ராஃபனஸ் சாடிவஸ் (Raphanus Sativus) என்று தாவரவியலாரால் அழைக்கப்படுகின்ற முள்ளங்கி ஒரு ஆயுர்வேத மூலிகையும், காய்கறி வகையும் ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் முள்ளங்கி என்றே அழைக்கப்படுகின்ற இக் கிழங்கு இந்தியா முழுவதும் பயிர் செய்யப்படுகிறது. இது பெரும்பாலும் உணவிற்காகவே பயன்படுத்தப்படுகிறது என்றாலும் இது ஒரு நல்ல மூலிகைத் தாவரம். முள்ளங்கி கீரையின் சாறு நல்ல மூத்திரப் பெருக்கி (Diuretic) ஆகவும், மிதமான மலமிளக்கியாகவும்( mild Laxative ) பயன்படுத்தப்படுகிறது.
புரதச்சத்து, கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உடலுக்குத் தேவையான உயிர்ச் சத்துக்கள் கொண்ட முள்ளங்கி ஒரு ஈரப்பதம் மிகுந்த கிழங்கு. இதன் பூர்வீகம் ஆப்ரிக்கா என்று கருதப்படுகிறது. ஒரு மானாவாரித் தாவரமாகக் காடுகளில் வளர்ந்து கிடந்த முள்ளங்கியின் மகிமை அறிந்து அதை உண்பதற்கேற்ற உணவாக மாற்றியவர்கள் ஆப்ரிக்கப் பழங்குடியினரே.
முள்ளங்கி, காட்டு முள்ளங்கி, குதிரை முள்ளங்கி, மலை முள்ளங்கி எனப்பட்டாலும், நாம் பயன்படுத்துவது மலை முள்ளங்கி வகையைச் சேர்ந்த வெள்ளை முள்ளங்கியையே. வெள்ளை முள்ளங்கியைவிடச் சிறந்த மருத்துவ குணம் கொண்டது, சிவப்பு முள்ளங்கியே. முள்ளங்கி கீரையில் நிறைந்த அளவில் பீட்டாக ரோட்டினும், லூட்டினும் உள்ளது. இது வயிற்றுப்புண்ணை ஆற்றுவதுடன் நல்ல மலமிளக்கியும் ஆகும். இக்கீரையில் விட்டமின் சி. யும், நார்ச்சத்தும் நிறைய உள்ளது.
வெள்ளரி, வாழைத் தண்டு போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறி வகைகளில் முள்ளங்கியும் ஒன்று. இதை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக் கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன என்றுஆயுர்வேதம் கூறுகிறது.