நாம் உண்ணும் உணவைப் பற்றிய ஆயுர்வேத கருத்துகள் அனுபவரீதியாக அறியப்பட்டவை. தவிர ஆகாரத்தில் சேரும் உணவுப்பொருட்களைப் பற்றிய முழு அறிவு, அதில் சேரும் மூலப்பொருட்களின் சமச்சீரான கலவைகள் – ஆகியவற்றை எல்லாம் ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. திரிதோஷ பாதிப்புகளை உண்டாக்காத உணவு முறைகளை ஆயுர்வேதம் விவரிக்கிறது.
உதாரணமாக தமிழகத்தின் பிரபல சிற்றுண்டியான ‘இட்லி’யை பற்றி பார்ப்போம். அரிசி, பருப்புகள் கலந்து ஆவியில் வேக வைக்கப்பட்ட இட்லி, சத்து நிறைந்த உணவு. இதில் சேர்க்கப்படும் உளுத்தம் பருப்பு புரதம் நிறைந்தது. இதன் 100 கிராமில், 24 கிராம் புரதம் உள்ளது. ஆனால் உளுத்தம் பருப்பு சூடு நிறைந்த அமில உணவு. வெய்யில் காலத்தில் சாப்பிட்டால் அதிக அமிலம், வாய்வுத் தொல்லைகளை உண்டாக்கும். வட இந்தியாவில் உளுத்தம் பருப்பை கோடை காலத்தில் உபயோகிப்பதில்லை. இந்த உளுத்தம் பருப்பு பிரச்சனையை வெற்றிகரமாக சமாளிக்க, அரிசியும் பருப்பும் சரியான 1:3 (பருப்பு : அரிசி) என்ற விகிதத்தில் கலக்கப்படுகின்றன.
சேர்த்த கலவை புளிக்க வைக்கப்படுகிறது. பிறகு ஆவியில் வேக வைத்து உண்ணப்படுகிறது. இதனால் உளுத்தம் பருப்பின் தீமையான பக்க விளைவுகள் களையப்படுகின்றன. இட்லியை வருடம் முழுவதும் உண்ணலாம். புரதம், கார்போஹைடிரேட், வைட்டமின் நிறைந்த உணவாகும் இட்லி, எல்லா வயதினருக்கும். (குழந்தைகள் உட்பட) ஏற்ற உணவாகிறது.
இதே போல, வட இந்தியாவில் மேதிஆலூ (வெந்தயகீரை + உருளைக்கிழங்கு) பிரசித்தம். பொதுவாக உருளைக்கிழங்கு வாய்வை கிளப்பும். அதை கட்டுப்படுத்துவது உஷ்ண உணவான வெந்தயகீரை. இந்த உணவில் ‘மேதி’ அதிகமிருக்க வேண்டும்.
தாளிப்பதே ஒரு ஆரோக்கியமான சமையல் முறை, அதற்கு பயன்படுத்தும் கடுகு, சீரகம், பெருங்காயம் முதலியன உணவை சமன்படுத்தும்.
ஆயுர்வேதத்தில் சரகசம்ஹிதை விஸ்தாரமாக உணவைப்பற்றி விவரிக்கிறது.