அக்குபங்சர், யோகா, சைரோ பிராக்டிக் மற்றும் இயற்கை வைத்தியம் போன்ற மாற்று மருத்துவத்தில் அமெரிக்கர்கள் தற்போது அதிக கவனம் கொள்கிறார்கள். இதன் மூலம் தாங்கள் உடல் நலம் பெற அதிக பணம் செலவு செய்வதற்கு தயங்குவது இல்லை என அறிக்கை ஒன்று கூறுகிறது. மாற்று மருத்துவத்தில் 2012ம் ஆண்டு மட்டும் அமெரிக்கர்கள் 30 பில்லியன் டாலர்களுக்கு மேலாகவே செலவு செய்துள்ளனர். மாற்று மருத்துவ சிகிச்சை மூலம் அவர்கள் அதிக பலன்களும், திருப்தியும் பெற்று வருகிறார்கள் என்பது அவர்கள் செலவு செய்வதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த செலவுகளில் 4ல் ஒரு பங்கு இயற்கை மருந்து உணவுகளுக்காக அவர்கள் செலவு செய்துள்ளனர். குறைந்த வருமானம் உள்ளவர்கள் கூட மாற்று மருத்துவ முறையில் சிகிச்சை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவது தெரிய வந்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் மற்றும் அதற்கு மேல் வருமானம் ஈட்டும் மக்கள் சராசரியாக 518 டாலர்கள் மருத்துவர்களுக்காகவும, சராசரியாக 377 டாலர் மருந்துகளுக்கும் செலவு செய்கின்றனர். இயற்கை வைத்திய முறை மற்றும் மசாஜ் தெரபி நடுத்தர அளவில் இருக்க யோகா பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அமெரிக்க கலாச்சாரத்தில் யோகா ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருப்பதாலும், வாழ்க்கை முறை மாற்றத்திற்கு உதவுவதாலும், குறைந்த உடற்பயிற்சியே போதும் என்பதாலும் யோகா அதிக செல்வாக்கு பெற்று வருகிறது. யோகாவானது உடல் நலம் காக்கவும், உடலை வலுப்படுத்த, மேம்படுத்த உதவுகிறது ஒரு பக்கம் எனில், இயற்கை வைத்தியம், அக்குபங்சர் மோசமான உடல்நிலை மற்றும் நோய் சிகிச்சைக்கு அமெரிக்கர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள். கடந்த 10 வருடங்களில் முதுகு வலி சார்ந்த பிரச்சனைகளை மாற்றுமுறை மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மூலம் சரி செய்து கொள்கின்றனர்.