ஆரோக்கியத்துக்கு அவசியம் அறுசுவை

Spread the love

நாம் உண்ணும் உணவுகள் ஒவ்வொன்றும் ஒரு சுவை உடையது. ஆனால் எல்லா சுவைகளும் உடலுக்குத் தேவையான அளவில் அமையும் வண்ணம் நாம் உணவாக உட்கொள்கிறோமா என்றால் பதில் இல்லை தான். பொதுவாக பலர் கசப்பு, துவர்ப்புச் சுவைகளை தவிர்த்து விடுகிறார்கள். உடல் நோய் எதிர்ப்பு சக்தி பெற உடலுக்கு  ஆரோக்கியமும் வலிமையும் தரும் உணவுகளை நாம் உண்ண வேண்டும். ஆறு சுவைகளில் ஒரு சுவை குறைந்தாலும் அதற்கு ஏற்ப நோய், உடலில் கோளாறுகள் தோன்றும்.

கசப்புச் சுவை

மனித உடலானது எலும்பு, நரம்பு சீரான இயக்கங்களினால் செயல்படுகிறது. மனிதனின் எண்ணங்களுக்கும், உடல் வளர்ச்சிக்கும் எலும்பும், நரம்பும் முக்கியமானவை. நரம்புகளுக்கு வலிமை அளிப்பதும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்வதும் கசப்புச் சுவை முக்கிய பங்காற்றுகிறது.

உடலில் தேவையான அளவு கசப்புச் சுவை இருந்தால் தான் எல்லா உறுப்புகளும் வலிமை பெற்றிருக்கும். கசப்புச் சுவை நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் கடுகு, சீரகம் போன்றவற்றில் உள்ளது. சீரகம் உடல் உறுப்புகளுக்கு அதிக சக்தியைத் தருகிறது.

கசப்புச் சுவை குறைந்தால் நாம் பணிபுரியும் வேலைகளில் கவனம் குறையும். சோம்பல் ஏற்படும். உடல் வலிமை குறையும். தலை வலி அடிக்கடி ஏற்படும். கசப்புச் சுவை அதிகமானால் தூக்கமின்மை, சரும நோய்கள், ஊறல், அரிப்பு, அதிக கோபம் கொள்ளுதல், உணர்ச்சி வசப்படுதல் ஏற்படும்.

கசப்புச் சுவையுள்ள உணவுகள்

முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, கோவைக் காய், பாகற்காய், சுண்டைக் காய், பிஞ்சு கத்திரிக் காய், கரிசலாங்கண்ணி கீரை, முடக்கத்தான் கீரை, வேப்பிலை, வேப்பம்பூ, ஆவாரம் பூ, கொத்தமல்லி, வல்லாரைக் கீரை, தூதுவளைக் கீரை, கறிவேப்பிலை, கடுகு, கடுகெண்ணெய், ஓமம், சீரகம், பூண்டு, பெருங்காயம், கசகசா, பொன்னாங்கண்ணிக் கீரை.

துவர்ப்புச் சுவை

புண்களை ஆற்றும் சக்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை சீரான இயக்கத்திற்கு துவர்ப்புச் சுவை உதவுகிறது. இரத்தத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இரத்தம் குறையும் பொழுது உடலுக்கு, உழைப்புக்கு வயதுக்கேற்ப இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரத்தம் குறைந்தால் உடல் சோர்வு, காமாலை, உடல் வெளுப்பு ஏற்படும். அத்திப் பழம், மாதுளம் பழம், விளாம் பழம், சப்போட்டா பழம், தேங்காய், நெல்லிக்காய், வாழைப்பூ, வாழைப் பிஞ்சு, வாழைத் தண்டு, மணத் தக்காளிக் கீரை, பருப்பு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இனிப்புச் சுவை

உடல் எடையை அதிகரிக்க உதவும். நீரிழிவு நோயுள்ளவர்கள் மிகவும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு உடலில் அதிக அளவு சர்க்கரை சேர்ந்திருந்தால் எளிதில் புண்கள் குணமாகாது. உடலில் தசைகளை வளர்ப்பது இனிப்புச் சுவையே. சர்க்கரை, கற்கண்டு, வெல்லம். நாட்டுச் சர்க்கரை, கரும்பு, வாழைப் பழம், கமலாப் பழம், சாத்துக்குடி, அன்னாசி, பேரீச்சம் பழம், நாவல் பழம், இலந்தைப் பழம், சீதாப் பழம், மாதுளம் பழம் போன்றவற்றில் இனிப்புச் சுவை அதிகம் உள்ளது.

காரச் சுவை

காரம் உமிழ்நீர் சுரகக் உதவுவதால், உண்ட உணவு உமிழ்நீரினால் செரிமானம் ஆக உதவுகிறது. உணவு உட்கொள்ளும் போது, உமிழ்நீருடன் கலந்து உடலுக்குச் சென்றால் தான் செரிமானம் சீராக அமையும். இதன் காரணமாக தான் உணவை நாம் முழுங்காமல் மென்று சுவைத்துச் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். காரச் சுவையை நாம் அளவுடன உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமானால் உடல் சூடு, உணர்ச்சி வசப்படுவது, கோபம் கொள்வது அதிகரிக்கும். வயிற்றில் புண் ஏற்படும். மலம், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.

புளிப்புச் சுவை

உணவைச் செரிக்க புளிப்புச் சுவை காரணமாகிறது. புளிப்புச் சுவை இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள உஷ்ணத்தைக் குறைக்கும். புளிப்பும், இனிப்பும் உள்ள உண்வுகள் உடலில் புதுப் பொலிவையும் அழகையும் தருகிறது. புளிப்புச் சுவை அதிகமானால் மலச்சிக்கல் ஏற்படும். மனநிலை மந்தமாகும். அதிகமான கொழுப்பு, புளிப்பு உடல் அரிப்பை, கோபத்தை அதிகரிக்கும். தினமும் உடற்பயிற்சி செய்தல், நேரத்துடன் உணவு உடகொள்ளுதல், பசித்தால் மட்டும் சாப்பிடுதல் என்று கடைபிடித்தால் புளிப்புச் சுவை அதிகரிக்காது. வெண்டைக்காய், அவரை, வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, வள்ளிக் கிழங்கு, காராமணி, பட்டாணி, மொச்சை, வெண்ணெய், புளிச்ச கீரை, புளி, எலுமிச்சம் பழம், நார்த்தங்காய், கொத்தவரைக்காய் போன்றவற்றில் புளிப்புச் சுவை உள்ளது.

உப்புச் சுவை

உடலில் உப்புச் சுவை குறைவதால், உடல் சூடு குறைந்து விடுகிறது. அளவான உப்பு உடலுக்கு ஏற்றது. அளவுக்கு அதிகமாக உப்பு உணவில் சேர்க்கும் பொழுது சிறுநீரக பாதிப்பு ஏற்படும். உணர்ச்சி வசப்படுதல், கை, கால், முகம் வீக்கம் ஏற்படும்.

முள்ளங்கி, முளைக்கீரை, வெண்பூசணி, கீரைத் தண்டு, வெங்காயம், இளநீர், வெள்ளரிப் பிஞ்சு, அருநெல்லி போன்றவற்றில் உப்புச் சத்து உள்ளது.

அறுசுவை என்றாலும் அதை அளவோடுதான் சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!