ஆயுர்வேதம் என்பது வாழ்க்கை முறை; வாழ்க்கை கலை. இந்த நோய்க்கு இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று பரிந்துரைப்பது மட்டும் ஆயுர்வேதத்தின் தன்மை அல்ல.. உணவு, உறக்கம், வேலை என அனைத்தையும் எப்படி அமைத்துக் கொண்டால் நோயே வராமல் வாழலாம் என்ற அருமையான நிரந்தர நிவாரணத்தை சொல்லித் தரும் அற்புதம், ஆயுர்வேதம்.
வருமுன் காக்கும் வைத்திய முறைகளுக்கு ஆயுர்வேதம் பிரசித்தி பெற்றது. ஆயுர்வேத ஆசான்களில் முக்கியமானவரான சரகர், நோய்கள் வராமல் தடுக்கும் உடல் சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். நோயற்ற வாழ்வே ஆயுர்வேதத்தின் தெளிவான லட்சியம். அதுவும் இந்த நோயற்ற வாழ்வை இயற்கையின் உதவியுடன் அடைய வேண்டும் என்பதும் ஆயுர்வேதத்தின் கோட்பாடு.
ஆயுர்வேத சிகிச்சை இரண்டு நோக்கங்களை கொண்டிருக்கிறது. ஒன்று, ஆரோக்கியமான மனிதனின் உடல் நலத்தை நிலை நிறுத்துவது. இதனால் அவனுக்கு வியாதி ஏற்படாமல் தடுப்பது. – இந்த தடுப்பு முயற்சி “ஸ்வஸ்த சம்ரக்சணம்” எனப்படும். இரண்டாவது நோக்கம் நோய்வாய்பட்டவர்களை குணப்படுத்துவது. இது “ரோக நிவாரணம்” எனப்படுகிறது.
மனிதன் எப்போது ஆரோக்கியமுள்ளவனாக இருக்கிறான்? சகிப்புத்தன்மை, வலுவான உடல், திடமான மனது, இவை கூடி இருக்கும் போது.
ஆரோக்கிய மனிதனின் அறிகுறிகள்
நல்ல பசி எடுக்கும். ஜீரண சக்தி நிறைந்திருக்கும்.
மலம், சிறுநீர் கழிதல் ‘நார்மலாக’ இருக்கும்.
நல்ல தூக்கமிருக்கும். உற்சாகம் ததும்பும்.
நல்ல நிறமும், நல்ல பளபளப்பான சர்மமும், போஷாக்கான உடலும் அமைந்திருக்கும்.
வருமுன் காத்தல்
வந்த பின் காப்பதை விட, வருமுன் காப்பது மேல். இதற்கான ஆயுர்வேத பரிந்துரைகள்:
சூரியன் உதயமாகும் முன்பு எழுந்திருக்கவும்.
காலைக் கடன்களை செவ்வனே கழிக்கவும்.
தினமும் இரு தடவை (உணவு உண்டபின்) புங்கமர குச்சியால் பல் துலக்க வேண்டும் என்கிறார் சரகர். ஈறுகளை காயப்படுத்தாமல் பல் துலக்க வேண்டும். நாக்கை வழிக்க வேண்டும். இதற்கு தங்கம், வெள்ளி, செம்பு, தகரம் இவற்றினால் ஆன நாக்கு வழிப்பானை பயன்படுத்த வேண்டும். இந்த காலத்தில் நாம் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் பல் துலக்குவது வழக்கம். இந்த வழக்கத்தையே தொடரலாம். ஆனால் பல் துலக்காமல் காபியோ, டீயோ குடிக்க வேண்டாம்.
ஒரு நாளைக்கு இரு தடவை குளிக்கவும். ஆடையின்றி குளிக்க வேண்டாம்.
குளித்த பின் அழுக்கான, கிழிந்த உடைகளை அணிய வேண்டாம். சுத்தமான சௌகரியமான ஆடைகளை அணிய வேண்டும்.
ஆபரணங்கள் அணிந்து கொள்வது, வைரம், முத்துக்கள் இவற்றை அணிவது மங்கலகரமானது.
வாசனை திரவியங்கள், மலர்கள் இவற்றை பயன்படுத்துவது நல்லது. இவைகள் சோகத்தை நீக்கி மனபலத்தையும், உடல்பலத்தையும், ஆயுளையும் அதிகரிக்கும் என்கிறார் சரகர்.
இரு வாரங்களில் ஒரு தடவை கை கால் நகங்களை வெட்டிக் கொள்ள வேண்டும்.
கால், பாதங்கள், மல ஜல அவயங்கள் இவற்றை சுத்தமாக வைத்திருக்கவும்.
எண்ணெயும் நன்மையும்
ஆயுர்வேதத்தின் படி தலையில் தினசரி எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். எண்ணெய், தலைமுடி நரைக்காமல், தலைவலி வராமல் பாதுகாக்கும். மண்டையை பலப்படுத்தி நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
நல்லெண்ணெயால் வாய்கொப்பளித்தல் பற்களை பாதுகாக்கும். பசி உண்டாகும். உணவு சுவை நன்கு தெரியும்.
எண்ணெய்ப் பசை உள்ள வண்டி நன்கு நகரும். அதே போல உடலின் அவயங்களில் எண்ணெய்ப் பசை நிறைந்தால் அவை நன்கு செயல்படும். எண்ணெய்ப் பசை தோலுக்கும் நல்லது. வாத நோய்களிலிருந்து பாதுகாக்கும். முதுமையின் பாதிப்பு தடுக்கப்படும்.
எண்ணெய் மசாஜ் உடலின் துர்நாற்றம், அரிப்பு, வியர்வை, அழுக்கு இவற்றை போக்கும்.
பெண்கள் தினசரி கண்களில் மை இட்டுக் கொள்ள வேண்டும்.
உணவு
ஆயுர்வேதம் சொல்வது:- குளிக்காமல், கைகளில் ஆபரணங்கள் அணியாமல், மந்திரங்கள் சொல்லாமல், கடவுள், முன்னோர்களை வணங்காமல் உணவு உட்கொள்ளக் கூடாது.
தவிர கை, முகம், கால் கழுவாமல், வாய் கொப்பளிக்காமல் உணவு உட்கொள்ளக் கூடாது.
சுத்தமில்லாதவர்கள் பரிமாறும் உணவை உட்கொள்ளக் கூடாது.
ஓர் இரவு பழமையான உணவு பதார்த்தங்களை உட்கொள்ளக் கூடாது. இதற்கு விதிவிலக்கு பழங்கள், சமைக்காத காய்கறிகள், பாதுகாக்கப்பட்ட மாமிசம் போன்றவை.
ஒருவருக்கு எவ்வளவு உணவு தேவை என்பது அவருடைய ஜீரண சக்தியை பொறுத்தது.
அரிசி, பருப்பு இவை ‘இலகுவான’ உணவு என்கிறது ஆயுர்வேதம். கடலைமாவு, நீரில் வாழும் பிராணிகளின் மாமிசம், உளுந்து, இவை பளுவான உணவு என்கிறது ஆயுர்வேதம்.
மூலிகை தூபம்
குளித்த பின் உணவு, உணவுக்குப் பின், வாந்தி, தும்மல், பல் துலக்கிய பின் மூலிகை தூபம் இடுவது நல்லது என்கிறது ஆயுர்வேதம். இதற்கான நாதஸ்வரம் போன்ற ஒரு உபகரணம் பயன்படுத்தப்பட்டு வந்தது. மூலிகைகளால் ஆன களிம்பு இந்த உபகரணத்தின் முன்னிலையில் வைக்கப்படுகிறது. இது காய்ந்த பின் நெருப்பு மூட்டப்படுகிறது இதன் புகை குழாயின் வழியாக மூக்கினாலோ அல்லது வாயினாலோ நுகரப்படுகிறது. சரகர் கிட்டத்தட்ட 32 மூலிகைகளை இதற்காக குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆயுர்வேதத்திற்கு உகந்தவை
சரகர் சில ஆலோசனைகளை உடல் ஆரோக்கியத்திற்காக சொல்லியிருக்கிறார். உடல் உழைப்பு தேவை, ஆனால் அளவுக்கு மீறி இருக்கக் கூடாது.
பாதுகாப்பில்லாத வாகனங்களில் பயணம் செய்ய வேண்டாம். உயரமான மலைகளில் ஏற வேண்டாம். பரிச்சயம் இல்லாத மலைகளில் ஏற வேண்டாம். வேகமாக பாயும் நதிகளில் நீந்த வேண்டாம்.
வெளியில் செல்லும் போது தலையில் தொப்பி அணிய வேண்டும். ஒரு தடியையும், குடையையும் எடுத்துச் செல்ல வேண்டும். காலணி அணிய வேண்டும்.
பொது இடங்களில் அல்லது சபைகளில் உரக்க சிரிக்க வேண்டாம்.
கொட்டாவி விடுவது, தும்புவது இவற்றை தவிர்க்க வேண்டும்.
சாலையில் எச்சில் துப்ப வேண்டாம். சிறுநீர் கழிக்க வேண்டாம்.
பிறர் மனைவியையோ, பொருளையோ நாட வேண்டாம். பொய்கள் சொல்ல வேண்டாம்.
குடிப்பது, சூதாடுவது, ஒழுக்கமில்லாதவர்களுடன் நட்பு கொள்வது இவற்றை தவிர்க்கவும்.
வாழ்க்கையில் சுக துக்கங்கள் தவிர்க்க முடியாதவை. இவற்றால் மனம் தளர வேண்டாம்.
உடலின் நோய் தடுப்பு சக்தியை ஊக்குவிப்பது
ஆயுர்வேதத்தின் படி போஷாக்கான உணவு, ஜீரண ‘அக்னி’, திசுக்களின் உற்பத்தி இவைகள் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆயுர்வேத சிகிச்சை முறையான ‘ரசாயனம்’ உடலின் எதிர்ப்பு சக்தியை நன்றாக அதிகப்படுத்தும்.
சக்தி வாய்ந்த மூலிகைகள் உபயோகிக்கப்படும். இவற்றால் பக்க விளைவு ஏற்படாது.
அற்புதமான பஞ்சகர்மா சிகிச்சையும் தேவைப்பட்டால் மேற்கொள்ளப்படும்.
தினசரி உடற்பயிற்சி ஆரோக்கியத்தையும், உடல் வலுவையும் மேம்படுத்தும்.
உங்களின் உடலுக்கேற்ற உணவுகள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
யோகாவும், தியானமும் அவசியத் தேவை.
சரகர் சொல்கிறார் – ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த மனிதன், நல்ல ஆரோக்கியமான உணவை உண்டு வந்தால் 36,000 இரவுகள் அதாவது 100 வருடங்கள் நோய் நொடியின்றி வாழ முடியும். நல்ல நடத்தையும், நற்குணங்களையும், மனோ ஆரோக்கியத்திற்கு உதவும். இதனால் ஒருவனுக்கு ஐம்புலன்களின் கட்டுப்பாடும் வந்து சேரும். அத்தகைய மனிதன் ஒரு முழுமையான மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைகிறான்.