ஆவாரம் பூ பொடி

Spread the love

ஆவாரம்பூ பொடி பயன்கள்

ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது.

ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை நோய், உடல் சோர்வு, தூக்கமின்மை, உடல் இளைத்தல், அடங்காத தாகம் ஆகியவற்றிலிருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய், வயிற்றுப்புண் போன்றவற்றில் இருந்து நம்மை காக்க உதவுகிறது.

ஒரு டீஸ்பூன் ஆவாரம் பூ பொடியை ஒரு தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது நம் உடலில் கிருமி தொற்றுகளால் உண்டாகும் காய்ச்சலை விரைவில் நீக்க உதவுகிறது.

மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வர சருமம் பொலிவு பெறும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் நீங்கும். ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

இது நம் உடலில்  இன்சுலின் சுரக்கும் தன்மையை அதிகரிக்கிறது.

ஆவாரம் பூ பொடியை குளியல் பொடியுடன் கலந்து உபயோகிக்கலாம். இதனால் உடலின் வியர்வை நாற்றம் நீங்கி சருமம் நிறம் அதிகரிக்கும்.

இது குழந்தைகளுக்கு உண்டாகும் வியர்குரு, சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தருகிறது. உடல் வெப்பத்தை குறைக்கிறது.

உபயோகிக்கும் முறை

சிறுநீர் கடுப்பு நீங்க

இரண்டு தம்ளர் தண்ணீருடன் ஆவாரம் பூ பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதில் சுவைக்கு தேன் கலந்து குடிக்கலாம். இதனை வாரத்திற்கு மூன்று முறை குடித்து வர சிறுநீர் கடுப்பு, எரிச்சல் விரைவில் நீங்கும்.

தோல் அரிப்பு நீங்க

ஆவாரம் பூ பொடியை வெந்நீரில் கலந்து உடல் முழுவதும் தேய்த்து ஊற வைத்து, நன்கு காய்ந்ததும் குளிக்கவும். இவ்வாறு செய்வதால் தோல் அரிப்பிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

ஆவாரம் பூ பொடியுடன் பச்சைபயிறு மாவு சேர்த்து உடல் முழுவதும் தடவி நன்கு தேய்த்து குளித்து வர தோல் நமைச்சல் நீங்கும்.

கண் படலம்

ஆவாரம் பூ பொடியை வாயில் அடக்கி வைத்திருக்க கண்ணில் ஏற்படும் படலம் நீங்கும்.

தேவையற்ற முடி நீங்க

ஆவாரம்பூ பொடியுடன் பூலாங்கிழங்கு, கோரைக்கிழங்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கும்.

கற்றாழை நாற்றம் நீங்க

ஆவாரம்பூ பொடியை உடலில் தேய்த்து குளித்து வர உடல் வியர்வையினால் உண்டாகும் கற்றாழை நாற்றம், உடல் வறட்சி போன்றவை நீங்கும். இது உடலுக்கு நல்ல நிறத்தையும் தருகிறது.

மலட்டுத்தன்மை நீங்க

குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் ஆவாரம் பூ பொடியை கருப்பட்டியுடன் சேர்த்து உண்டு வரலாம். இதனால் மலட்டுத்தன்மை நீங்கி விரைவில் கர்ப்பம் தரிக்கலாம்.

கூந்தல் வளர்ச்சிக்கு

ஆவாரம் பூ பொடி 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம் பருப்பு அரை கிலோ ஆகியவற்றை ஒன்றாக கலந்து நன்கு அரைத்து பொடியாக்கி சேகரித்துக் கொள்ளவும். இதனை வாரத்திற்கு இரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர முடி வளர்ச்சியடைந்து, கருமை நிறம் அதிகரிக்கும்.

ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்நீரில்  ஒரு எலுமிச்சை பழம் பிழிந்து, தலைக்கு  குளித்து முடித்ததும் கடைசியாக  இந்த தண்ணீரில் கூந்தலை நன்கு அலசவும். இவ்வாறு செய்வதால் கூந்தல் பளபளப்பாக, நல்ல பொலிவுடன் காணப்படும்.

மூல நோய் நீங்க

ஆவாரம் பொடியை அரை டீஸ்பூன் அளவு எடுத்து நெய்யில் கலந்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும். இதனை 20 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

இதனை நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் நீங்கும்.

மாதவிடாய் வயிறு வலிக்கு

ஆவாரம் பூ பொடி, அசோகமட்டை, மருதம்பட்டை, திரிகடுகு, திரிபலா ஆகிய பொடியை சம அளவு எடுத்து பொடித்து மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டு வர, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

சாப்பிடும் முறை

ஆவாரம் பூ பொடி உடலுக்குள் செல்லச் செல்ல உடல் உறுப்புகள் அனைத்தும் பலப்படும். இதில் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. ஆவாரம் பூ பொடியை ரசம், குழம்புகளில் ஒரு டீஸ்பூன் அளவு சேர்க்கலாம்.

ஆவாரம் பூ பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர சருமம் பொலிவு பெறும்.

ஆவாரம் பொடி டீ குடிப்பதால் பசி குறைந்து, உடல் எடை விரைவில் குறையும். இதனை அதிகளவில் குடிப்பதால் அதிக உடல் எடை இழப்பு ஏற்படலாம். எனவே சரியான அளவில் மட்டும் குடித்து வரவும். மருத்துவ தாவர ஆய்வின் படி இது ஒரு மலமிளக்கி மட்டுமின்றி மெட்டபாலிசத்தை தூண்டக் கூடியதாகும்.

ஆவாரம் பூ டீ

தேவையான பொருட்கள்

ஆவாரம்பூ பொடி –     1 ½ டீஸ்பூன்

மிளகு                –     அரை டீஸ்பூன்

ஏலக்காய்       –     2

இஞ்சி                –     சிறிய துண்டு

கருப்பட்டி       –     சிறிய துண்டு

பால்            –     ஒரு தம்ளர்

தண்ணீர்        –     ஒரு கப்

செய்முறை

ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து மையாக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இஞ்சி, ஆவாரம் பொடி கலவை சேர்த்து கொதிக்க வைக்கவும். நிறம் மாறியதும் பால்  சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி அருந்தவும். பால் தேவைப்படின் பயன்படுத்தலாம்.

குறிப்பு

அதிகளவு மூலிகைகளை எடுத்துக்கொள்வதால் கல்லீரல் பாதிப்பு, நரம்பு பாதிப்பு ஏற்படலாம்.

அல்சைமர் நோய் பாதிப்பு, வயிற்றுபோக்கு, இதய நோய் உள்ளவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம்.

ஆவாரம் மூலிகையை அளவோடு சாப்பிட்டால் நன்மை அதிகம். சரியான அளவில் பயன்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். இதனை மருத்துவ ஆலோசனைப்படி உபயோகிக்கவும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love