விக் அழகா! ஆபத்தா?

Spread the love

விக் வைத்துக் கொள்ளலாமா?

தலைமுடி அதிகம் வளராமல் இருப்பதனால் முடி மூலம் பெறக் கூடிய அழகினை விக் வைத்து விட்டால் சரி செய்து கொள்ளலாம். முடி உதிர்தல் புழு வெட்டு காரணமாக சிறிது அல்லது சற்று அதிகமாக வழுக்கையினை அடைந்துள்ள பெண்களுக்கு விக் ஒரு வரப்பிரசாதமாகும். பெண்களிடையே சமீப காலங்களில் ‘விக்’ பற்றிய மனோபாவங்கள் மாறி வருகின்றன. தலை முடி பிரச்சனையாகும் பொழுது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ‘விக்’ வைத்துக் கொள்ளலாம். ஆனால் நிரந்தரமாக உங்கள் முடிப் பிரச்சனையை நீக்காது. இது ஒரு இடைக்காலத் தீர்வு மட்டும் தான்.

விக்கைத் தேர்வு செய்வது எப்படி?

1. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ‘விக்’ உங்களது முடியின் நிறம், கண்கள் மற்றும் சருமத்தின் நிறத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

2. மனித முடியினால் ஆன ‘விக்’ தான் வாங்க வேண்டும் என்பதில்லை. செயற்கை முடியிலான விக்கும் வாங்கலாம். இவையும் நல்ல தோற்றமுள்ள இயற்கை முடியை ஒத்திருக்கும்.

3. நல்ல தரமான பொருட்களைக் கொண்டு, அழகாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்று கவனித்து வாங்க வேண்டும்.

4. ‘விக்’கின் உட்புறத்தை வெளியில் திருப்பிப் பாருங்கள். நன்கு அகன்ற அடிப்புறமும் எளிதாகக் கட்டி முடிக்கக் கூடிய நாடாக்களும் இருந்தால் அணிவதற்கு வசதியாக இருக்கும்.

5. ‘விக்’கைத் தேர்ந்தெடுக்கும் போது, அந்த ஹேர்ஸ்டைல் உங்களுக்கு ஏற்றதாக இருக்குமா? என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. விக் வாங்குவதற்கு முன்பு, தலையில் அணிந்து பாருங்கள். சிறு மாற்றங்கள் தேவையென்றால், அவ்வாறு செய்து தரச் சொல்லுங்கள். கடுமையாகத் தலையைக் குலுக்கினாலும், கீழும் மேலும் குனிந்தாலும் ‘விக்’ கீழே விழாத வண்ணம் பற்றிப் பிடித்தாற் போல இருத்தல் வேண்டும்.

7. அதே நேரம் தலையை இறுக்கிப் பிடிக்கவோ, தலை வலி ஏற்படவோ செய்யக் கூடாது.

8. விக்கை எப்போதும் நன்கு பிரஷ்செய்து சுத்தமாக வைக்க வேண்டும்.

9. பயன்பாட்டில் இல்லாத போது அதனுடைய பெட்டியிலோ அல்லது விக் ஸ்டாண்டிலோ தான் விக்கை வைக்க வேண்டும்.

10. தயாரிப்பாளர்கள் கூறுகின்ற முறையில், மாதம் ஒரு முறையாகிலும் விக்கை கழுவிச் சுத்தம் செய்து முடி உலர்வதற்கு வைக்க வேண்டும்

விக் அணியும் முறை:

குட்டையான முடி உள்ளவர்கள், மடித்துக் கட்டி விக்குக்குக் கீழே வைத்து விடலாம். நீளமான முடியாக இருந்தால் செக்ஷன் செக்ஷனாகப் பிரித்துப் பின் செய்து சுருட்டி வைக்கலாம். ஸ்விம்மிங் கேப் போடுவது போல, நெற்றியில் தொடங்கி பின் பக்கமாக இழுத்து அணிய வேண்டும்.

நீண்ட நேரம் விக்கை அணிந்திருக்கக் கூடாது. அதிக பட்சம் 5 அல்லது 6 மணி நேரம் அணியலாம். மிக மென்மையான, கனமில்லாத விக் கூட மிகுந்த வியர்வையை உண்டாக்கும். அதிக வியர்வை தலைக்கும் தலை முடிக்கும் ஏற்றதல்ல. உங்கள் முடிக்கும் தலைக்கும் காற்று தேவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


Spread the love