பெண்களின் சோகம் தீர…

Spread the love

அசோகு  புரான காலங்களிலிருந்தே பழமையான முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் புனிதமான மரவகைகளில் ஒன்றாகவும் உள்ள அசோகு மரமானது இதன் அழகான இலை மற்றும் நறுமணம் தரும் பூக்களுக்காகவும் போற்றப்படுகிறது.  சமஸ்கிருத மொழியில் அசோகா என்பதற்கு சோகம் இல்லாதது (அ) சோகம் எதுவும் தராதது என்று பொருள் படும். அசோகு மரம் மிகவும் அதிகமான மருத்துவ உபயோகம் காரணமாக, அரிதாகிப்போகும் நூற்றுக்கணக்கான மரங்கள் ஒன்றாக அழிந்து வருகிறது.

தாவரவியல் பெயர் &     சாரகா அசோகா (saraca asoca)

தாவரக்குடும்பம்   &       சிசால்பினியாய்டி (caesalpiniaceae)

முக்கியமாக மகளிர் அவதிப்படும் மாதவிலக்கு, தீட்டு மற்றும் காயங்களைக் குணப்படுத்துவதற்கு பரம்பரை பரம்பரையாக தொன்று தொட்டு பயன்பட்டுவரும் அசோகு இந்தியாவினைத் தாயகமாகக் கொண்டது. இது மகளிரின் மரமாகும். இந்துக்களின் கடவுளான காமதேவனின் 5 முக்கியமான கனைகளில் அசோகு பூவும் ஒன்று. வெள்ளை தாமரை, ஊதாநிற அல்லிமலர், மல்லிகை மற்றும் மாம்பூ வானது மற்ற நான்கு கணைகள் ஆகும்.

மாயா தேவி சித்தார்த்தரை (புத்தர்) ஈன்றெடுத்து இம்மரத்தின் அடியில் தான். அசோக மரத்தின் சிறப்பானது, ராஞ்சி நகரிலுள்ள பௌத்தர் கோவிலில் காணலாம். இராவணன் சீதையை இலங்கையில் அசோக மரங்களால் சூழப்பட்ட வனத்தில் தான் சிறை வைத்திருந்தான் என்பது நாம் அறிந்ததே. பெண்கள் வலதுகாலால் அசோகு மரத்தை உதைத்தால் தான் மரம் செழித்து,வளருவதுடன் நன்கு பூக்கும். அசோகுப் பூவை நீரில் போட்டுக் குடித்தால், அவர்களுடைய குழந்தைகளுக்கு கவலையும் துக்கமும் அண்டாது என்ற பல நம்பிக்கைகள் உண்டு.

இந்து, பௌத்தம், ஜென மதங்களில் அசோகு வணங்குதலுக்கு உரியது. இந்துக்களின் வரும் காலண்டரில் அசோகு மரம் முதல் மாதமான சித்திரையில் வணங்கப்படுகிறது. பெண்களின் தனித்த உடல் உபாதைகளுக்கெல்லாம் அசோகு தனது மருத்துவக் குணங்களால் பயன்படுகிறது.  மாவைப் போல பெருத்த உடம்பை இறுக்கி உடலுக்குப் பலத்தை தரும் திறன் அசோகு பெற்றுள்ளது.

எவ்வாறு

அசோக மரமானது நடுத்தரமான, இலை உதிராக என்றும் பசுமையானதாக 10மீ உயரம் வளரும். அந்நிலையில் அடிமரம் 20செமீ விட்டமுடையதாக இருக்கும். மரத்தின் தலைப் பகுதியில் அடர்ந்த தழை அமைப்பைக் கொண்டது. 6மீ சுற்றளவிற்குப் படர்ந்து காணப்படும். அடிமரம் பழுப்புக் கருமை நிறமுடையது. அசோக மரத்தின் இலை கூட்டிலையாகும். 30 முதல் 50செ.மீ வரை நீளமுடையது.

அதில் 4முதல் 6 ஜோடி சிற்றிலைகள் இருக்கும். சிற்றிலைகள் ஒவ்வொன்றும் 12முதல் 18செ.மீ நீளத்தில் ஈட்டி போன்று வடிவமுடையது. துளிர் இலைகள் இளம் சிவப்பாக இருக்கும்.தொங்கிக் கொண்டிருக்கும் முதிர்ந்த இலைகள் விறைத்திருக்கும். குளிர்கால முடிவில் துளிர் இலைகள் நிறைந்திருக்கும்.

அது சமயம் மொத்த மரமே மிக அழகாக காட்சியளிக்கும். மரத்தின் பட்டைகள் பழப்பு நிறத்திலிருந்து ஆரஞ்சு கலந்து காணப்பட்டு ஸ்கார்லெட் சிகப்பாக மாறும். ஜனவரி& மார்ச் மாதங்களில் மலர்களைச் சொரியும். விண்ணோக்கிய நிலையில் பூக்கள் அடர்ந்து செண்டுகளாக முற்றிய இலைகளிலிருந்து உருவாகும்.

முதலில் மஞ்சள் நிறமாக தோன்றி பின்னர் குங்குமப்பூ சிகப்பு நிறம் பெற்றிடும். மகரந்தத்தூள் பூக்களை விட்டு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். மலர்கள் நறுமணமுடையனவை. அது சமயம் அசோகு மரமானது பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதனையடுத்து புளியின் வடிவமைப்புடைய காய்கள் உருவாகும்.

முதலில் சிகப்பு நிறமாகத் தோன்றி பின்னர் பச்சை நிறம் பெற்று, முடிவில் கருப்பாக மாறிவிடும்.15முதல் 20செ.மீ நீளம், 4முதல்5 செ.மீ அகலம் கொண்டு நெற்றுக்களாக முதிர்ந்தும். இவற்றை மே, ஜூன் மாதங்களில் காணலாம். இக்காய்களில் 4முதல்8வரை தடித்த விதைகள் இருக்கும்.

எங்கு காணப்படுறது?

மூன்று பக்கமும் நீரினால் சூழ்ப்பட்ட பகுதிகளிலிருந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதி வரை அசோகுவின் வளர்ச்சியை ஆராயும் பொழுது தமிழ்நாட்டில் சிறு மலைப்பகுதிதான் அசோகாவின் பூர்வீகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சிறு மலையின் குன்றுப் பகுதி தொடர்களானது மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையினை அசோகு வளரும் இடங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது.

அசோகு மரத்தின் வளரும் இடமானது இலங்கையினை நோக்கி கீழிறங்கியம் தமிழ்நாட்டில் இருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மகாராஷ்ரா வழியாக வடகிழக்குப் பகுதி மேகாலயா மலைகள்(ஒடிவா, ஜார்கண்ட் மற்றும் பீகார் வழியாக) வரை உயர்ந்தும் காணப்படுகிறது. இந்தியாவின் வடபகுதிக்குரிய ஒன்றாக அசோகு கருதப்படவில்லை.

ஆயுர்வேத பயன்கள்

மகளிருக்கான உடல் பிரச்சனைகளான மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, மாதவிலக்கின் போது ஏற்படும் உடல் வலிகள், அதிக வெள்ளைப்படுதல், பெண்மலட்டுத்தன்மை போன்றவைகள் குணமாக அதிகம் பயன்படுகிறது.

அசோகு மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பால் மேற்கூறிய மகளிர் பிரச்சனைகளுக்கு முன் தடுப்பு மருந்தாக உள்ளது. அசோக பட்டை மூலம் உருவாக்கப்பட்ட கஷாயம் வாய் எரிச்சலை கொப்பளித்தல் மூலம் குணமாக்குகிறது. உடைந்த எலும்புகள் ஒன்று சேரவும் வலி நிவாரணியாகவும் அசோகு பட்டையினை மை போல அரைத்து மேலுக்கு(காயம், வலி, உள்ள இடங்களில்) பூச பயன்படுகிறது.

புதிதாக உரிக்கப்பட்ட அசோகின் பட்டையுடன் கடுகு எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிய கலவையை முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் குறைந்து வரும். அசோகின் பூக்கள் சர்க்கரை நோயிற்கு எதிர்ப்புத் தன்மையை வழங்குகிறது.

பூக்களின் மூலம் தயாரிக்கப்பட்ட அசோகு எண்ணெய் தோல் தொற்று நோய்கள் குணமாக மருந்தாக பயன்படுகிறது. மகளிர் சார்ந்த நோய்களுக்கு வராத வண்ணம் குணம் தரும் பாதுகாக்கும் மகத்தான மருந்து.

அசோக மரப்பட்டையுடன் பசும்பால் சேர்த்துக் காய்ச்சி பட்டையினை நீக்கிவிட்டு பாலை அருந்தி வரவேண்டும். சுவைக்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு 3மாதங்களும் மேற்கூறிய பாலை தினசரி ஒரு வேளை என்று மூன்று நாட்கள் தொடர்ந்து அருந்திவர வேண்டும்.

இது உள்ளூர் பரம்பரை வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் பொதுவானதாகும். அதன்மூலம் பெண்களுக்கு ஏற்படும் மகளிர் சார்ந்த நோய்கள் வருவதைத் தடுக்கலாம்.(அ) குணமடைவதற்கு எளிதாக அமையும். அசோகு பூக்களை நீரிலிட்டு ஒரு இரவு முழுவதும் ஊறியபின்பு மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அருந்திவர சர்க்கரையின் அளவு குறைந்து நீரிழிவின் பாதிப்புக் குறையும்.

அசோகு பூக்களிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறான இரத்தபேதியை குணப்படுத்துவதில் சிறந்தது. அசோகமரம் பூக்களுடன் சிறிதளவு நீர்விட்டு அரைத்து சாறு எடுக்க வேண்டும். மேற்கூறிய சாறு15 அல்லது 60 சொட்டுக்கள் எடுத்து தினசரி இரண்டு வேளை என்று 5 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும்.

பயிரிடல்

முற்றிலும் முதிர்ச்சியுள்ள இன்னமும் பசுமையாக உள்ள காய்களை குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் தேர்ந்தெடுத்து விதைக்கலாம். விதைகள் நர்சியில் நாத்துக்களில் வளர்க்கப்பட்டு வாங்கியும் வளர்க்கலாம்.

முருகன் 


Spread the love