ஆயுர்வேதம் கூறும் இயற்கை உணவு முறை

Spread the love

ஆயுர்வேத மருத்துவ முறையில் முக்கியப் பங்கு வகிப்பது உணவு முறையே ஆகும். நம் உணவுப் பழக்கத்தை இயற்கை உணவு முறையில் மாற்றிக் கொண்டாலே 90 சதவீதம் இயற்கை வாழ்க்கை முறைக்கு மாறியதாகப் பொருள். அவ்வாறு மாறுவதால் நோய்கள் வராமலிக்கவும் வந்த நோய் முற்றிலும் குணமாவதற்கும் வழிவகுக்கும்.

‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்னும் அற்புதமான உண்மை மொழியைப் பின்பற்றினாலே போதும். நமது உணவுமுறை சரிவிகிதமாக இல்லை என்றால் நாம் மருந்துகளை உணவு போல் மூன்று வேளையும் எடுக்க நேரிடும். நம் உடலில் ஜீரணமண்டலம் தான் பெரும்பாலான நோய்களுக்கு ஆரம்ப இடமாக உள்ளது. சில தவறான உணவு முறைகளால் அதன் செயலில் மாறுபட்டு நோய்வாய்ப்படுவதற்குக் காரணம் ஆகிறது.

இயற்கை உணவு முறை

நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் இயற்கையில் அதன் நிலையிலிருந்து மாறுபடாமல் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் முறையான உணவு. இயன்ற அளவு நாம் உண்ணும் உணவுகள் சமைக்க அவசியமில்லாத வையாகவே இருக்க வேண்டும். (காய்கள், பழங்கள், பருப்புகள், தானியங்கள், தேன், தண்ணீர் போன்றவையாகும்)

உணவுகளைச் சமைத்தோ அதன் சத்துக்களைப் பிரிந்து எடுத்து சத்து மாத்திரைகள் என்ற பெயரில் உண்பதாலோ எந்த பயனுமில்லை. அவ்வாறு உணவுகளில் மாற்றம் ஏற்படுவதாலேயே உடலிலும் மாற்றம் ஏற்பட்டு நோய்கள் ஆரம்பமாகின்றன. உலகில் உள்ள எல்லா விலங்குகள், பறவைகள், புழுபூச்சி கூட சமைக்காத உணவையே உண்டு வாழ்கின்றன. ஆகையாலே அவைகள் மனிதனைப் போன்று கொடிய நோய்களுக்கும் ஆளாவதில்லை. அதனாலே மன உலைச்சலும் இல்லாமல் இனிமையாக மனிதனைவிட நிம்மதியாக வாழ்கின்றன. சமைத்த உணவுகளை மட்டுமே உண்டு வாழும் மனிதன் மிக விரைவில் நோயாளியாகின்றான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் நெருப்பை கண்டுபிடிக்காதபோது சமைக்காத முழு இயற்கை உணவுகளை உண்டுதான் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கின்றான்.

மனிதன் வேறு, மிருகங்கள் வேறு, மனிதனை விலங்குகளுடன் ஒப்பிடலாமா என்று நினைக்கலாம்! மாடு, பன்றி போன்ற விலங்குகளின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் இன்சுலினை மட்டும் மனிதனுக்கு உபயோகிக்றோம், ஹீமோகுளோபின் டானிக் தயாரிக்கிறோம், ஊசி மருந்து மாத்திரைகளைத் தயாரிக்கும்போது அதனைச் சோதனை செய்வதற்கு விலங்குகளைத் தான் பயன்படுத்துகிறோம். இதுபோன்ற செயல்களுக்கு மனிதனை விலங்குகளுடன் ஒப்பிடும்போது இது தவறில்லை. மனிதன் நலமுடன் வாழ விலங்குகளை உபயோகிக்காமல் அவைகள் வாழும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

நாய் தனது உடல்நிலை சரியில்லாதபோது, உணவு உண்ணுவதை முற்றிலும் தவிர்த்து உண்ணா நோன்பு இருக்கும். புலி, சிங்கம் போன்ற மிருகங்கள் கூட பசி எடுத்தால் மட்டும் தான் தனது உணவைத் தேடும். ஆனால், நாமோ உணவை பார்த்த மாத்திரத்திலேயே சுவைக்கு அடிமையாகிப் பசி என்றால் என்ன என்பதே தெரியாத அளவிற்கு உண்ணுகிறோம். சிந்திக்க வேண்டும்.

இத்தகைய இயற்கை வாழ்வின் அடிப்படையில் தான் ஒப்பற்ற திருவள்ளுவரும் ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில். . .

‘மாறுபாடில்லா உண்டி மறுத்துண்ணின்

ஊறு பாடில்லை உயிர்க்கு’

‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி யுணின்’

என்னும் குறள்களின் மூலம் உணவுதான் ஆரோக்கியத்திற்கு முதலிடம் வகிக்கிறது எனத் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

இயற்கைக்கு மாறுபாடுடைய அனைத்து சமைத்த உணவுகளையும் தவிர்த்து இயற்கைக்கு மாறுபாடில்லா அனைத்து சமைக்காத உணவுகளையும் உண்பவரது உயிருக்கு அழிவில்லை, என்றும் இரண்டாவது குறளில் எவனொருவன் உண்ட உணவு நன்கு செரிமானமாகியும் உண்ட உணவால் ஏற்படும் கழிவுகள் அனைத்தும் சிறிதும் உடலில் தேக்கமின்றி விரைவில் அவ்வப்போது வெளியேறவும் உதவும் உணவை உண்ணுகின்றானோ அவனது உடலுக்கு மருந்து என்பதே வேண்டியதில்லை எனத் தெளிவாக கூறியுள்ளார். அவ்வாறு உண்ட உணவு செரிமானமாவதிலும், கழிவுகள் நீங்குவதிலும் அருந்தியது அற்றுபோகும் உணவு சமைக்காத இயற்கை உணவுகளே.

மனிதன் என்றும் ஆரோக்கிய, நோயற்ற ஆனந்த வாழ்வு அடைவதற்கு இவ்வுலகில் சிறந்த ஒரே வழி, தனக்குத்தானே செய்ய முடியும் எளிய, பக்க விளைவுகள் இல்லாத, பொருள் செலவில்லாத வழி, உணவை சமைத்தும் உண்ணும் முறையிலிருந்து இயன்ற அளவு சமைக்காத உணவிற்கு மாறும் வழியாகும். நாம் உண்ணும் உணவுக்கும் மனதிற்கும் நிறைய தொடர்பு இருப்பதாக பல ஆய்வுகள் நிரூபித்து உள்ளன. நாம் உண்ணும் உணவு எவ்வாறு இருக்கிறதோ அதற்கு ஏற்ப நம் மனநிலையும் உடல்நிலையும் மாறுபடுகின்றன.

இயற்கை மற்றும் யோகா சிகிச்சை முறையில் உண்ணும் உணவுகளை மூன்றாக பிரிக்கின்றனர்.

சாத்வீக உணவு (Satvik Diet)

தாமசீக உணவு (Tamsic Diet)

ராஜசீக உணவு (Rajsic Diet)


Spread the love