அரோரூட்

Spread the love

      சில தாவரங்கள் மூலிகையாக மட்டும் பயனாகும். சில தாவரங்கள் மூலிகையாகவும், கூடவே உணவாகவும் பயனளிக்கின்றன. அவற்றில் ஒன்று அரோரூட்.

      உஷ்ணப் பிரதேச தாவரமான அரோரூட் கிழங்கு ‘ஸ்டார்ச்’ செறிந்தது. இந்த ஸ்டார்ச்சின் ரூபத்தில் தான் கார்போ – ஹைட்ரேட் தாவரங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. ஸ்டார்ச் உடலுக்கு சக்தி தரும் உணவு. அமைலேஸ் (Amylase) என்ஜைம் ஸ்டார்ச்சை ஜீரணிக்க உதவுகிறது.

      அரோரூட்டில் உயர்ந்த, தரமான, எளிதில் ஜீரணமாகும் ஸ்டார்ச் (மாவுப்பொருள்) உள்ளது. எனவே பலமிழந்த நோயாளிகளுக்கு நல்ல ஆகாரமாகும்.

      உலகின் மொத்த அரோரூட் தேவையை கிட்டத்தட்ட நிறைவு செய்வது மேற்கிந்திய தீவுகளும், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகணங்களுமாகும். இந்தியாவில் உத்திர பிரதேசம், பீஹார், ஒரிஸ்ஸா, கேரளா, வங்காளம், அஸ்ஸாம் முதலிய மாநிலங்களில் ஒரளவு அரோரூட் பயிரிடப்படுகிறது.

அரோரூட்டின் தாவரவியல் பெயர் – Maranta Arundinacea

குடும்பம்         –  Marantaceae

            கிழங்குகளால் அரோரூட் பயிரிடப்படுகிறது. நட்ட 10 – 11 மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. அரோரூட் இலைகள் வாடி, வதங்கி, தொங்கும் போது, தண்டுக் கிழங்குகள் முதிர்ச்சி அடைந்ததை தெரிந்து கொள்ளலாம். பூமியிலிருந்து கிழங்குகளை தோண்டி எடுத்து சேகரிக்கப்படுகின்றன. கிழங்குகளின் மேல் பாகம் வெட்டி விடப்படும். ஏனென்றால் மேல் பாகத்தில் ஸ்டார்ச் குறைவு. பிறகு கிழங்குகள் தோலுரிக்கப்பட்டு, கழுவப்பட்டு, கூழாக்கப்படுகின்றன. கூழுடன் நீர் சேர்த்து, துணிகள் அல்லது சன்ன சல்லடைகளில் செலுத்தப்படும். இந்த வடிகட்டிய கலவையை தெளிய வைத்து, அடியில் சேரும் பொடி பல தடவை கழுவப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுத்தப் பொடியை வெய்யிலில் உலர்த்தி, விற்பனைக்காக ‘பேக்’ (Pack) செய்யப்படும்.

அரோரூட்டில் உள்ளவை

      கால்சியம் – 83%, தாதுப்பொருட்கள் – 0.19%, புரதம் – 0.20%, கொழுப்பு – 0.10%, கால்சியம் – 0.10%, அயச்சத்து – 0.10%, ஈரம் – 15-16%

பயன்கள்

குழந்தைகள், பலவீனமான நோயாளிகள், நோய் குணமானவுடன் ஒய்வு எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏற்ற உணவு.

பிஸ்கட், கேக் போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது.

முகப்பவுடர்களில் சேர்க்கப்படுகிறது.

சில ஒட்டும் பசை, பிசின் தயாரிப்பில் உதவுகிறது.

மருத்துவத்தில்

பேதியை நிறுத்துவதில் பழைய காலத்திலிருந்தே அரோரூட் கஞ்சி அருமருந்தாக பயன்படுகின்றது. பேதி, ரத்த பேதி, சுவாச நோய்கள், இவற்றுக்கு நல்ல மருந்து. அமீபாவினால் ஏற்படும் பேதிக்காக கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் அரோரூட் சேர்க்கப்படுகிறது. பால், புளியுடன் சேர்த்த அரோரூட் பொடி மஞ்சள் காமாலை மருந்தாக மத்திய பிரதேச ஆதிவாசிகள் பயன்படுத்துகின்றனர்.

சர்ம நோய்களுக்கும் அரோரூட் மருந்தாக பயனாகிறது.

ஆயுர்வேத மருந்துகளான ச்யவனப்பிராசம், அஸ்வகந்தா லேகியம் இவற்றில் அரோரூட் சேர்க்கப்படுகிறது.


Spread the love