மடக்குவாதத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

Spread the love

மடக்குவாதம் என்பது மனிதர்களுக்கு ஏற்படுகின்ற ஒரு குறைபாடுதான் என்றாலும், மருத்துவ உலகம் ஒரு நோயாகவே பாவித்தும் வருகிறது. அதனால்தான் மடக்குவாதம் என்பது திசு ஆக்கச் சிதைவு நோய் என்று சொல்லப்படுகிறது. இந்நோய் பெரும்பாலும் பாரம்பரியம் காரணமாக ஏற்படுகிறது. இந்நோய் அதிக அளவில் உடற்பருமன் மிக்க நடுத்தர வயது ஆண்களிடமே உண்டாகிறது.

இந்நோய் பெரும்பாலும் முதலில் கால் பெருவிரலையே தாக்குகிறது. இந்நோய் பெரும்பாலும் இரவில்தான் தாக்குகிறது. இரவில் நோயாளர் கால் பெருவிரலில் வலி கண்டு விழித்தெழுவார். குளிரினால் உடல் நடுங்கும். உயர்க் காய்ச்சல் அடிக்கும். பின், அதிகம் வியர்க்கும், அடுத்து, நோயாளர் நன்கு தூங்கிவிடுவார்.

காலையில் விழித்தெழுந்ததும், கால் பெருவிரல் இணைப்புகள் பளபளவென்று சிவந்து வீங்கி இருக்கும். விரலை மடக்கினால், வலி உயிர் போவது போல் இருக்கும். பின், வலி சிறிது சிறிதாகக் குறைந்து மீண்டும் இரவில் அதிகரிக்கும். இவ்வாறு மூன்று அல்லது நான்கு நாட்கள் நோய் தொடர்ந்து தாக்கிவிட்டுப் பின் மறைந்து விடும். அடுத்து, ஒரு மழை அல்லது பனிக் காலத்தில் திரும்பவும் பாதிக்கும்.

நோயின் முன் அறிகுறிகள்.

இந்நோய் தாக்குவதற்கு முன்னர், நோயாளியின் வெளிக்காது மடல் ஓரங்களில் ‘முடிச்சுகள்’ ஏற்படும். இந்த முடிச்சுகளில் அரிப்பெடுக்கும். நோயாளர் தன்னை அறியாமல் சொரிந்து கொள்வார். இந்த முன்னறிவிப்பை பல நோயாளர்கள் கவனிக்காமல் விட்டு விடுகின்றனர் என்பதே வேதனை.

என்ன செய்யும்?

கால் பெருவிரல் இணைப்பு எலும்புகளின் மீது ஊசி போன்ற யூரிக் அமிலப் படிகங்கள்  படிந்து, இணைப்புகளை மடக்கும்போது அங்குள்ள குருத்தெலும்புகளையும் இணைப்புத் திசுக்களையும் மற்றும் தசை நாண்களையும், உராய்ந்து சிதைத்து விடுகின்றன.

இந்நோய்க்கான காரணங்கள்?

இந்நோய் உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவை.

. .

பாரம்பரியம்

தொடர் மனவேதனை

மது மற்றும் புகைப் பழக்கம்.

புரதம் மிகுந்த உணவு வகைகள்

கிருமித் தொற்று

அறுவை சிகிச்சையின் பிந்தைய விளைவு.

உடல் உழைப்பு இல்லாத சொகுசு வாழ்க்கை

தொடர் பட்டினி.

சிலவகை அலோபதி மருந்துகளின்  பக்க விளைவு

சிறுநீரகம் சரிவர இயங்காமை.

இயக்குநீர் சுரப்புப் பிரச்சனைகள்.

காரீய நச்சுத் தாக்கம்.

தோல் செதில் நோய்

பேறுகால ஜன்னி

சிலவகை புற்றுக் கட்டிகள்.

காயங்களின் பின் விளைவு.

இந்நோயின் அறிகுறிகள்.

சிடுசிடுப்பு மனநிலை

பசியின்மை

குமட்டல் அல்லது வாந்தி

இரத்தத்தில் இ.எஸ்.ஆர். அதிகரித்தல்.

சீரம் யூரிக் அமிலம் 7.5 I.A. /டெ.லிக்கு மேல் தென்படுதல் (இயல்பான அளவு 3 IL / டெலி.

சிறுநீரில் Ph அளவு குறைந்து போதல்.

இந்நோயின் பின்விளைவுகள்

சிறுநீர்க் கற்கள் (Urate Stones) உருவாகுதல்.

சிறுநீர்க் கற்கள் (Urate Stones) உருவாகுதல்.

சிறுநீரக அழற்சி தோன்றுதல்.

உயர் இரத்த அழுத்தம் உண்டாகுதல்.

நீரிழிவு நோய் ஏற்படுதல்.

இதய இரத்த நாளப் பிரச்சனைகள் தோன்றுதல்.

கரப்பான் படை ஏற்படுதல்.

வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் தோன்றுதல்

.

தலைவலி உண்டாகுதல்.

நரம்புவலி தோன்றுதல்.

இந்நோய் கால் பெருவிரலிலிருந்து கைவிரல், கணுக்கால், முழுங்கால், முழங்கை போன்ற பிற இணைப்புப் பகுதிகளுக்கும் பரவும். இந்நோயாளரைப் பரிசோதித்துப் பார்த்தால், அவர் உடம்பில் ‘வாத அறிகுறிகள்’ தென்படும்.

இந்நோய்க்கு சிகிச்சை அளிக்காமல் தொடர்ந்து இருந்து வந்தால், இணைப்பு எலும்பின் மீது படிந்துள்ள யூரிக் அமிலப் படிகங்கள் தானாகவே உள்ளாக நொறுங்கி, இணைப்புப் பகுதியின் மேல் தோலைப் பிய்த்துக் கொண்டு, வெள்ளை நிறப் பொடிகளாக வெளியே உதிரும்.

சிகிச்சை முறை

இரவில் படுக்கும்போது நோயாளரின் பாதிப்படைந்த கால்களை தலையணையின் மீது சற்று உயர்த்தி வைக்கச் சொல்லலாம். இது நோயாளிக்கு வசதியாக இருக்கும்.

இந்நோயின் ஆரம்பக் கட்டத்தில் நோயாளரின் உணவுப் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றில் தகுந்த மாற்றங்களைப் புகுத்துவதன் மூலம் நோயாளரைக் குணப்படுத்தி விடலாம்.

ஆனால், முற்றிய நோய் நிலையை இவற்றுடன் கூட மருத்துவ சிகிச்சையையும் இணைத்தால் மட்டுமே நலமாக்க முடியும்.


Spread the love