சுவாசத்திற்கு ஆயுர்வேத மூலிகைகள் -2

Spread the love

கண்டங்கத்திரி

ஆயுர்வேத “தசமூலா” மருந்தில் உபயோகிக்கப்படும் கண்டங்கத்திரி, இந்தியா, ஸ்ரீலங்கா, தென்கிழக்கு ஆசியா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் வெப்பப் பகுதிகளில் பயிராகிறது. ஒரு சீரான முறையில் பயிரிடப்படுவதில்லை. தானாகவே, ஒரு காட்டுச் செடியாக வளர்கிறது.

தாவிரவியல் பெயர் – Solanum Surattense Burm F. Syn. – Solancum xanthocarpum, Syn. Solanum Maccanni sant.

Family – Solanaceae

சமஸ்க்ருத பெயர்கள் – கண்டகாரி, பண்டகி, சித்திரபாலா, கண்டகாரிகா முதலியன.

ஹிந்தி – கடேலி, கட்டாய்

தமிழில் இதர பெயர்கள் – சுட்டூரம், உதரவாணி.

பயன்படும் பாகங்கள்

வேர், தண்டு, இலை, பூ, பழம்.

கண்டங்கத்திரி முட்கள் நிறைந்த பிரகாசமான பச்சை நிற சிறு மூலிகை செடி. தண்டு வளைந்து, நெளிந்து இருக்கும். பல கிளைகள் உடையது. இலைகள் 5 லிருந்து 10 செ.மீ. நீளமும் 2.5 லிருந்து 5.7 செ.மீ. அகலமும் உடையவை. பூக்கள் குட்டையான மஞ்சரித் தண்டு (Peduncle), குட்டையான காம்புகள் மலரும்.

குணமும் பயன்களும்

வேர் காரமாகவும், கசப்பாகவும் இருக்கும். பசியை தூண்டும். மலமிளக்கி, பிராங்கைடீஸ், ஆஸ்துமா, ஜுரம், வாதம், கபம், சிறுநீர் தொற்றுகள் மற்றும் இதய நோய்களில் மருந்தாக உதவும். ஆயுர்வேத தசமூலம் மருந்தில் கண்டங்கத்திரி வேர் சேர்க்கப்படுகிறது.

கபத்தையும், சளியையும் நீக்கும். வேரின் கஷாயத்தை எடுத்து அத்துடன் கிராம்பு, மிளகு, தேன் சேர்த்து கொடுக்க இருமல் குறையும். பாறை உப்பு, பெருங்காயத்துடன் சேர்த்து கண்டங்கத்திரி வேரின் கஷாயத்தை கொடுத்து வர தொடர் இருமலிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

தண்டு, பூக்கள் மற்றும் பழங்கள் கசப்பானவை. பழங்களின் சாறு தொண்டைப் புண்களை போக்கும். ஜுரத்தை நீக்கும். ஆஸ்துமாவிற்கு நல்ல மருந்து.

ஒரு ஆயுர்வேத மருந்தில் (Arkadhi) கண்டங்கத்திரி சேர்க்கப்படுகிறது. இந்த மருந்து ஜுரம், நாட்பட்ட பிராங்கைடீஸ், மற்றும் மார்ச்சளியால் வரும் ஜுரங்களை நீக்கும்.

இஞ்சியும், சுக்கும் (Dried Ginger)

உலர்ந்த இஞ்சியே சுக்குஎனப்படுகிறது. இஞ்சியின் தாவரவியல் பெயர் Zingiber officinale சமஸ்கிருதத்தில் “நாகரம்” என்றும், இந்தியில் சோன்த்எனவும் சொல்லப்படுகிறது.

இஞ்சியின் மருத்துவக் குணங்கள் பிரசித்தி பெற்றவை. குறிப்பாக வயிற்றுக்கோளாறுகள், இருமல் முதலிய சுவாசக் கோளாறுகளுக்கு அருமருந்து.

பயன்கள்

·     சுக்கை மென்று சாரத்தை மாத்திரம் விழுங்க, தொண்டைக்கட்டு, குரல் கம்மல் நீங்கும். சுக்கை முதலாக கொண்ட மருந்துகள் – சௌபாக்ய சுண்டி லேஹியம், கண்டாத்திரி லேஹியம், நாகராதி பூஷணம், சுக்குச் சூரணம், தயிர் சுண்டி, சுக்ருத் தைலம் முதலியன.

·     தொண்டைக்கும், இருமலுக்கும் இஞ்சியும் சுக்கும் கை கண்ட மருந்துகள், சாதாரண தேநீருக்கு பதில் “இஞ்சி டீ” (அ) சுக்குக் காப்பி செய்து சூடாக குடிக்க குறைந்த பட்சம் தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.

·     இஞ்சி சாறுடன் தேன் சேர்த்து, கூட எலுமிச்சம் சாறும் சேர்த்தால் இருமல், சுவாச நோய்களை தவிர்க்கும் சிறந்த டானிக்ஆகும். நோய் தடுப்பு சக்தி பெருகும். ஜலதோஷம், கபம் விலகும்.

வால் மிளகு (Piper cubebs)

நறுமணம் நிறைந்த வால் மிளகு, அடர்த்தியான மரமேறும் கொடி. நன்றாக முதிராத காய்களை பறித்து உலர வைத்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. இக்காய்களின் காம்புகள் சேர்ந்து ஒட்டி வால் போலிருப்பதால் இதற்கு வால் மிளகுஎன்ற பெயர் வந்தது. தோல் சுருங்கி கறுத்து, உள்ளே வெளுத்து எண்ணெய் பசை உள்ளதாயும், காரமும் விறுவிறுப்பும் பொருந்தி நறுமணம் பெற்றதாக இருக்கும்.

இதன் பொதுவான குணங்கள்

·     வெப்பம் உண்டாக்கும், கோழையை அகற்றும். சிறுநீரை பெருக்கும். வால் மிளகுத்தூள் 260 மி.கி., கருவாப்பட்டை குடிநீர் 42 கிராம், இரண்டையும் கலந்து தினமும் 3 வேளை கொடுத்து வர இருமல் சளி நீங்கும். 260 மி.கி. வால் மிளகுப் பொடியை பாலில் கலந்து குடிக்க, தொண்டைக் கம்மல் நீங்கி குரல் தெளியும்.

·     வால் மிளகு, அதிமதுரம், திப்பிலி, சிற்றரத்தை, கடுக்காய் இவைகளின் தூள் சம எடை எடுத்துக் கலந்து, அதற்கு 15 மடங்கு நீர் விட்டுக் காய்ச்சி, நாலில் ஒன்றாக குறுக்கி, வேளைக்கு 50 லிருந்து 60 மி.லி. தினமும் 4 வேளை குடித்து வர, இருமல் நீங்கும்.

குரோசாணி ஒமம் (Hyoscyamus Nigrum)

குரோசாணி ஒம மூலிகையை ஒரு போதைப் பொருள் என்றே சொல்லலாம். ஆங்கிலத்தில் ஹென்பேன்‘ (பிமீஸீதீணீஸீமீ) எனப்படுகிறது. இந்த மூலிகை மனநோய்களின் வைத்தியத்தில் பயன்படுகிறது.

குரோசாணி ஒமம் கொடி வகையை சேர்ந்தது இதன் இலை பச்சையாகவும், மஞ்சள் நிறம் கலந்ததாய் இருக்கும். இதற்கு ஒரு வித மணமுண்டு. பூக்கள் இள மஞ்சள் நிறமாக இருக்கும்.

இந்த மூலிகை வெளிநாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில், இமய மலைச்சாரலில், 8000 முதல், 11,000 அடி உயரமுள்ள பிரதேசங்களில், தானாகவே காட்டுச் செடியாக வளர்கிறது.

இதன் பயன்படும் பாகம் – விதை

குரோசாணி – ஓமத்தின் குணங்கள் / பயன்கள்

ஓமத்தின் குணங்கள் / பயன்கள்

சாந்தப்படுத்தும் மூலிகை. மயக்கமூட்டும் வலி, வேதனைகளை குறைக்கும். நுரையீரலில் (சுவாச காசத்தில்) ஏற்படும் எரிச்சலை மிக நன்றாக சாந்தப்படுத்தும்.

குரோசாணி – ஓமம் மூலிகையை ஆயுர்வேத மருத்துவரின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோஷ்டம் (Saussurea Lappa)

கோஷ்டம் உயரமான, திடமான மூலிகைச் செடி. சில வகைகள் 5 லிருந்து 10 செ.மீ. உயரமும், சில 3 மீட்டர் உயரமும் வளர்கின்றன. ஈரமான திறந்த மலை சரிவுகளில் 2600 லிருந்து 3600 மீட்டர் உயரத்தில் வளரும். குளிர்ந்த சீதோஷ்ணமும் குறைந்த மழையும் உள்ள பிரதேசங்களில் விளையும், இந்தியாவில் காஷ்மீரில் விளைகிறது. இதன் வேர்களை எடுத்து துண்டாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

மருத்துவ பயன்கள்

1.     சீன மருத்துவத்தில் கோஷ்டம், இருமல், இருமலுடன் கூடிய கபம், ஜலதோஷம், ஆர்த்தரைடீஸ், பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு மருந்தாக தொன்று தொட்டு பயன்பட்டு வருகிறது.

2.     வேர்கள் ஆஸ்துமா, இருமலுக்கு நல்ல மருந்தாகும்.

3.     விந்துவை வளர்க்கும், வாத கபங்களை தணிக்கும்.

4.     மூன்று தோஷங்களையும் தணிக்கும்.

5.     நஞ்சு, அரிப்பு, இருமல், விக்கல், காய்ச்சல் ஆகியவற்றை போக்கும்.

6.     கோஷ்டத்தின் தூளை நெய், தேன் இவற்றுடன் கலந்து நாள்தோறும் காலையில் உட்கொண்டால் நோயின்றி நீண்ட நாள் வாழலாம்.

நஞ்சறுக்கும் நாய்ப்பாலை

நாய்ப்பாலை வருட முழுவதும் கிடைக்கும் கொடி மூலிகை. இந்தியாவில் தோன்றியது. காட்டுச் செடியாக தென்னிந்தியா மற்றும் கிழக்கிந்தியாவில் கிடைக்கிறது. பல காலங்களாக ஆஸ்துமாவுக்கு அருமருந்து என்று புகழ்பெற்றது. இதனால் நாய்ப்பாலைக்கு ஜி. ஆஸ்த்துமா என்று பெயர். நாய்ப்பாலை ஆஸ்துமாவை தவிர அலர்ஜி, ப்ராங்கைடீஸ், ஜலதோஷம் முதலிய சுவாச மண்டல கோளாறுகளையும் களையும்.

தாவிரவியல் பெயர் – Tylophora Asthmatic / Tylophora Indica

மருத்துவ பயன்கள்

1.     சுவாச மண்டலம் – நுரையீரல் பாதிப்புகள் ஆஸ்த்துமா, ப்ராங்கைடீஸ், அலர்ஜி, ரைனிடஸ் (ஸிலீவீஸீவீtவீs) முதலியவற்றை குணப்படுத்தும்.

2.     நோய் எதிர்ப்பு சக்தி – அலர்ஜி, ஆடோ இம்யூன் கோளாறுகள், ஆர்த்தரைடீஸ்.

3.     இருமலை போக்கும் சக்தி, வாந்தியை உண்டாக்குவது, ஜுரத்தை குறைக்கும். உடலின் நஞ்சுகளை அகற்றும் குணங்களை உடையது.

மேற்சொன்ன மருத்துவ பயன்கள் 1970 ம் ஆண்டில் நிரூபிக்கப்பட்டவை.

ஆனால் இந்த ஆய்வுகள் போதாதென்று மறுபடியும் நடத்திய ஆய்வுகளில் நாய்ப்பாலையின் நன்மைகள் புலப்படவில்லை. எனவே நாய்ப்பாலை ஆஸ்த்மாவுக்கு அருமருந்தாக ஆவதற்கு மேலும் சில விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறிப்பு

·     ஆய்வுகளில், நாய்ப்பாலையின் தன்மைகள் முழுதாக தெரியாததால், இந்த மூலிகையை குழந்தைகள், சிறுவர் சிறுமியர்கள், கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆகியோர்களுக்கு கொடுக்கக் கூடாது.

·     வீரியம் மிகுந்த மூலிகையானதால், தேர்ச்சி பெற்ற ஆயுர்வேத மருத்துவரின் கண்காணிப்பில், நாய்ப்பாலையை உபயோகப்படுத்த வேண்டும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை பல மருத்துவ குணங்கள் உடையது.

சளி, இருமல்

ஒரு டேபிள் ஸ்பூன் சூடான தேனுடன், 4 டீஸ்பூன் இலவங்கப்பட்டை பவுடரை கலந்து காலையிலும் மாலையிலும் 3 நாட்களுக்கு சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் Sinus தொந்தரவுகள் அகலும்.

தேன்

தேனில் விட்டமின் C, விட்டமின் ‘H’ போன்ற உயிர்ச்சத்துக்களும், கால்ஷியம், இரும்புச்சத்து, பொட்டாஷியம் போன்ற மணிச் சத்துக்களும் அமினோ அமிலங்களும் நொதிப் பொருள்களும் நிறைந்த அளவில் காணப்படுகின்றன. காய்கறிகள் சமைக்கப்படுகின்ற போது வீணாகின்ற இச்சத்துப் பொருட்களைத் தேனை உண்கின்ற போது சேதமின்றிப் பெற முடியும்.

இருமலுக்கும் வயிற்றுப் பொருமலுக்கும் ஏற்றது. இஞ்சியும் தேனும் என்பது பாட்டி மருத்துவம். இருமலுக்கு மட்டுமின்றித் தடுமனுக்கும் ஏற்ற மருந்து இது. வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேனைச் சேர்த்து படுக்கைக்குச் செல்லு முன் குடித்தால் உடல் இறுக்கத்தைத் தளர்த்தி நல்ல உறக்கம் உண்டாக்கும்.

வேலைக்குச் செல்வதற்கு முன்னர் ஒரு மேஜைக் கரண்டி தேன் அருந்தி விட்டுச் சென்றால் மன இறுக்கமும், பதட்டமும் இன்றிப் பணி செய்ய இயலும்.

நாம் உண்ணும் உணவு வகைகளிலும் குடிக்கின்ற குடிநீர் வகைகளிலும் இயன்ற அளவு செயற்கைச் சர்க்கரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்து தேன் சேர்த்துக் கொண்டால் உடனடி சக்தியுடன் உடல் நலமும் பெறலாம்.

அதிமதுரம்

பல நூற்றாண்டுகளாக வைத்தியர்களுக்கு பரிச்சயமான மருந்து அதிமதுரம். அதன் தாவரவியல் பெயர் : Glycyrrhiza Glabra ஆங்கிலத்தில் Liquorice. அதிமதுரம் நேராக வளரும் செடி. 1.5 மீ உயரம் வரை வளரும். அதன் வேர்க்கிழங்கு மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

சுவாச மண்டலத்தை பொருத்தவரை அதன் பயன்கள்

1.     தொண்டைப்புண்ணை ஆற்றும். ஒரு சிறு துண்டை வாயில் அடக்கிக் கொள்ள வேண்டும். அதன் சாறு தொண்டையில் இறங்கும். வெந்நீருடன் சேர்த்து கொப்பளிக்க வாய்ப்புண்கள் ஆறும்.

2.     இருமலுக்கு தேன், சீரகம், மிளகு சேர்த்த அதிமதுர கஷாயம், தொண்டைக்கு இதமளித்து இருமலை போக்கும்.

3.     ஆஸ்துமா, பிராங்கைடீஸ், அலர்ஜி மற்ற இதர சுவாச மண்டல பாதிப்புகளுக்கு அதிமதுரம் மருந்தாகிறது.


Spread the love