அழிஞ்சில் அனைத்து வகை நிலங்களிலும் வளரக் கூடியது. இது நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள சிறு மரமாகும். இதன் பழங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை போன்ற பூக்களையுடைய மரங்கள் உள்ளது. இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவ குணமுடையதாகக் கருதப்படுகிறது. இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் புதர் காடுகளிலும், வேலிகளிலும் தானாகவே வளர்கின்றது. அழிஞ்சில் இந்திய பகுதியில் காணப்படும் தாவரமாகும். அழிஞ்சில் மரமானது வாத, கோபம், கப தோஷம், சீழ்வடிதல், பெருநோய் போன்றவற்றை நீக்கும். இது பித்தத்தை உபரி செய்யும்.
தாவர விவரம்
மூலிகையின் பெயர் | அழிஞ்சில் |
தாவரப்பெயர் | ALANGIUM LAMARCKII |
தாவரக்குடும்பம் | ALANGIACEAE |
இன வேறுபாடு | கறுப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிற பூக்களுடையவை. |
பயன் தரும் பாகங்கள் | விதை, இலை மற்றும் வேர்ப்பட்டை |
மருத்துவ குணங்கள்
இது வாந்தி உண்டு பண்ணுதல், பித்த நீர் சுரப்பை மிகுத்தல், மலமிளக்கி உடல் தேற்றுதல், நோய் நீக்குதல், வயிற்றுப் பூச்சிகளைக் அழித்தல், காய்ச்சல் வருவதை தடுத்தல் என பல்வேறு மருத்துவ குணங்களையுடையது. இதன் வேர், காய், கனி போன்றவை வாத நோய்க்கு ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
அழிஞ்சில் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் கொடுக்க வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம்.
அழிஞ்சில் வேர் பட்டையின் பொடி கசப்பு, குமட்டல் மற்றும் காரத்தன்மையுடையது. இது இரத்த அதிகாரம், கிருமி ரோகம், குட்டம், இரணம், தோல் ரோசம், ஜுரம், வயிற்று உப்பிசம், வயிற்று நோய், விசக்கடி முதலியவற்றை நீக்குகிறது. வேர்பட்டை சூரணம் குட்டம், வாதரோகம், மேகவாயு பிடிப்புகளுக்கு நல்லது.
விஷக்கடி நீங்க
அழிஞ்சில் வேர் பட்டையை நன்கு உலற வைத்து பொடிக்கவும். பின் இதனை 100 மில்லி கிராம் வீதம் காலை, மாலை என ஒரு வாரம் வரை கொடுத்து வர விஷக்கடிகளான பாம்பு, எலி, வெறிநாய், தொழுநோய், கிரந்திப் புண், ஆகியவை குணமாகும்.
கப நோய்கள் நீங்க
அழிஞ்சில் இலையை அரைத்து ஒரு கிராம் அளவு காலை, மாலை குடித்து வர கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.
தொழுநோய் குணமாக
சிவப்பு அழிஞ்சில் வேர் பட்டைத் தூள் 100 மில்லி கிராம் கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சம அளவு கலந்து பொடி செய்து 200 மில்லி கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர தொழுநோய் நீங்கும்.
சரும நோய்கள் நீங்க
அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை உடலில் தடவி வர தோல் நோய்கள் நீங்கும். இதனை ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.
இரணங்கள் நீங்க
அழிஞ்சில் வேரிலிருந்து எடுக்கப்படும் தைலத்தை இரணங்கள் மீது கட்டலாம். அழிஞ்சில் வேர், விழுதி வேர் இவற்றை சம அளவு எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். பின் 5 முதல் 6 நாள் வரை நிழலில் உலர்த்தி, பெரிய மட்கலத்தில் சேர்த்து மூடவும். ஏழு சீலை செய்து முறைப்படி குழித்தைலம் இறக்கவும். இதனை வடிகட்டி சீசாவில் வைத்து புறை கொண்ட இரணத்தில் மேல் கட்டி வைக்க அவை விரைவில் ஆறும்.
ஆயுர்வேதம்.காம்