தங்க இலை (சருகு) அல்லது பொடி சில உணவுகளில் (இனிப்புகள்) சேர்க்கப்படுகிறது. உணவு வகைகளில் அலங்காரத்திற்காகவும் பயன்படுகிறது. கோல்ட் வாசர் எனப்படும் தங்கநீர் ஒரு மூலிகை பானம் சில ஜரோப்பிய நாடுகளில் (ஜெர்மனி, போலந்து) உட்கொள்ளப்படுகிறது. இந்த பானத்தில் தங்கத்தின் துகள்கள் கலக்கப்படும். தூய தங்கம் ஒரு திடமான உலோகம். சுவையையும் கூட்டாது, அதில் சத்துக்களும் இல்லை.
தமிழ் நாட்டில் வசதியுள்ளவர்கள் சாப்பிடுவதற்கு வெள்ளித்தட்டை உபயோகிக்கின்றனர். வெள்ளித்தட்டின் நடுவிலே ஒரு தங்கக்காசை பதித்து விடுகிறார்கள். அதனால் தங்கம், வெள்ளி இவற்றின் இரட்டிப்பு நன்மையை பெறலாமென்று நம்புகின்றனர். தங்கம் ஓர் உணவுப் பொருளாக மேலை நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
தங்கமும் ஆயுர்வேதமும்
தங்கம், ஆயுர்வேதம் என்றாலே பலருக்கு தோன்றும் மருந்து – தங்க பஸ்பம். தங்கமும் தங்கம் சார்ந்த மருந்துகளும், நரம்பு தளர்ச்சி, மாதவிடாய் பிரச்சனைகள், ஆண்மை குறைபாடுகள் இவற்றுக்கு மருந்தாக கருதப்படுகிறது. தவிர தங்கம் பலம், அழகு, புத்தி கூர்மை, ஞாபகசக்தி, குரல் வளம் முக்கியமாக ஆண்மை இவற்றையெல்லாம் அதிகரிக்கும் அருமருந்து. ஆனால் அதிக அளவு தங்கம், விஷமாகும். இழுப்பு, தசைபிடிப்பு இவை உண்டாகும்.
தங்கத்தை “குறைத்து” செய்யும் கலவைகள், ஜுரம், உன்மத்தம் நரம்பு மண்டல கோளாறுகள், குஷ்டநோய், ஆண்மைக்குறைவு, ஆஸ்துமா, மலட்டுத்தன்மை, காக்காய் வலிப்பு, நெப்ரைடீஸ் சிபிலிஸ் போன்ற பல நோய்களுக்கு பயனளிப்பவை.
மெல்லியதாக இலை போல் தட்டப்பட்ட தங்க இலையை, வெற்றிலையுடன் சாப்பிடுவது வழக்கம். “பிருங்க ராஜ்” கருகா மூலிகை சாற்றுடன் தங்க இலையை சாப்பிட்டால் ஆண்மை பெருகும். பூண்டு சாற்றுடன் கொடுக்க ஷயரோகம் தணியும். புனர்நவா மூலிகையுடன் கொடுக்க, கண் பார்வை முன்னேற்றம் அடையும். மனநோய்க்கு சுக்கு, மிளகு, கிராம்பு இவற்றின் பொடிகளுடன் தங்க இலையை சேர்த்து கொடுக்கலாம். ஆண்மைக்கு பாலுடன் கொடுக்கலாம். குங்குமப்பூ சேர்த்தால் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
ஸ்வர்ண வசந்த மாலதி :- தங்க இலை, முத்து, பாதரஸ சல்பைட், பாதரஸ தாது கனிஜம்) – இங்குலிகம்), துத்தநாக கார்பனேட் மற்றும் கரு மிளகு கலந்து செய்யப்படும் தயாரிப்பு. இது ஆண்மைக்குறைவு, நாட்பட்ட ஜுரங்கள், திரந்தி நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது.
இதேபோல ஜயமங்கல ரஸா, மிருகங்க ரஸா, ஸ்வர்ண பற்படி போன்ற பல வகை ஆயுர்வேத தயாரிப்புகளில் தங்கம் சேர்க்கப்படுகிறது, இதில் புகழ் பெற்ற தயாரிப்பு “மகரத்வஜம்”. 16ம் நூற்றாண்டிலேயே இது தயாரிக்கப்பட்டது.
இந்த கலவைகளில் உபயோகப்படுத்தும் உலோகங்கள் (தங்கம், பாதரசம் இவை) கெடுதலா இல்லையா என்ற சர்ச்சை பலகாலம் நடந்து வருகிறது. இதற்கு ஆயுர்வேதத்தின் பதில் – உபயோகிக்கும் உலோகங்கள் கூழ்நிலையில் பயன்படுத்தப்படுவதால் கெடுதல் இல்லை என்பதாகும்.
இந்த கலவைகளில் தூய தங்கம் உபயோகப்படுத்தப்படுகிறது. சித்தர்கள், தங்கதகட்டுக்கு செம்மண்பூசி, அகலில் இட்டு, அடுப்பில் வைத்து வாட்டி கழுவி, மேலும் 6 முறை இவ்வாறு செய்து தங்கத்தை சுத்தம் செய்ய வேண்டும்.,
தங்கபஸ்பம்/தங்கபற்பம்
தங்கபஸ்பம் பல வழிகளில் தயாரிக்கப்பட்டாலும் அடிப்படை முறை – தூய தங்க ரேக்குகள், தங்க இலை, தங்க சாம்பல் இவற்றுள் ஏதாவது ஒன்றுடன் பாதரஸம் சேர்த்து (சில தயாரிப்புகளில் பாதரஸம் இல்லாமல்) தவிர சாறுகள் (உதாரணம்: எலுமிச்சம் பழத்தின் சாறு) ஏதாவது ஒன்றுடன் சேர்த்து, தேய்த்து, முறைப்படி அரைத்து உலோகங்களை உருக்க வைக்க பயன்படும் மண்பாத்திரத்தில் கந்தகத்துடன் இட வேண்டும். மண்பாண்டத்தை மூடி அனலில் இட்டு (இது ஒரு விசேஷ முறை. வரட்டிகளின் அனல் பயன்படுத்தபடும்) புடமிட வேண்டும். இது 14 தடவைகள் செய்யப்பட்டு, தங்க பஸ்பமாக பழுப்புகலர் பொடியாக மாற்றப்படும்.
தங்க செந்தூரம் இவ்வாறே செய்யப்படும். எலுமிச்சை சாறை தவிர, தேவைக்கேற்ப அத்தி இலை, துவரையிலை, ஆமணக்கிலை சாறு போன்றவைகளும் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த சிக்கலான தயாரிப்புகள் தேர்ந்த ஆயுர்வேத மருத்துவர்களாலே செய்யப்படுகிறது.
தங்கம் கலந்த, பாதரஸம் கலந்த தயாரிப்புகளை உபயோகிக்கும் முன், நல்ல மருத்துவரை கலந்து ஆலோசித்த பின்னரே முடிவெடுக்க வேண்டும்.
இந்தியாவை பொருத்த வரை பலருக்கு தெரிந்த தங்க சுரங்கம், கர்நாடகாவின் கோலார் தங்கவயல். இது தற்போது மூடப்பட்டுவிட்டது. ஒருகாலத்தில் உலகிலேயே இரண்டாவது ஆழமான சுரங்கம் என்று பெயர் பெற்றது இந்த சுரங்கம். தற்போது கர்நாடகாவில் உள்ள ஹத்தி (பிணீttவீ) தங்க சுரங்கம் சிறியளவில் தங்கத்தை தருகிறது.
தங்கம் பொடிகளாக ஆற்று படுகை, மணலில் கிடைக்கும். மற்ற உலோகங்கள் போல தட்ப, வெப்பநிலை, தண்ணீர் அரிப்பு, பூவிஞ்ஞான காரணங்கள் இவற்றால் தங்கத்தை அழிக்க முடியாது. எனவே இவை பொடியாக ஆற்று வளைவுகளில், மணலில் தங்கும். இதனால் காவிரி கிளை ஆறு, “பொன்னி” என்று அழைக்கப்படுகிறது.
தங்க வேட்டையில் ஈடுபடுவர்கள், ஆற்று மணலை நீருடன் சலித்து, முறம் போன்ற தட்டுகளை பலதடவை சுழற்றி சுழற்றி, மேலார இருக்கும் மணல் நீரை கொட்டுவார்கள். அடர்த்தி மிகுதியான தங்கப்பொடி, அடியில் தங்கி விடும். இதை றிணீஸீஸீவீஸீரீ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதற்கு திறமை, பொறுமை, அனுபவம் வேண்டும்.
தங்கத் தாது அமால்கமேஷன் முறையிலும், சையனடேஷன் முறையிலும் தங்கமாக பிரித்தெடுக்கப்படும். முதல் முறையில் பாதரசமும் தங்கமும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும் தன்மையை உபயோகித்து, பாதரஸத்தால் தங்கம் பிரித்தெடுக்கப்படும். இரண்டாவது முறையில் பாதரஸத்திற்கு பதிலாக சையனைடை உபயோகிப்பார்கள். பிறகு தங்க சயனைட் கலவையிலிருந்து தங்கத்தை எடுக்க துத்தநாகத்தை பயன்படுத்துவர்.
பத்தரை மாற்று தங்கம்:-
1.25 செ.மீ. அகலமும், 5 செ.மீ. நீளமுள்ள துண்டுகளாக, தங்கத் தகடு வெட்டப்படும். இந்த துண்டுகள் புளி நீரால் கழுவப்படும். பிறகு உப்பும், இரும்பு கந்தகத்தை கலந்த செங்கற்பொடியில் போட்டு, புரட்டி, இரண்டு ஓட்டுச்சில்லுகளின் இடையில் வைத்து, கீழே காற்று புகும் தொளையுடைய அகல சட்டியில் வரட்டியின் தீயில் பல மணிநேரம் வைப்பார்கள். இவ்வாறு 41 தடவை புடமிட்டால், பொன்கலவை முற்றிலும் மாசு, அழுக்கு நீங்கி “பத்தரை மாற்று தங்கம்” ஆகும். சொக்கத்தங்கம் புடமிட்ட தங்கம் என்றும் கூறுவர்.
நவீன மருத்துவத்தில் தங்கம் கூழ்நிலையில் விஞ்ஞான ஆராய்ச்சிகளில் பயன்படுகிறது. உடல் செல்களில் எதிர்ப்புகளை கண்டறிய ஆன்டி – பையாடிக்ஸ் தடவிய கூழ்நிலை தங்கம் உபயோகிக்கப்படுகிறது. எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்பில் உயிரின மாதிரிகள், மற்றும் பிளாஸ்டிக் இவற்றை பரிசோதிக்க தங்கம் உதவுகிறது. தங்கத்தின் மேல் இந்த சாம்பில்கள் தடவப்பட்டு மைக்ரோஸ் கோப்பில் பார்த்தால் மிக நன்றாக தெளிவாக தெரியும்.
உலகத்தின் பல உயர்ந்த முயற்சிகள் தங்கத்தால் பரிசளிக்கப்படுகின்றன. உதாரணம் – ஒலிம்பிக் தங்கம். சரித்திரத்தில் சிறந்த காலங்களை குறிப்பிட”பொற்காலம்” என்கிறோம். உயர்ந்த குணம் ‘தங்கமான மனசு’ என்று புகழப்படுகிறது.
தங்கம் ஒரு மங்களகரமான பொருள். அதனால் தான் பல பெண்மணிகள் உடல் முழுதும் தங்க ஆபரணங்களை விரும்பினாலும், காலில் மாத்திரம் தங்க நகைகளை போட மாட்டார்கள். காலில் அணியும் கொலுசு, பணக்காரர்களால் கூட தங்கத்தால் செய்யப்படாது. வெள்ளி கொலுசுகள் தான் காலில் அணியப்படுகிறது.
தங்கம் இப்போது ஆண்களாலும் வாங்கப்படுகிறது. ஆபரணங்களாக அல்ல. எதிர்கால சேமிப்பு, முதலீடாக. ஒரு வருடம் முன்பு தங்கத்தில் போட்ட ரூ 10,000/- இன்று ரூ 11,151. வெள்ளியில் ரூ 10,036. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பில் ரூ 10,625. ஷேர்களில் போட்டால் அதிகம் கிடைக்கலாம். ஆனால் அபாயமானது. தங்க சேமிப்பு பாதுகாப்பானது. முதலீடு செய்ய தங்க காசு, தங்க “பிஸ்கட்டுகள்” மேலானவை. ஆபரணங்களைப் போல் “சேதாரம்” இல்லை. தங்கத்தின் கவர்ச்சி, ஆண்களையும் ஈர்க்கிறது!
ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸர் ஃப்ராங்க் ரெய்த் சமீபத்தில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியின் படி நுண்ணுயிர்கள், தங்க படிமங்கள் உருவாக உதவுகின்றன. நுண்ணுயிர்கள் தங்கத்தை பல இடங்களுக்கு கொண்டுசென்று, நுணுக்குகளாக, தங்கக்கட்டிகளாக வண்டல் மண்களில் சேர்ப்பிக்கின்றன.
தற்போது, தங்கத்தை அதிகம் சேமித்து வைத்துள்ள தேசம் அமெரிக்கா. இரண்டாவதாக ஜெர்மனி, மூன்றாவது உலக வங்கி, நாலாவது இந்தியா – இந்தியாவில் தனி மனித சொத்தாக தங்கம், முன்பே சொன்னபடி, காரட் அளவால் கணிக்கப்பட்டு, அதன் தூய்மை ஆயிரத்திற்க்கு இவ்வளவு என்று குறிக்கப்படுகிறது. 999 என்றால் 24 காரட், 916 என்றால் 22 காரட் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.
ஹால் மார்க் தங்கம்: தங்கம் விலை உயர்ந்த உலோகம். அதனால் தரத்தில் மோசடிகள் செய்வது சகஜம். இதனால் இந்திய அரசாங்கம் “ஹால்மார்க்” என்ற தங்க சுத்த கட்டுப்பாட்டு சட்டத்தை அமுலுக்கு கொண்டு வர முயன்று வருகிறது. இந்த ஹால்மார்க் குறியீட்டை பெற, ஆபரண தயாரிப்பாளர்கள் தங்கள் விற்பனை தயாரிப்புகளை, அரசாங்க அங்கீகாரம் பெற்ற பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி, அங்கு 22 காரட் தங்கம் வழங்கப்படும் ஹால்மார்க் முத்திரையை பெறுகின்றனர்.
எனவே நீங்கள் நகை வாங்கும்போது, சிறிய மோதிரம், காதணி ஆக இருந்தாலும் சரி, அதில் 22 காரட்டுக்கான 916 என்ற ஹால் மார்க் குறியீடு இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். இந்த குறியீட்டை தவிர, நகைக்கடையின் சொந்த குறியீடு போன்றவைகள் இருக்கிறதா என்று கவனிக்கவும். தேவையானால் “லென்ஸின்” மூலம் பரிசோதித்து வாங்கவும்.
சத்யா