அதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா?

Spread the love

‘எனக்கு என்னமோ தெரியல… அதிகமாக தூங்கறேன், எழுந்திருக்கவே முடியல’ இந்த வசனத்தை இப்போது பலரிடமும் கேட்க முடிகிறது. கண்களில் சோர்வுடன் ஒருவித பலவீனத்துடன் தங்கள் பணியைச் செய்யத் தொடங்குகின்றனர். இதற்கு ரத்தச்சோகை காரணமாக இருக்கலாம். திசுக்களுக்கு ஆக்சிஜன் கொண்டு சேர்க்கும் பணியை ரத்தச் சிவப்பு அணுக்கள் மேற்கொள்கின்றன. ரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதையே ரத்தச்சோகை என்கிறோம்.

ரத்தச்சோகை இருக்கும்போது, வெகு விரைவில் உடல் சோர்வடையும். சோர்வு ஏற்படும்போது ஓய்வெடுக்கத் தோன்றும். ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு அதிகத் தூக்கம் வரும். இரும்புச்சத்து, வைட்டமின் பி12 குறைபாடு, ஹீமோகுளோபின் உற்பத்திக் குறைவு, அவை குறுகிய காலத்தில் அழிக்கப்படுவது உள்ளிட்ட பல காரணங்களால் ரத்தச்சோகை ஏற்படலாம்.

தீர்வுகள்

எதனால் ரத்தச்சோகை ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். லேசான ரத்தச்சோகைக்கு சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பதே போதுமானது.

மிதமான, தீவிர ரத்தச்சோகை எனில், மருத்துவர் பரிந்துரையின்படி மாத்திரைகள், ஊசி போட்டுக்கொள்ளலாம். உணவுமுறை மாற்றம் மேற்கொள்வது முக்கியம்.

ரத்தச்சோகையைத் தீர்க்கும் உணவுகள்

கீரைகள், சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் பழங்கள், உலர்ந்த திராட்சை, நட்ஸ், பனைவெல்லம், முளைக்கட்டிய தானியங்கள், சிவப்பு கொண்டைக்கடலை, உளுந்து, கம்பு, வரகு, எள், அத்தி, பப்பாளி, நெல்லி, கறிவேப்பிலை உள்ளிட்ட இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம்.

ரத்தச்சோகை அறிகுறிகள்

சோர்வு, மயக்கம், தலைவலி, மூச்சுத்திணறல், தலைச்சுற்றல், பலவீனம், வெளிர் சருமம், மலத்தின் நிறத்தில் மாற்றம் காணப்படும்,

– ஜெ.நிவேதா


Spread the love
error: Content is protected !!