சுவாசத்திற்கு ஆயுர்வேத மூலிகைகள் -1

Spread the love

துளசி

வேம்பை மூலிகைகளின் அரசன் என்றால், துளசி மூலிகைகளின் அரசி, தொன்று தொட்டு மருத்துவத்தில் பயன்பட்டு வரும் துளசி, ஒரு புனிதச் செடியாக வீட்டில் வளர்த்து வணங்கப்படுகிறது. துளசி இல்லாத இந்திய வீடுகள் அபூர்வம். “துளசியின் இலைகள், பூக்கள், பழங்கள், வேர், கிளைகள் தண்டு எல்லாமே புனிதமானது. அது இருக்கும் மண் கூட புனிதமானது” என்கிறது 5000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பத்ம புராணம்.

துளசியின் தாவிரவியல் பெயர் – Ocimam Sanctum, ஆங்கிலத்தில் – Holy Basil. திருமாலுக்கு உகந்தது துளசி. துளசி செடி இல்லாத கோயில் இல்லை. கோயில்களில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில், எப்போதும் துளசி இலைகள் சேர்க்கப்படும். துளசி, வீடுகளில் “துளசி மாடம்” என்ற உயரமான தொட்டி போன்ற அமைப்பில் நடப்பட்டு, கவனமாக வளர்க்கப்படுகிறது.

உலர் இருமலுக்கு

ஒரு கைப்பிடி துளசி இலைகளுடன், சிறிய அளவில் தோல் சீவிய இஞ்சித் துண்டு, சேர்த்து மிக்ஸியில், களிம்பாக அரைக்கவும். களிம்பை (மிளகு அளவில்) சிறு உருண்டைகளாக உருட்டி, காற்றுப் புகாத பாட்டில் / டப்பாவில் போட்டு வைக்கவும். தேவைப்படும் போது இந்த உருண்டைகளை (ஒன்று (அ) இரண்டு) பொடித்து பொடியாக செய்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து தினமும் 3 வேளை 4 (அ) 5 நாட்களுக்கு தரவும். குழந்தைகளுக்கு இந்த மருந்து நல்லது. “ஈர” இருமலுக்கு 10 (அ) 12 துளசி இலைகளை அரைத்து ஜுஸைஎடுத்துக் கொள்ளவும். இதை தேனுடன் (1 தேக்கரண்டி) கலந்து தினமும் இரு வேளை 3 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளவும்.

·     10 (அ) 15 கருந்துளசி இலைகளை நசுக்கி, தேனுடன் சேர்த்து உண்ண, ஆஸ்துமா பாதிப்பை குறைக்கும்.

·     தொண்டைப் புண்ணுக்கு, துளசி கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தால் நிவாரணம் கிடைக்கும்.

திப்பிலி

தோற்றம்

செடி வகையை சேர்ந்தது. புதராக வளரும் வெற்றிலை போல் சிறிய இலைகளுடன் இருக்கும். இதன் கிளைகள் பல கணுக்களை கொண்டு வளரும். ஒவ்வொரு கணுவிலிருந்தும் சிறு கிளைகள் தோன்றி பழங்களை தாங்கியிருக்கும். திப்பிலி செடியின் பழம் அரிசித் திப்பிலிஎனப்படும். திப்பிலி பீகாரிலும், மத்தியப்பிரதேசத்திலும், உத்தராஞ்சல் (நைனிதால்) மிகுதியாக விளைகிறது. பீகாரில் விளையும் திப்பிலி சிறந்த தரமுடையது.

பயன்கள்

1.     திப்பிலி சுவாச மண்டல கோளாறுகளுக்கு நல்ல மருந்து. பிராங்கைடீஸ், இருமல், ஜலதோஷம் இவற்றை போக்கும். பொடிக்கப்பட்ட திப்பிலி பழங்களை ஒரு டம்ளர் பால் மற்றும் 4 டம்ளர் நீருடன் சேர்த்து, ஒரு டம்ளராக சுண்டும் வரை காய்ச்சவும். பிறகு இந்த கஷாயத்தை வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து ஒரு நாளில் 3 வேளை பருகவும். கபத்துடன் கூடிய இருமல் விலகும்.

2.     திப்பிலி தூளை வெல்லத்துடன் சேர்த்து உட்கொண்டால் இருமல், இழுப்பு குறையும்.

3.     திப்பிலி பசியை தூண்டும். அஜீரணம் போன்ற வயிற்று கோளாறுகளுக்கு நல்லது. சுக்குடன் சேர்த்து செய்யப்படும் சுக்கு திப்பிலி லேஹியம்பிரசித்தி பெற்றது.

4.     பல நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் திருகாட்டுமருந்தில் திப்பிலி ஒரு முக்கிய அங்கம்.

5.     திப்பிலி மூல மருந்தாக கொண்டு தயாரிக்கப்படும் சில மருந்துகள்

பிப்பல்யாத்யாவஸம்-க்ஷயம், குன்மம், இளைப்பு, பெருவயிறு இவற்றுக்கு       நல்லது.

6.     பிப்பிலி மூலாத்யரிஷ்ம்-க்ஷயம், இருமல், காய்ச்சல், மண்ணீரல் வீக்கம் இவற்றுக்கு கொடுக்கப்படும் மருந்து.

 

அரத்தை

பழங்காலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் – “அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்”? எவ்வளவு நாட்பட்ட கபம், இருமலானாலும் அரத்தை மூலிகையில் ஒன்றான சித்தரத்தை உடனே செயல்பட்டு கபத்தை வெளியேற்றும்.

சிற்றரத்தையின் தாவர இயல் பெயர் – Alpinia Galanga அரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை

1.     சிற்றரத்தை

2.     பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியைபோல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.

பொது குணங்கள் – கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.

மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங்காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.

சித்தரத்தை Bronchioles எனப்படும். இது நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது. பைலோ கார்பின் என்னும் மருந்தை ஊசி மூலம் ஏற்றி ஆஸ்துமா போன்றதொரு நிலையை ஏற்படுத்திய சில விலங்குகளுக்குச் சித்தரத்தை டிங்க்சர் (Tincture of A. Galanga) சிறு அளவில் கொடுக்கப்பட்டதும் மூச்சிழுப்பு (ஆஸ்துமா) சீரடைந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் கண்ட குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது.

சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். (Breath refresher). இதன் நறுமணம் காரணமாக இதைப் பலவகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு. ஒரு துண்டு சித்தரத்தையை வாயிலிட்டு மென்றால், தொண்டையில் கட்டும் கோழை, வாந்தி, இருமல் தணியும்.

பேரரத்தை இது உடல் வலி, அழலை, நஞ்சுகள் ஆகியவற்றை போக்கும்.


Spread the love