்கோஸ். நாம் உண்ணும் கார்போ-ஹைடிரேட் உணவுகள் க்ளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. இவைகளை ரத்தத்தின் வழியாக உடல் செல்களுக்கு கொண்டு போக வேண்டும். ஆனால் செல்கள் ரத்தத்திலிருந்து க்ளுகோஸை நேரடியாக எடுத்து கொள்ளாது. செல்லின் பாதுகாப்பு பூட்டைதிறக்க சாவியாக கணையம் சுரக்கும் இன்சுலீன் ஹார்மோன் தேவை. இந்த இன்சுலீன் உற்பத்தி குறைந்தால் அல்லது செல்கள் இன்சுலீனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் க்ளுகோஸ் ரத்தத்திலேயே தேங்கி விடுகிறது. ஒரு பக்கம் எரிபொருள் குளுக்கோஸ் கிடைக்காததால் உடல் நலிந்து போகும். இன்னொரு பக்கம் ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகி பலப்பிரச்சனைகளை உண்டாக்கும். இது தான் நீரிழிவு வியாதி.

காரணங்கள்

இதான் நீரிழிவுக்கு காரணம் என்று அறுதியிட்டு சொல்லமுடியாததால் தான் நீரிழிவு நோயை பூரணமாக குணப்படுத்த முடியவில்லை. பாரம்பரீயம், சுற்றுப்புற மாசுபடிந்த சூழ்நிலை, போஷாக்கில்லாமல் போனால், உழைப்பில்லா வாழ்வு, தவறான உணவு முறை, அதிக உடல் பருமன், சில மருந்துகள் போன்ற பல காரணங்களை கூறலாம்.

பிரிவுகள்

பல விதமாக பிரிக்கப்பட்டாலும், நீரிழிவு நோயின் இரண்டு முக்கிய பிரிவுகள்

டைப்1 நீரிழிவு – இது தான் தீவிரமான நீரிழிவு வியாதி மொத்த நோயாளிகளில் 10% டைப் 1 நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரிவினர் தினசரி இன்சுலீனை ஊசிமூலம் உடலில் செலுத்திக் கொள்ளப்படும்.

டைப்2 நீரிழிவு – இன்சுலீன் ஊசி தேவைப்படாமல் மருந்துகளால் கட்டுப்படுத்திக் கொள்ளும் நிலை.

இதைத் தவிர கர்ப்பகால நீரிழிவு என்ற பிரிவும் உண்டு. இது கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும். குழந்தை பிறந்தவுடன் மறைந்து விடும்.

பரிசோதனைகள்

இரவு பட்டினிக்கு பிறகு காலையில் ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த ரத்த சர்க்கரை அளவு 125 மி.கி. அளவை தாண்டக்கூடாது. இரண்டு தடவை இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

பிறகு 75 கிராம் குளுக்கோஸை உட்கொண்டு, ரத்தத்தை பரிசோதிக்க வேண்டும். இந்த நிலையில், சர்க்கரை அளவு 200 மி.கி. அளவுக்குள் இருக்க வேண்டும்.

அறிகுறிகள்

அபரிதமாக சிறுநீர் போதல்

அடங்காத தாகம்

தீராத பசி

தீடிரென்று எடை குறைதல்

பலவீனம், சோர்வு

கண் பார்வை மங்குதல்

வாழ்க்கை முறை மாற்றம்

முதல் கட்ட சிகிச்சை – வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். உணவு கட்டுப்பாடுகள், சத்துள்ள ஆகாரம் இவையாகும். உடல் பருமன் உள்ளவர்கள் எடையை குறைக்க வேண்டும். உடற்பயிற்சி அவசியம். யோகா, ஆசனங்கள் இவற்றை செய்ய வேண்டும். ஸ்ட்ரெஸ்ஸை‘ (Stress) தவிர்க்க வேண்டும். தினசரி 30 நிமிடம் நடந்தாலே போதும். புகைப்பது, மது பானம் இவற்றை கைவிடவும்.

உணவு முறை

காய்கறி நிறைந்த உணவு, பாதாம் போன்ற பருப்புகள், பீன்ஸ், நடுத்தர அளவில் பழங்கள், தானியங்கள் இவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. நோயாளிகளுக்கு தகுந்த உணவை டாக்டரே சொல்லுவார். முக்கியமானது – இனிப்புகள் கூடாது. நார்ச்சத்து நிறைந்த உணவு பயனளிக்கும்.

மேற்கொண்டவை தவிர நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி இரத்த சர்க்கரை அளவை சோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஆயுர்வேதமும் நீரிழிவுநோயும்

நீரிழிவு நோய் கி.மு. 1500 வருடங்களுக்கு முன்பே, ஆயுர்வேதம் அறிந்த நோய். பிரேமஹா என்ற பெயரில் 20 வகைகள் சரகசம்ஹிதையில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் மதுமேகம்என்பது நீரிழிவு நோயை குறிக்கும். நீரிழிவின் காரணங்கள், அறிகுறிகள், தவிர நீரிழிவு வியாதியல்ல, வளர்சிதை மாற்றக் கோளாறு (Metabolic disorder) என்றவை 3500 வருடங்களுக்கு முன்பே நமது ஆயுர்வேத மருத்துவர்களுக்கு தெரிந்திருந்தது. இந்த உண்மை அலோபதி வைத்தியர்களுக்கு 100 வருடங்களுக்கு முன்பு தான் தெரிந்தது. சரக சம்ஹிதையில் மது மேகத்தின் காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைமுறை விவரமாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த விவரங்கள், தற்போது தெரிந்திருக்கும் விவரங்களுக்கு ஈடானது. எனவே நம் ஆயுர்வேத நிபுணர்களை பற்றி நாம் பெருமை அடையலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பு – பாதுகாப்பான மூலிகை மருந்துகளை கொடுப்பது மட்டுமில்லாமல் சரியான உணவுகளையும் பரிந்துரைப்பது. ஏன், சுஸ்ருதர் நீரிழிவு நோயாளிகள் கிணறு வெட்டுவது போன்ற உடல் உழைப்பை மேற்கொள்ள வேண்டும். தினமும் 4 மைல் நடக்க வேண்டும் என்றிருக்கிறார்! உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதையும் ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.

ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சிறந்த மூலிகைகள் பின் வரும் பக்கங்களில் கொடுக்கப்படுகிறது. பயனுள்ள மூலிகள் – இவை பக்க விளைவுகள் உண்டாக்காது. இந்த மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, உங்களின் வழக்கமான அலோபதி மருந்துகளை நிறுத்திக் கூடாது. முக்கியமாக இன்சுலீன் உபயோகிப்பவர்கள், இன்சுலீனை நிறுத்தவே கூடாது.

மூலிகைகள்

சிறுகுறிஞ்சான் (GYMNEMA SYLVESTRE)

இந்தியாவின் உஷ்ணப் பிரதேசங்களும் பயிராகும், கொடி வகையை சேர்ந்தது. 10 மீட்டர் உயரம் வளரக்கூடியது. வேலிகளில், புதர்களில் மட்டும். விதைகளினாலும் தண்டினாலும் பயிரிடலாம்.

பிற பெயர்கள்:-

சமஸ்கிருதம் – மேஷ ஷிருங்கி ஆங்கிலம் – Periploca of the woods, ஹிந்தி – குடமார்

முக்கிய பயன்:-

பல மொழிகளில் இதன் பெயர் – மது நாசினி. அதாவது சர்க்கரையை அழிக்கும்.

சக்தி வாய்ந்த நீரிழிவு எதிர்ப்பு மருந்து. 1920 லியே இதன் ரத்தச்

சர்க்கரையை கட்டுப்படுத்தும் குணம் தெரியவந்தது. ஆங்கில மருந்துகளை போல் உடனே சர்க்கரை அளவை குறைக்காமல், நிதானமாக செயல்படும் மருந்து. இன்சுலீன் சுரப்பை அதிகரிக்கும். ஒரு ஆராய்ச்சியில் இந்த மூலிகை உட்கொண்டவர்களின் இன்சுலீன் தேவை பாதியாக குறைந்தது கொண்டவர்களின் இன்சுலீன் தேவை பாதியாக குறைந்தது. சுகர்லெவல் 232 லிருந்து 152 ஆயிற்று. சிறுகுறிஞ்சான் இலைகளை பொடி செய்து, கரும்புச் சாற்றுடன் கலந்து வைத்து 18 மணி நேரம் கழித்துப் பார்த்த போது கரும்புச்சாறு தன் இனிப்புத்தன்மையை முழுவதும் இழந்துவிட்டது.

இதில் உள்ள ஜும்நெமிக் அமிலப் சர்க்கரைக்கு எதிரி. சுஸ்ருதர், சிறுகுறிஞ்சி இலைகள், நீரிழிவு நோய்க்கும், சிறுநீர் தொடர்பான நோய்களுக்கும் சிறந்த மருந்து என்று குறிப்பிட்டுள்ளார். சிறுகுறிஞ்சி இலைகள், நேரடியாக இரத்தத்திலுள்ள சர்க்கரை குறைப்பதுடன் கணையத்தையும் தூண்டி இன்சுலீன் சுரப்பை அதிகரிக்கும்.

இலவங்கம் (Cinnamomum Zeylanica)

பசுமையான இலவங்கச் செடி இதன் உலர்ந்த இலைகளும், பட்டைகளும், வாசனை திரவியங்களில் முக்கியமானவை. நல்ல வேறுபட்ட நறுமணமுடையவை. இந்த செடியை 2 . 5 மீ. உயரத்திற்கு மேல் வளர விடாமல், பராமரித்து, பட்டைகள் எடுக்கப்படுகின்றன.

பிற பெயர்கள்:-

சமஸ்கிருதம் – த்வாக், ஆங்கிலம் – Cinnamom Bark, ஹிந்தி – தால்சினி,

முக்கிய பயன்:-

நீரிழிவு வியாதிக்கு அருமருந்து.

இன்சுலின் எதிர்ப்பை உண்டாக்கும் என்ஸைம்களைசெயலிழக்க செய்யும். இதனால் டைப் – 2 நீரிழிவு வியாதிக்க நல்ல மருந்து.

இதை உட்கொண்டால் இன்சுலின் உடல் முழுவதும் சீராக பரவ உதவும். இதற்கு முன் தெரியாத உண்மை – இலவங்கப்பட்டை ரத்த சர்க்கரையை கணிசமாக குறைக்கிறது. உடலின் கொழுப்பு செல்கள் இன்சுலினை ஏற்றுக் கொள்ளும் படி செய்கிறது. இதனால் சர்க்கரை ஜீரணம் சுலபமாகிறது. முக்கியமாக, இலவங்கப்பட்டை – செல்கள் குளுக்கோஸை சக்தியாக மாற்றும் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள Methyhydroxy Chalcone Polymer (MHCP) என்னும் பொருள் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை 20 மடங்கு அதிகரிக்கிறது! இலவங்கப்பட்டையை உபயோகித்தவர்களுக்கு சர்க்கரை, ட்ரைகிளைசிரைட்ஸ், கொலஸ்ட்ரால் அளவுகள் குறைந்து இருந்தன.

நாவல் (SYZYGIUM CUMINI)

நம் நாடு முழுவதும் வளரும் மரம், பல வகைகள் இருந்தாலும், இரண்டு வகைகள், உருவம், அளவை பொறுத்து, முக்கியமானவை, பெரிய மர பழங்கள் சுவையானவை. பழம் உண்ணவம், கொட்டை, இலைகள், மரப்பட்டைகள் மருந்தாக பயன்படுகின்றன. சிறிய பழங்கள் நீரிழிவு நோய் சிகிச்சைக்கு பயன்படும்.

பிற பெயர்கள்:-

சமஸ்கிருதம் – ஜம்பு ஆங்கிலம் – Jambulu ஹிந்தி – ஜாமுன்

முக்கிய பயன்:-

நாவல் நீரிழிவு நோய்க்கு கொடுக்கப்படும் சக்தி வாய்ந்த மருந்து. நாவல் பழம் பிரத்யேகமாக நீரிழிவு நோய்க்கு, சக்தி வாய்ந்த மருந்து. விரைவாக இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. தவிர கணையத்தை சீராக்க பாதுகாக்கும். நாவல் பழம், பழச்சாறு, பட்டை, விதைகள் எல்லாமே நீரிழிவு நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இதன் விதையில் உள்ள ஜாம்போலின்‘, ஸ்டார்ச்சை சர்க்கரையாக மற்றும் செயல்பாட்டை கட்டுபடுத்த வல்லது. இதன் விதைகளிலிருந்து எடுக்கப்பட்ட சாறு இரத்தச்சர்க்கரையின் அளவை, கொடுக்கப்பட்ட 4 – 5 மணி நேரங்களுக்கு உள்ளேயே, 35% குறைத்துவிட்டது. அதுவும் ஒரே “டோஸில்”. நீரிழிவினால் ஏற்படும் “அடங்காதாகம்”, நாவல் பழ சாறு குடித்தால் தணியும்.

வெந்தயம்      (Trigonella Foenum)

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் வெந்தயம் பயிரிடப்பட்டிருக்கிறது. செடி இளம் பச்சை நிறத்தில் ஒன்று அல்லது 2 அடி வளரும். வெந்தய உற்பத்தியில் இந்தியா, ஆப்ரிக்கா முன்னிடத்தில் உள்ளன. இதன் கீரையும், விதைகளும், உணவில் மருத்துவத்தில் பல பயன்களை அளிக்கின்றன.

பிற பெயர்கள்:-

சமஸ்கிருதம் – மேதிகா, ஆங்கிலம் – Fenugreekஹிந்தி – மேதி,

முக்கிய பயன்:-

வெந்தயக் கீரையும், வெந்தயமும் நீரிழிவு வியாதிக்கு மருந்தாகும். நார்ச்சத்து நிறைந்தது. இலையை விட வெந்தயம் (விதைகள்) மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. கனடாவின் உணவு, சத்துணவு இலாகா, எலிகளை வைத்து நடத்திய ஆய்வுகளில், வெந்தயம் பொடி 21 நாட்கள் கொடுக்கப்பட்ட எலிகளில், சர்க்கரை அளவு குறைந்திருந்தது. இதன் படி வெந்தயம் டைப் 1 – நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனளிக்கும் என்று தெரிய வந்துள்ளது. கல்லீரலையும், சிறுநீரகத்தையும், வெந்தயப் பொடி சீராக இயங்க வைக்கிறது. நிறைந்த நார்ச்சத்துள்ள வெந்தயத்தில் டிரிகோனலின்என்ற அமிலத்தை எதிர்க்கும் “லவணசாரம்” என்ற பொருள் உள்ளது. இது ரத்தச் சர்க்கரையை குறைக்கும். வெந்தயம் இன்சுலீனை தராது ஆனால் குளூகோஸின் மற்றும் சோமோடோஸ்டடின் அடர்த்தி அதிகமாவதை குறைக்கும்.

பாகல்    (MIMORDICA CHARANTHA)

பாகற்காயின் தாயகம் இந்தியா. கொடி வகையை சேர்ந்தது. பல வகைகள் இருந்தாலும், 2 வகைகள் – குட்டை, நீண்டது – முக்கியமானவை.

பிற பெயர்கள்:-

சமஸ்கிருதம் – கரவெலா ஆங்கிலம் – Bitter gourd ஹிந்தி – கரேவா

முக்கிய பயன்:-

இங்கிலாந்து நாட்டில் நடத்திய சோதனையில் பாகற்காயில் இன்சுலின் போன்ற வேதிப் பொருள் (Plant Insulin) இருப்பது கண்டறிப்பட்டது. நீரிழிவுக்கு எதிரான முக்கிய மருந்து. பாகற்காய் இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட புரதம் – பி. இன்சுலீன் – ஆங்கில மருந்து டோல்புடானமட் (Tolbutamide) இனணயானது. ஆய்வுகளின்படி டைப் – 1 டயாபிடீஸில் கூட, பாகற்காய் சாறு, இன்சுலீன் போல் வேலை செய்கிறது. பி – இன்சுலீன் கணையத்தை புதுப்பிக்கிறது. இன்சுலீனை உற்பத்தி செய்யும் பீடா செல்களை குணப்படுத்தி உயிர்ப்பிக்கிறது. நமது உடல், கார்போ-ஹைடிரேட் கிடைக்காத போது, அமினோ அமிலங்களிலிருந்து (கொழுப்பு அமிலங்கள்) குளுகோஸை, கல்லீரல், சிறுநீரகங்களிலிருந்து எடுத்துக் கொள்ளும் இதை “குளுகோனியோஜெனிசஸ் (Gluconeogenesis) என்பார்கள். பாகற்காயில் உள்ள “சாரன்டின்” (Charantin) என்ற பொருள் இந்த குளுகோனியே ஜெனிசஸ்ஸை தடுக்கிறது. வயிற்றிலிருந்து குளுகோஸை எடுப்பதையும் குறைக்கிறது.

நெல்லி(EMBLICA OFFICINALS)

இந்தியா, சீனா, வியாட்நாம் நாடுகளில் காணப்படும். தொன்று தொற்று உபயோகித்து வரப்படும் நெல்லி அமிர்தம் எனப்படுகிறது. நெல்லிமரம்.

பிற பெயர்கள்:-

சமஸ்கிருதம் – அமலக்கா ஆங்கிலம் – Indian goose – bevry ஹிந்தி – அம்லா

முக்கிய பயன்:-

நீரிழிவு வியாதிக்கு நிருபிக்கப்பட்ட மருந்து. நெல்லிக்காயின் அபரிமிதமாக அஸ்கோர்பிக் அமிலம் (வைட்டமின் C) மற்ற செயற்கை விட்டமின் C யை விட சுலபமாக, சீக்கிரமாக உடலில் ஏற்றுக்கொள்ளப்படும். 10 கிராம் நெல்லிக்காயின் 600 – 900 மி.கி. விட்டமின் C உள்ளது. நெல்லி டயாபிடீஸால் ஏற்படும் கண் பாதிப்புகளை தடுக்கிறது. கணையத்தை தூண்டி, இன்சுலின் சுரக்க உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியமான மருந்த. மூன்றே நாளில் ரத்தத்திலுள்ள கிருமிகளை கொல்லும் செல்களை இரண்டு மடங்காக்கும். கொலஸ்ட்ராலை குறைப்பதால் இதயத்திற்கு நல்லது. நெல்லிக்கனியின் விதையும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து நெல்லி முதுமையை தடுக்கும் டானிக் நெல்லி காலை வேகவைத்தாலும், வதக்கினாலும், உலரவைத்தாலும், ஊறுகாயாக போட்டாலும் அதிலிலுள்ள விட்டமின் Cஅழிவதில்லை.

வில்வம்  (Aegle Marmelos)

சிவபெருமானுக்கு உகந்த மரம் வில்வம். பெரிய மரமாக வளரும். காய்கள் பச்சை நிறமாக, பழுத்ததும் மஞ்சள் நிறமாகவுமட இருக்கும். பழம் உருண்டு, திரண்டு 5 லிருந்து 15 செ.மீ. பருமனிருக்கும். உள்ளே மஞ்சள் சிகப்பு நிற “கோது” இருக்கும். பழங்கள் நல்ல நறுமணத்துடன் சுவையாக இருக்கும். யஜீர் வேதத்தில் வில்வம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிற மொழி பெயர்கள்:-

சமஸ் கிருதம் – பில்வா, ஹிந்தி – பேல்,

முக்கிய பயன்:-

நீரிழிவு நோயிலிருந்து நிவாரணம்

வில்வ இலையிலிருந்து எடுக்கப்பட்ட பொருள் நீரிழிவை போக்கும்தன்மையைபரிசோதிக்கஓர்ஆராய்ச்சிமேற்கொள்ளப்பட்து. எலிகளுக்கு Alloxan கொடுக்கப்பட்டு நீரிழிவு நோயை உண்டாக்கப்பட்டது. ஒரு பிரிவுக்கு இன்சுலின் ஊசிகளும் மற்றவை பிரிவுக்கு வில் இலையின் சாறும் (வாய் வழியாக) கொடுக்கப்பட்டன. இந்த ஆராய்ச்சியின் படி, வில்வ இலைசாறு கல்லீரலின் Gly cogen ஐ குறைத்து சாதாரண நிலைக்கு கொண்டு வந்தது. ரத்தத்தில் யூரியா, ஸீரம் கொலஸ்ட்ரால் அளவுகளையும் குறைத்தது. இன்சுலின் கொடுக்கப்பட்ட எலிகள் அடைந்த நிவாரணங்களும், வில்வ இலைச் சாற்றினால் அடைந்த நிவாரணங்களும் ஒரே மாதிரி இருந்தன. இதனால் Insulin சிகிச்சைக்கு ஒப்பாக வில்வ இலை சாற்றின் வேலைப்பாடு அமைகிறது.

தண்ணீர் விட்டான்  (ASPARAGUS RACEMOSUS)

தண்ணீர் விட்டான் கிழங்கு, கெட்டியான கொடி – தாவரம். 1-2 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் பைன் மர இலைகள் போல சிறியவை. பூக்கள் வெண்மை நிறம் – சலாகை (Spikes) கொண்டவை. அதிகமாக வட இந்தியாவில் வளரும், இதன் விரல் போன்ற வேரும் இலைகளும் ஆயுர்வேதாவில் பயன்பட்டு வருகிறது. சதாவரி என்றும் அழைக்கப்படும் இந்த மூலிகை பல திறன் கொண்டவை.

பிற பெயர்கள்:-

சமஸ்கிருதம் – சதாவரி, ஆங்கிலம் – Asparagus, ஹிந்தி – சதாவரே, சதாவேரி..

முக்கிய பயன்:-

நீரிழிவை போக்கும்.

இதைப்பற்றிய பாடல்

நீரிழிவைப் போக்கும், நெடு நாட்சுரத்தையெல்லாம் ஊரை விடுத்தோடவுரைக் குங்காண் – நாரியரே! ஆ வெண்ணீர் பெய் சோம நோய் வெட்டையனல் தணிக்குந் தண்ணீர் விட்டான் கிழங்குதான்‘.

சதாவரி என்றால் நூறு கணவர்களை கொண்ட பெண்மணிஎன்று அர்த்தம். எனவே பெண்களில் மாதவிடாய் குழந்தையின்மை பிரச்சனைகளை தீர்க்கும். பெண்களின் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து.

ஆயுர்வேதம் மட்டுமல்ல, சித்த வைத்தியத்திலும் இந்த கிழங்கு, இலைகள், பழங்கள் எல்லாமே நீரிழிவு, ரூமாடிஸம், மூலம் போன்ற பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

வேம்பு(Azedirachta Indica)

வேப்ப மரம் தான் இந்தியாவின் முதல் மூலிகை என்றால் எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் வைக்க விரும்பும் மரம் வேப்ப மரம். வேப்பிலை காற்று போல் நல்லது. இல்லை என்பார்கள். மகிழ்ச்சியை தரும் மரம். இதன் வேர், பட்டை, பிசின், பழம், விதை, இலைகள் எல்லாமே பயனளிக்கும். பத்து மீட்டருக்கு மேல் வளரும் பெரிய மரம். வெள்ளை நிற பூக்களும், மஞ்சள் நிற பழக்களும் உள்ளது.

பிற பெயர்கள்:-

சமஸ்கிருதம் – நிம்பா, ஆங்கிலம் – Margosa Tree, தெலுங்கு – வேபாஹிந்தி – நீம்

முக்கிய பயன்:-

சிறந்த கிருமி நாசினி, பூச்சி கொல்லி பக்க விளைவுகள் இல்லாத சிறந்த நீரிழிவு மருந்து.

நீரிழிவு ஆராய்ச்சியின் படி, வேம்பு, டைப் – 2 நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான இன்சுலின் அளவை குறைக்க வல்லது. வேப்ப இலைகளில் தயாரிக்கப்பட்ட கேப்ஸீல்கள், ஒரு நாளுக்கு 2 எடுத்துக் கொண்டாலே, இன்சுலீன் தேவை குறைகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. வேப்ப இலை சாறு உட்கொண்டால் ரத்தத்தின் வெள்ளை, சிவப்பணுக்கள் அதிகரிக்கின்றன. தொன்று தொட்டு பயன்படும் பாதுகாப்பான, பக்க விளைவுகள் இல்லாத மூலிகை. நீரிழிவு நோயால் உண்டாகும் குறைபாடுகள், உயர் இரத்த அழுத்தம் இவற்றை வேம்பு குறைக்கும்.

கோவைக்காய் (Cephalandra Indica)

இந்தியாவின் பரவலாக காணப்படும். மற்ற காய்கறிகளை போல கோவைக்காய் சமையலுக்கு உகந்தது. இது கொடியினம், இதன் இலை, வேர், செடி, காய் அனைத்தும் மருத்துவ பயன்களை உடையவை.

பிற பெயர்கள்:-

சமஸ்கிருதம் – பிம்பா, ஆங்கிலம் –  ஹிந்தி – கந்தூரி

முக்கிய பயன்:-

நீரிழிவு வியாதிக்கு நிரூபிக்கப்பட்ட நிவாரணம்.

பெங்களூரில், டாக்டர் ரெபேக்கா குரியன் நடத்திய ஆராய்ச்சியில் 60 நீரிழிவு நோயாளிகளுக்கு (டைப் –2) கோவைக்காயிலிருந்து எடுக்கப்பட்ட சாறும், மருந்தில்லாத மாத்திரைகளும், மாறி மாறி கொடுக்கப்பட்டன.

90 நாட்களுக்கு பிறகு சோதித்து பார்த்ததில், கோவைச்சாறு உட்கொண்டவர்களின் இரத்தச் சர்க்கரை 16 – 18 சதவிகிதம் குறைந்திருந்தது.

கோவை இலைச்சாறு, 1 கிராம் அளவில் கொடுக்கப்பட்டால் 18% இரத்த சர்க்கரை குறைகிறது. இது அமெரிக்க ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில், சில வருடங்களுக்கு முன் நடத்திய ஆராய்ச்சியை நிரூபிக்கிறது. எலிகளை வைத்து நடத்திய ஆராய்ச்சியிலும் இது நிரூபணமாயிற்று.

ஆவாரை ( Cassia Auriculata)

இது சூரியனை விரும்பும் செடி – சிறியமரமாக 10 – 12 அடிவரை உயரம். சில இடங்களில் கூட்டமாக வளரும்.

பிற பெயர்கள்:-

சமஸ்கிருதம் – தெல போடகம், ஆங்கிலம் – Tanners casia, ஹிந்தி – தர்வார்,

முக்கிய பயன்:-

இதன் இலை பூ, காய், பட்டை, வேர் – இவை ஐந்து உறுப்புகளும் நீரிழிவு, நீர் வேட்கை போகும்.

ஆவாரை பஞ்சாங்க சூரணம் எனும் ரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்தி, டயாபடிஸ் சிகிச்சைக்கு பயன்படும் மருந்தில், ஆவாரை முக்கிய பங்கு வகிக்கிறது. அலோக்ஷான்என்னும் மருந்தை கொடுத்து, நீரிழிவு வியாதியை உண்டாக்கப்பட்ட எலிகளுக்கு, ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு, இன்சுலின் குறைபாடு டிரைக்ளைசிரைட்ஸ், கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாகின.

பிறகு 30 நாட்களுக்கு ஆவாரை சாறு ( ஒரு கிலோ எடைக்கு 5 மி.கி. சாறு என்ற அளவில்) கொடுக்க, சர்க்கரை லெவல்எல்லாமே திரும்ப, ‘நார்மல்ஆகியது. எல்லாவித சிறுநீர் வியாதிகளையும் (நீரிழிவு வியாதியையும் சேர்த்து) போக்கும். நீரிழிவின் நீர் வேட்கையை நீக்கும். ஆவாரை பிசினும் நீரிழிவுக்கு மருந்து.

மஞ்சள்  (Curcuma Longa)

மங்களகரமான மஞ்சள் ஆண்டுதோறும் வளரும் செடி. 60 – 90 செ. மீ உயரம் வளரும். இதன் நிலத்தடி கிழங்குகளே மஞ்சள் எனப்படும். தினசரி பயன்படுத்தப்படும் பொருள் மஞ்சள் இந்தியாவின் வெப்பமான பாகங்களில் பயிராகும் செடி

பிற பெயர்கள்:-

சம்ஸ்கிருதம் – ஹிரித்ரா, ஆங்கிலம் – Turmeric ஹிஞ்சி – ஹிந்தி,

முக்கிய பயன்:-

புதிய ஆராய்சியின் படி, குர்குமின் (மஞ்சளில் உள்ள வேதிப்பொருள்) இரத்தசர்க்கரை குறைகிறது. ஆயுர்வேதம் மஞ்சளை நீரிழிவு வியாதிக்கான பிரத்யேக மருந்தாக குறிப்பிடுகிறது.

மஞ்சள் அல்சீமர் வியாதி (மறதி வியாதி) க்கு அருமருந்து என்று

கண்டுபிடிக்கப்படும். எளிதில் கிடைக்கும் அற்புதமான மூலிகை. கல்லீரலை சுத்திகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவுகளை சரிப்படுத்தும் ஒவ்வாமையை தடுக்கும். ஜுரணத்தை ஊக்குவிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாக்டீரியாவை அழிக்கும் சுலபமாக சிறுநீர் விரிய உதவும் மூட்டு வியாதிகளுக்கு மருந்து. முகத்தில் தினமும் பூசி குளிக்க, முகம் பொலிவடையும்.

கொரியாவில் நடத்திய ஆராய்ச்சியின் படி, மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்த சர்க்கரையை கணிசமாக குறைக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தி(FICUS RACE MOSA)

அத்திமரம் 6 – 8 மீட்டர் உயரம் வளரும். இலைகள் முட்டை வடிவில் பெரியதாக இருக்கும். அத்திப்பழம் கொத்து கொத்தாக செடியின் அடிப்பகுதியில், தண்டில், அல்லது கிளைகள் பிரியுமிடத்தில் தொங்கியபடி இருக்கும். பழங்கள் பழுத்தவுடன் உட்புறம் சிகப்பாகவும், விதைகள் ஆலம்பழம்போல சிறியதாக காணப்படும். அத்திப்பூக்களை காண்பதரிது. அதனால் அத்தி பூத்தால் போல் என்பது வடிக்கிலிருக்கிறது. ஒரு மரத்தில் சுமார் 180 – 300 கனிகள் கிடைக்கும். கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை பதப்படுத்தலாம்.

பிற பெயர்கள்:-

சமஸ்கிருதம் – உதும்பரா ஆங்கிலம் – country fig ஹிந்தி – குலார்

முக்கிய பயன்:-

      இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.

·     நீரிழிவு நோய்க்கு கொடுக்கப்படும் அலோபேதிக் மருந்துகளை இணையாக, அத்தி, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

·     அத்திபால் நீரிழிவுக்கு நல்லது. நீரிழிவினால் உண்டாகும் பிளவைக்கு பாலை பற்றுப் போட்டால் குணமாகும்.

துளசி (OCIMUM SANCTUM)

இந்தியாவுக்கே, உரித்தான துளசி, ஆயுர்வேத வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலிகை. நறுமணமுடைய துளசி, புனிதமானதாகவும், பூஜைக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது. விஷ்ணு கோவில்களில் தவறாமல் காணப்படும் செடி. பல கிளைகளுடன், சிறிய, மென்மையான இலைகள் கூடியது. ஏறக்குறைய 2 – 3 அடி உயரம் வளரும். இதில் துளசி, கருந்துளசி, செந்துளசி, நிலத்துளசி, நற்றுளசி, கல்துளசி, முள்துளசி என பல வகைகள் உண்டு.

பிற பெயர்கள்:-

சமஸ்கிருதம் – துளசி, ஆங்கிலம் – Holy basil  ஹிந்தி – துளசி.

முக்கிய பயன்:-

கணையத்தின் பீடா செல்களின் செயல்பாட்டை மேம்படுத்தும். இதனால் இன்சுலீன் உற்பத்தி அதிகமாகும்.

40 டைப் – 2 நீரிழிவு நோயாளிகளுக்கு, அவர்கள் எடுத்துக் கொண்டுவரும் டயாபடீஸ் மருந்துகளை நிறுத்தி (7 நாட்கள் வரை) பிறகு 5 நாட்களுக்கு துளசி இலைகள் மருந்தாக கொடுக்கப்பட்டன. பிறகு பாதிப்பேர்க்கு 2.5 கிராம் துளசி இலையின் பொடியும், மீதியுள்ளவர்க்கு எந்த மருந்துமில்லாத மாத்திரைகளும் கொடுக்கப்பட்டன. 4 வாரம் இந்த மாதிரி செய்யப்பட்டது. இதிலிருந்து, துளசியை தொடர்ந்து சாப்பிட்டவர்களுக்கு 134.5 மிகி/டெ.லி லிருந்து 99.7 ஆக இரத்த குளுகோஸ் குறைந்தது நிருபிக்கப்பட்டது. பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை.

துளசி, டயாபடீஸ் வியாதியில், இரத்தச் சர்க்கரை அளவை கணிசமாக குறைப்பது. (அலோபேதிக் மருந்துகள் போல) ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டது. அது மட்டுமல்ல – கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.

அஸ்வகந்தா (அமுக்கிராக்கிழங்கு)(Withania Somnifera)

ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரிதும் பயன்படும். மூலிகை அஸ்வகந்தா எனும் அமுக்கிராக்கிழங்கு தான். ஆப்ரிக்கா, இந்தியாவில் காணப்படும். 30-150 செ.மீ. உயரம் வளரும் செடி வெண்மை, பழுப்பு கலந்த நிறம், பூக்கள் பச்சை நிறம். பழங்கள் சிவப்பு நிறம் உள்ளவை.

பிற பெயர்கள்:-

சமஸ்கிருதம் – அஸ்வகந்தா, ஆங்கிலம் – Winter Cherry, ஹிந்தி – அஸ்கந்த்

முக்கிய பயன்:-

சிறந்த “ஆன்டி – ஆக்ஸிடென்ட்”. பெயருக்கு ஏற்ப, குதிரை போன்ற வலிமையை உண்டாக்கும். ஆண்மையை பெருக்கும். நரம்பு டானிக்.

வாரணாசி இந்து விஸ்வ வித்யாலயாவின் நடத்திய ஆராய்ச்சியின் படி, அஸ்வகந்தா சிறந்த ஆன்டி – ஆக்சிடென்ட். இதனால் ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு, வயதாதல் இவைகளை குறைக்கும். மனக்கோளாறுகளுக்கு நல்ல மருந்து. அதிக ட்ரைகிளைசிரைட் அளவை குறைக்கும். நீரிழிவினால் வரும் மனச்சோர்வை சரி செய்கிறது. பாலியல் கோளாறுகளுக்கு சிறந்த மருந்து.


Spread the love