வயதைக் குறைக்க புதிய யுக்திகள்

Spread the love

1940 – களில் 32 ஆண்டுகளாக இருந்த இந்தியர்களின் சராசரி வாழ்நாள் இன்று எழுபதை அடுத்து நிற்கிறது. நம் முன்னோர்களை விட நாம் இன்று நீண்ட நாட்கள் வாழ்கிறோம். அவர்களை வாட்டி வதைத்த பல கொடிய நோய்களினின்றும் இன்று நாம் விடுபட்டிருக்கிறோம். இதன் விளைவாக இவ்வுலக இன்பங்களை நம் உற்றார் உறவினருடன் சேர்ந்து துய்த்து மகிழுகின்ற வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.

இருப்பினும் வயது முதிர்கின்ற போது இயற்கையாகவே ஏற்படுகின்ற மூப்பியல் நோய்களான மூட்டுவலி, மூட்டுப்பிடிப்பு, கண்புரை நோய், சருமத் தொய்வு போன்றவைகள் தொல்லை தரவே செய்கின்றன. இவைகளை நோய் என்று கருதாமல் உடல்நிலையில் நிகழ்கின்ற மாற்றங்கள் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

மனித நாகரீகம் தோன்றிய நாள் தொட்டே முதுமையின் வரவைத் தாழ்த்தவும், தள்ளிப்போடவும், இளமையை என்றென்றைக்கும் இருத்திக் கொள்ளவும் மனித இனம் முயன்று வருகிறது. மூப்படைவதும் முதுமையுறுவதும் வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு அங்கம் தான். என்றாலும் மருத்துவ அறிவியலின் மாபெரும் வளர்ச்சியாலும், உணவியலில் ஏற்பட்டிருக்கின்ற பல உன்னதக் கருத்துக்களாலும் நீண்ட நெடுங்காலம் மனிதர்கள் வாழத் தலைப்பட்டிருக்கின்றனர். இந்த நீண்ட வாழ்க்கை ஒரு சுமையாக மாறாமல் நிறைவான மகிழ்வோடும் துடிப்பான உடலோடும் இருக்க வேண்டுமென்ற எண்ணம் இன்று ஒவ்வொருவரிடமும் தோன்றத் தொடங்கியுள்ளது.

மூப்பு எதனால் வருகிறது?

இந்த வினாவுக்கு ஏற்றதொரு விடையை இன்றுவரை மனிதரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மூப்பு எப்படி வருகிறது என்று சொல்லக்கூடிய அளவு அறிவியல் இன்று வளர்ந்திருக்கிறது. நாம் வாழுகின்ற சுற்றுச் சூழலின் விளைவாகவும், நம் பெற்றோரிடமிருந்து நாம் பெறுகின்ற ஜீன்களின் தன்மையாலும், அவற்றில் ஏற்படுகின்ற (Free Radicals) எனப்படும் தனிம அணுக்களின் தோற்றத்தினாலும் நமது உடல் மூப்படைகிறது.

ஆண்டுகள் செல்லச் செல்ல உடலுள்ளுறுப்புக்களில் சில அடிப்படை மாற்றங்கள் ஏற்படுகின்றன. எலும்புகள் தம் மணிச்சத்தை மெல்ல, மெல்ல இழக்கின்றன. வலுவான தசைக் கோளங்கள் குறைந்து கொழுப்புத்திசுக்களும் (Fat Tissues) இணைப்புத் திசுக்களும் கூடுகின்றன. இதயத்தின் உந்து சக்தி குறையத் தொடங்குகிறது. சிறுநீரகங்கள் செய்து வந்த தூய்மைப்பணிகளில் தேக்கம் தலைகாட்டுகிறது. நரம்புகள் செயல்திறம் குன்றுகின்றன. அருகிலுள்ள எழுத்துக்கள் கண்களின் பார்வையில் உருவிழந்து தெரியத் தொடங்குகின்றன. செவிப்புலனிலும் சிறுகச் சிறுகத் தாழ்ச்சி ஏற்படுகிறது. செரிவுறுப்புத் தசைகளின் செவ்வி (Tone) குறைவதனால் செரிமானத்தில் குறை உண்டாகிறது. மலங்கழிவதிலே சிக்கல் ஏற்படுகிறது.

மேலே விரித்துக் கூறப்பட்டிருக்கும் அனைத்து மாற்றங்களும் மூப்போடு தொடர்புடையவை தாம் என்றாலும் எல்லா மனிதரிடத்தும் இந்த மாற்றங்கள் ஒன்றுபோல் நிகழ்வதில்லை. இதற்குத் தலையாய காரணம் மனிதர்களின் மரபியல் கூறுகள் (Genetic Factors) தான் என்று அறிவியலார் கருதுகின்றனர். இது தவிர சுற்றுச் சூழல் தொடர்பினாலும், உணவு மற்றும் வாழ்க்கை முறைப் பழக்கங்களை ஒட்டியும் உடலில் மூப்பும் முதுமையும் ஏற்படக்கூடும். மரபணுப் பண்புக் கூறுகளால் ஏற்படும் மாற்றங்களைத் தற்போது நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் உடல் நலத்துக்கு உகந்த சுற்றுச் சூழலையும், உணவு முறைகளையும் வாழ்க்கை முறைகளையும், வாழ்க்கை நெறிகளையும் உண்டாக்கிக் கொள்வோமானால் நம் வயதை நம்மால் மறக்க முடியும், மறைக்க முடியும். வருகின்ற முதுமையைக் காலந்தாழ்த்தி வரச்செய்ய இயலும்.

உடல் மூப்படைவதைத் தடுத்து இளமை நலத்துடன் இருக்கச் செய்வதில் உணவு பெரும் பங்கு வகிக்கிறது என்று அண்மைய உணவியல் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. குழந்தை கருவில் இருக்கின்ற காலத்தில் தாய் உண்ணுகின்ற உணவிலிருந்தே இதன் தாக்கம் தொடங்கிவிடுகிறது.

உணவினால் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களினால் உந்தப்பட்டுப் பல தனிம அணுக்கள் (Free Radicals) தோன்றிச் செயல்படத் தொடங்குகின்றன. சங்கிலித் தொடர்போல் உடல் உறுப்புக்களில் மூப்பும் தளர்ச்சியும் தோன்ற இந்தத் தனிம அணுக்களே (Free Radicals) காரணம் என்பது பல ஆய்வுகளால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிலவகை மருந்துகள், வறுக்கப்பட்ட இறைச்சி, புகையிலை, அணுக்கதிர் வீச்சு, புறஊதாக் கதிர்கள் போன்றவைகளும் தனிம அணுக்களின் (Free Radicals) தோற்றத்தை அதிகரிக்கின்றன. இவைகளை எதிர்க்கவல்ல திறங்கொண்ட ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளைப் (Antioxidants) பெருமளவில் கொண்ட உணவுப் பொருள்களைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டுமென்று உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். விட்டமின் ‘சி’, விட்டமின் ‘ஈ’, மற்றும் விட்டமின் ‘ஏ’ யின் முன்னோடியான பீட்டா கரோட்டீன் போன்றவை ஐயமின்றி நிரூபிக்கப்பட்ட ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளாகும்.

எலுமிச்சை, நாரத்தை வகைப்பழங்களிலும் நெல்லிக்காயிலும், பச்சைக் கீரைகளிலும், முளைவிட்ட தானிய வகைகளிலும், தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவற்றிலும் விட்டமின் ‘சி’ மிகுந்து காணப்படுகிறது. விதைகளிலும், கொட்டைகளிலும், பருத்திவிதை, கோதுமை முளை எண்ணெய் போன்றவற்றிலும் காய்கறி, கீரை, மஞ்சள் நிறக்காய்கள், கிழங்குகள் போன்றவற்றிலும் பீட்டா கரோட்டின் நிறைந்திருக்கிறது.

காட்ராக்ட் எனப்படும் கண்புரை நோயானது விழிலென்ஸிலுள்ள புரோட்டீனை தனிம அணுக்கள் (Free Radicals) அழிப்பதால் ஏற்படுகின்ற ஒரு குறைபாடாகும். மாம்பழம், பப்பாளி போன்ற பழங்களையும் காரட் போன்ற மஞ்சள் நிறக்காய்கறிகளையும் பச்சைக் கீரைகளையும் உண்பவர்களிடையே கண்புரை நோய் அதிகளவில் இல்லை என்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மணிச்சத்தும் நார்ச்சத்தும் மிகுந்த காய்கறி உணவினால் செரிவுறுப்புகள் திறம்படச் செயல்படுவதுடன் நுண்மத் தொற்றை எதிர்க்கின்ற ஆற்றலும் உடலுக்குக் கிடைக்கிறது.

ஒவ்வொரு நாள் உணவிலும் கட்டாயமாக ஒரு கீரை வகையைச் சேர்த்துக் கொள்வோமானால் மேற்குறிப்பிட்ட மூன்று வகை ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளும் நமக்குக் கிடைக்க வழி ஏற்படுகிறது. சூரிய ஒளியில் புறஊதாக்கதிர்கள் (Ultra Violet Rays) உள்ளன என்று நாம் அறிவோம். வெப்ப நாடுகளில் சூரிய ஒளியின் தாக்கத்தால் கண்குறைபாடுகளும், சருமக் கோளாறுகளும் ஏற்படக்கூடும். இதைத் தவிர்ப்பதற்காகக் குடையைப் பயன்படுத்துகின்ற பழக்கத்தையும், ஆழ்ந்த நிறமுடைய கண்ணாடிகள் அணிவதையும் பழக்கமாகிக் கொள்ள வேண்டும்.

ஏறத்தாழ 25 வயது அளவில் உடலின் வளர்ச்சி நிலைத்து நின்றுவிடுகிறது. அதன் பின்னர் உடல் வளர்ச்சிக்கென தனியாக உணவு எதுவும் தேவையில்லை. இயல்பான வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான சொற்ப உணவே போதுமானது. வயது ஏற ஏற உணவுத் தேவை குறைந்து கொண்டே வரத் தொடங்குகிறது. ஆனால் நடைமுறையில் எவரும் இதை உணர்வதில்லை. 25 வயதில் தாம் உண்ட உணவின் அளவையே 40 வயதிலும் உண்டு வரத் தலைப்படுகின்றனர்.

இதன் விளைவாக 40 வயதாகின்ற போது எடை மட்டுக்கு மிகுகின்றது. வயிறு முன்னால் துருத்துகிறது. உடலெங்கும் கொழுப்புக் கோளங்கள் உருவாகின்றன. இதில் இன்னொரு விந்தை என்னவெனில், பெற்ற பிள்ளைகள் அனைவரும் மணம் முடித்துத் தொழிலென்றும், பணியென்றும் தூரதேசங்களென்றும் பிரிந்து விடுகின்ற போது அந்த இழப்பை ஈடு செய்வதாக எண்ணிக் கொண்டு அளவிற்கு மீறி உண்ணத் தொடங்குகின்றனர் பலர். இதனால் உடல் சிதைவுறுவது விரைவுபடுத்தப்படுகிறது.

மூப்பின் சாயல் உடலில் படியத் தொடங்குகின்ற போதே உணவைக் குறைக்கத் தொடங்கி விட வேண்டும். நன்கு வேகவைக்கப்பட்ட, கொழுப்பில் குறைந்த, எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். பழங்களும், காய்கறிகளும், கீரைவகைகளும் உணவின் பெரும்பகுதியை நிறைக்க வேண்டும். இதமான காலை உணவும், மிதமான பகலுணவும் குறைவான இரவு உணவும் கொள்ள வேண்டும். இதனால் உடலின் இரத்தச் சுழற்சியில் கொழுப்பு மிகக் குறைந்த அளவே இருக்கும். அடிவயிறு கனக்காது. ஐந்தடியும் பத்தடியும் நடப்பதற்கு முன் ஆசுவாசப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. நடையுடையும் செயல்பாடும் எளிதாக இருக்கும். இடர் எதுவும் தோன்றாது.

உணவிற்குப் பின்னர் வருவன உடலுழைப்பும் உடற்பயிற்சியும். நாகரீகம் மிகுந்து வரும் இந்நாட்களில் உடலுழைப்பு அருகி வருகிறது. காரென்றும், போன் என்றும், மிக்ஸி என்றும், கிரைண்டர் என்றும், லிப்ட் என்றும் டி . வி. என்றும் கணக்கற்ற மின்னியக்க சாதனங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்ட காரணத்தால் சின்னச் சின்ன வேலைகளைக் கூடச் செய்வதை மனிதர்கள் தவிர்க்கின்றனர். நாளின் பெரும் பகுதியைச் சாய்விருக்கையில் அமர்ந்த வண்ணம் டி.வி. பார்த்துக் கழிக்கின்றனர். இவர்களைக் குறிப்பதற்காகவே ஆங்கிலத்தில் ‘Couch Potato’  என்றொரு புதுச் சொல் வழக்கிற்கு வந்துள்ளது.

பயன்படுத்தல் இல்லையேல் பயனற்றுப் போகும் என்னும் பொருள்பட Use Or Lose என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழியே உண்டு. படைக்கப்பட்ட பணியிலே ஈடுபடுத்தப்படாத உடலுறுப்புகள் நாளடைவில் நலிவுற்றுச் சிதைந்து போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இடர் மிக ஏற்படுத்தாத நடைமுறை உடலுழைப்பைத் தள்ளவோ தவிர்க்கவோ செய்யக் கூடாது. அத்துடன் இயன்றளவு எளிய உடற்பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

உடலுழப்பையும், உடற்பயிற்சிகளும் உடலை உரு அழியாமல் காக்கின்றன. சோம்பலையும், செயலின்மையையும் போக்குகின்றன. உடலின் இரத்தச் சுழற்சியைச் சீராக்குவதுடன் தேவைக்கேற்ற ஆக்ஸிஜனை உடலுறுப்புக்கு வழங்குகின்றன. தசைகளும் நரம்புகளும் விரைந்து செயல்படுகின்றன. தேவையற்ற கொழுப்பைக் கரைக்கின்றன. மூடப்பட்ட நுண் தமனிகளைத் (Arterioles) தந்துகிகளை (Capillaries) திறக்கின்றன. சிரையிய இரத்தத்தை (Venous Blood) இதயம் நோக்கி விரைந்து செல்லச் செய்கின்றன.

உடற்பயிற்சி உங்கள் இதய நுரையீரல் செயல்பாட்டைத் திறன்மிக்கதாக்குகிறது. எலும்புகளின் அடர்த்தியைக் கூட்டுகிறது. உடலின் நச்சுக்களை முனைந்து வெளியேற்றுகிறது. அவ்வளவு ஏன்? அளவான உடற்பயிற்சி மற்றும் விரைவான நடைப்பயிற்சி போன்றவற்றின் துணை கொண்டு உங்கள் உடல் மூப்படைவதை இருபது ஆண்டுகள் ஒத்திப் போடலாம். மாறாத இளமை உணர்வையும் பெறலாம்.

புகைப்பதை நிறுத்துங்கள்:   

ஐம்பது வயதிலேயே அறுபத்தைந்து வயதுத் தோற்றத்தைத் தரக்கூடியது புகைப்பழக்கம். காலத்திற்கு முன்பே கண்புரை நோயையும் தமனித் தடிப்பையும் (Arterio sclerosis) கூழ்மைத் தடிப்பையும் (Atherosclerosis) உண்டாக்கக்கூடியது. இதயம் மற்றும் இரத்தக் குழாய்களின் மீள் திறத்தையும் (Elasticity) உந்து விசையையும் பாதிக்கக் கூடியது. மாறாத கை கால் குடைச்சலையும் தீராத இருமலையும் ஏற்படுத்தக் கூடியது. அதுமட்டுமன்றி நடு வயதிலேயே சருமத்தில் திரை எனப்படும் தோல் சுருக்கத்தையும் கோடுகளையும் உண்டாக்கக்கூடும். சருமத்தின் பளபளப்பையும் மினுமினுப்பையும் போக்கக்கூடும். எனவே மூப்பை விலக்க நினைக்கும் ஒவ்வொருவரும் முதலில் புகைப்பதை விலக்க வேண்டும்.

முடிவாக மனதை அமைதியாக வைத்துக் கொள்ளப் பழகுங்கள். இயலுமானால், நேரம் இடங்கொடுத்தால் யோகமும் தியானமும் பழகுங்கள். அது உங்கள் தாங்கு திறத்தை (ADAPTOGENIC) உயர்த்தி இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மூளையின் செயல் திறத்தை அதிகரிக்கும், சீராகவும் தெளிவாகவும் சிந்திக்கின்ற ஆற்றலைத் தரும். இறை நம்பிக்கையுடன் இணைந்த தியானம் உடலிலும் உள்ளத்திலும் பல உடன்பாடான முன்னேற்றங்களை ஏற்படுத்தும். எனவே நாள்தோறும் இறையை வழிபடுங்கள். உடலும், உள்ளமும் என்றும் இளமையோடிருக்கவும் உங்களது உடல் வயதை மறைக்கவும் இதுவே சிறந்த வழி.


Spread the love