இளம் பெண்கள் தாங்கள் கருவுற்றிருப்பதை எண்ணி பயப்படுவது உண்டு. கருவுற்ற அந்த 266 நாட்களும் ஒருவித மர்மமான காலமாக வாழ்வின் நிறைந்த பகுதியாகத் தோன்றுவது கூட உண்டு. கஷ்டப் பிரசவம் ஆன பல பெண்களின் கதைகளை செய்தித் தாள்களில் படிக்க நேரிடும் போதும் அதையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போதும் அப்படிப்பட்ட பிரசவம்தான் நமக்கும் நேரிடுமோ என்ற கலக்கம் தோன்றுவது இயல்பே.
கருவுற்ற காலத்தில் ஒவ்வொரு நிலையிலும் என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்வது பெண்களின் மனதில் ஏற்படும் அச்சத்தைப் போக்கி உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும், சமாளிக்கவும் துணை நிற்கும்.
மகப்பேறு பற்றிய பயம் சாதாரணமானது: பல பெண்கள் ஒப்புக்கொள்வதைப்போல் சர்வ சாதாரணமானது. தாயானவள் பிள்ளையைப் பெற்றெடுப்பதற்காகப் படுகின்ற துன்பத்தைக் கருத்தில் கொண்டே சமுதாயம் அவளை மிக உயர்ந்த இடத்தில் தூக்கி வைக்கிறது.
தாய்மைப்பேறு அடையும் நிலையில் வலியும் இருப்பது இயல்பானதே. ஆனால் இன்றைய ஆராய்ச்சியாளர்கள். பிள்ளை பெறும்போது பெண்களின் கருப்பையைச் சார்ந்த தசைகள் பலமாகச் சுருங்கி விரிவது – மிகுந்த வேதனையைத் தருவதாக இருந்த போதிலும் தேவையானதுதான் என்று குறிப்பிடுகின்றனர். இப்படிச் சுருங்கி விரிவதால் குழந்தையின் சுவாச மண்டலம், இரத்த வோட்ட மண்டலம், ஜுரண மண்டலம் ஆகியவை தூண்டுதல் பெறுகின்றன. இதனால் குழந்தை பிறந்த பிறகு நன்றாக இயங்க முடிகிறது.
தாய்மை அடையும் காலத்தை மூன்று மாதங்கள் கொண்ட மூன்று கால கட்டங்களாக மருத்துவர்கள் பிரித்துக் கொள்கிறார்கள். கருத்தரித்த பின் ஒவ்வொரு மூன்று மாத கால கட்டத்திலும் என்ன நிகழ்கிறது என்று அறிந்து கொண்டால் பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளத் தயார் செய்யலாம்.
பொதுவாக மாதவிலக்கு நிற்றல்தான் கருத்தரித்துள்ளதற்கு முதல் அடையாளமாக இருக்கிறது. கருத்தரித்த முதல் மூன்று மாத காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் (சற்றேறக்குறைய 75 சதவீதத்தினர்) மசக்கையினால், துன்புறுகின்றனர். புதிதாகப் பிறக்கப்போகும் குழந்தையைத் தாங்குவதற்காக உடல் தன்னையே மாற்றிக் கொள்ளச் செய்கிற ஏற்பாடு இது. பெண்களின் உடலில் இயல்பாகச் சுரக்கின்ற ஹார்மோன்கள் ஓர் இடைக்கால மாற்றத்தை அடைவதால் தான் இத்தகைய உடல் நலக்குறைவு உண்டாகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட ஹார்மோன் மாற்றம் பெண்ணுக்குப் பெண் வேறுபடும். இலேசான வாய்க்கசப்பு, நீர் ஊறல் முதல் மோசமான குமட்டல், வாந்தி வரை இதன் அறிகுறிகள் காணப்படும்.
இந்தக் காலகட்டத்தில் களைப்பு, மயக்கம், தலைசுற்றல், தலைவலி, மூக்கில் இரத்தம் வருதல், நெஞ்செரிவு, சிறுநீர் அதிகமாக வெளியேறுதல், மலச்சிக்கல், முதுகுவலி, கால்வலி, காலில் சிரை இரத்த நாளத்தில் இரத்தம் தேங்குதல் போன்ற பிற உடல் உபாதைகளும் தோன்றுவது உண்டு.
ஹார்மோன் மாற்றங்கள் குமட்டலை வருவிப்பதோடு, மனநிலையில் பெருத்த மாறுபாடுகளையும் உண்டாக்கும். ஒரு சிறிய துன்பம் அல்லது அதிருப்தி நேரிட்டாலும் இப்படிப்பட்ட நிலையில் உள்ள பெண்கள் அழுதுவிடுவார்கள். சுமார் 60 சதவீதப் பெண்கள் சிறிதளவு மனவாட்டம் அடைகின்றனர் என்று ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகின்றது. மனநிலையில் காணப்படும் இப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்கள் அவற்றின் மூல காரணம் என்பதை அறிந்து கொண்டால் கட்டுப்படுத்தக் கூடியவை அல்லது குறைந்த பட்சம் சகித்துக் கொள்ளக் கூடியவை.
இரண்டாம் மூன்று மாத காலகட்டம் அவ்வளவாக சிக்கல் இல்லாத காலகட்டம். உடல் ரீதியான அசௌகரியங்களில் பல மறைந்து விடுகின்றன. வயிறு பெதிதாகிக் கொண்டு போனாலும், அடிவயிறு முன் தள்ளிய போதிலும் அதிகமான சங்கடங்கள் இருப்பதில்லை. “இந்தக் கால கட்டத்தில் எஸ்ட்ரோஜன்(Estrogen) ஹார்மோன் அளவு அதிகமாக இருப்பதாலும் அவர்களது மனநிலையில் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாலும் இம்மாற்றம் நிகழலாம்” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இப்படிப்பட்ட சௌகரியமான உணர்வு தொடர்ந்து நீடிப்பதில்லை. அடுத்த மூன்று மாத காலகட்டம் ஆரம்பித்ததும் கஷ்டம் ஆரம்பிக்கிறது. இது மிகக் கடினமான காலகட்டமாக இருக்கிறது. கருவுற்ற ஒன்பதாவது மாதத்தில், குழந்தை தனது உச்சநிலை அளவை அடைகிறது. இப்போது குழந்தை தாயின் இடுப்புக் குழிவில் நன்றாக இடம் பிடித்து வெளியேறும் நிலையில் பொருந்தி நிற்கிறது. இந்தக் கட்டத்தில் சில பெண்கள் மிகவும் பயந்து போய் விடுவதுண்டு. இதற்குக் காரணம், தனது தற்போதைய நிலையைக் கண்டு தனது கணவர் முன்புபோல நேசிக்க மாட்டாரோ. அவர் கண்களுக்கு முன்புபோல நான் கவர்ச்சியாக இருப்பேனா என்பது போன்ற சந்தேகங்களும், பயங்களும் எழுவதே. ஆனால் இவர்களது இந்த நினைப்பிற்கு நேர்மாறாகத்தான் பெரும்பாலும் நடைபெறுகிறது.
“பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவிகளை இந்தக் கட்டத்திற்குப் பிறகு தான் அதிகமாக நேசிக்கிறார்கள்” என்கிறார் கே . சி. கோல் என்னும் நிபுணர். பல பெண்கள் கருத்தரித்த பிறகு தான் கணவர்களின் கவனத்தை தங்கள் பால் ஈர்க்கிறார்கள். தனக்குப் பிறக்கும் குழந்தை உடல்நலக் குறைவுடன் அல்லது உடல் ஊனத்துடன் பிறந்துவிடக் கூடாதே என்று பயப்படாத பெண்களே இல்லை எனலாம். ஏனெனில் பெண்களுக்கு வயது ஏற ஏறத் தாய்மையுறுவதினால் வரும் அபாயங்கள் அதிகரிக்கிறது. பெண்கள் தங்களுயை 35 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொண்டு விடுவது சிறந்தது என்று உடல்நல மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
கருவுற்ற பெண்மணிகள் நல்ல உடல்நலத்துடன் திகழ மேலும் சில குறிப்புகள் கீழே தரப்படுகின்றன.
மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளை எக்ஸ்ரே எடுப்பதைத் தவிர்க்கவும்.
உயிர்நிலையான உறுப்புக்களை நேரடியாகப் பாதிக்கும் சுற்றுப்புறச் சூழல் சார்ந்த பொருட்களின் உபயோகத்தை விட்டு ஒதுக்குங்கள், அல்லது குறையுங்கள். காரீய நச்சு கலந்த சூழலில் வசித்தல், மது அருந்துதல், குறிப்பிட்ட சில மருந்துகளை அருந்துதல் ஆகியவற்றை ஒதுக்குங்கள். கல்லீரல் ஒரு சில மருந்துகளை உடைத்து மாற்றமடையச் செய்வதனால் வயிற்றிலுள்ள சிசுவிற்குப் பிறவிக் குறைபாடுகள் நேர வாய்ப்புள்ளது. என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 1981 லேயே தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, எந்தவிதமான மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாமல் இருப்பதே இதற்குரிய மிகப் பாதுகாப்பான வழிமுறை, கட்டாயமாகப் புகைக்கக்கூடாது. புகைக்கும் பெண்களுக்குக் குழந்தை இறந்து பிறக்கும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகம். பேறுகாலத்திற்கு முந்திய இறப்பு அபாயம் 26 சதவீதம் அதிகம்.
இரத்தத்திலுள்ள காரணியைக் (Rh factor) கண்டறியுங்கள். இது இரத்தத்தில் காணப்படும் ஒரு வித ஆக்கக்கூறு. இதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல் போன்ற கோளாறுகள் விளைவிக்கும். தாய் – சேய், இரத்த வகைகள் ஒன்றோடொன்று மோதல்களை உருவாக்கிக் கொள்ளாதபடி தடுக்க ஊசி மருந்து எடுக்கலாம்.
கருவுற்ற பெண்களுக்கு 17 விதமான மிக அவசியமான ஊட்டச்சத்துக்கள் தேவை. சாதாரண காலத்தைவிட கருவுற்ற காலத்தில் 200 முதல் 300 கலோரி ஆற்றல் அதிகமாகத் தேவை. எனவே சாதாரணமாக உண்பதைவிட 40 சதவீதம் அதிகமாக சாப்பிட வேண்டும்.
வயிற்றிலுள்ள குழந்தையைப் பற்றி அக்கறை செலுத்த வேண்டும். குழந்தைப் பிறப்பிற்கு எப்படியெல்லாம் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும் என்று தகுதியுள்ளவர்கள் மூலமாகக் கற்றறிந்து பாதிப்பில்லாத அளவில் உடற்பயிற்சிகளை செய்ய தக்க மருத்துவரின் ஆலோசனைப் படி உடற்பயிற்சி முறைகளை அறிந்து செய்ய வேண்டும்.
குழந்தை பிறக்கும் முன் உங்களுக்கு ஏற்படும் கலவரத்தைத் தணிக்கவும், பிரசவ வலியை ஓரளவு தணிக்கவும் சமனப்படுத்தவும் (Tranquilizer / analgesic) மருந்துகளைத் தர முடியுமா என்று மருத்துவரிடம் கேட்டு, முடிந்தால் தரும்படி கூறுங்கள்.
குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் சோர்வு நிலையை மேற்கொள்ள ஆயத்தமாக இருங்கள். குழந்தை பிறந்த பிறகு பெரும்பாலான பெண்கள் ஒருவிதச் சோர்வு நிலை அடைகின்றனர். இப்படிப்பட்ட வருத்தத்தைத் தரும் உணர்வு ஒரு நாள் முதல் இரண்டு வார காலம்வரை நீடிப்பது உண்டு. சுமார் 10 – ல் ஒரு பெண்ணே மிக மோசமான மனக்கலக்கத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். முன்னதாகத் தயார் நிலையில் இருந்தால் குழந்தை பெறுவது சிக்கலானதாக மாறாது. செக்ஸைப் பற்றித் தெரிந்து கொண்டால் Morality (ஒழுக்கம்) கெட்டு விடும் என்கிறார்களே, பண்டைய நாளில் வாத்ஸ்யாயனரும், கல்யான மல்லரும், கம்பனும், காளிதாசனும் அதிவீரராம பாண்டியரும் செக்ஸ் பற்றி எழுதாமலா இருந்தார்கள். திக்கெட்டும் புகழ் பரப்பும் தென்னாட்டுக் கோவில்கள் என்று பெருமை பேசுகிறோமே அந்த ஆலயத்துச் சிற்பங்களிலே பாலுணர்வு பற்றிய சிற்பங்களை நீங்கள் கண்டதில்லையா? இதனால் அன்றிருந்தவர்கள் அத்தனை பேரும் நடத்தை கெட்டுபோனவர்கள் என்றா பொருள் கொள்வது?