இரத்த சோகையைத் தீர்க்கும் உணவு

Spread the love

“வெறும் வாயில பச்சரிசி தின்னுயா? உன் கல்யாணத்தில மழை பெய்யும் பாரு! என்று  கூறும் வழக்கு மொழியைக் கேட்டிருப்போம். சுவர் ஓரமாக உட்கார்ந்து கொண்டு சுவற்றுக் காரையை உடைத்து ரசித்து சாப்பிடும் குழந்தையையும், திருட்டுத்தனமாக திருநீரை ரசித்து சாப்பிடும் மகளிரையும் நாம் பார்த்திருப்போம்.

யார் இவர்கள்? என்ன ஆயிற்று இவர்களுக்கு? இரும்புச் சத்து குறைவால் ஏற்படும் ரத்தசோகைதான் இந்த வேடிக்கைக்கு காரணம். ‘கேன்சர்’ முதல் வாய்க்குள் நுழையாத ‘எதோ ஃபீலியா’ வரை அச்சமும் சக்கரையும் படும் நாம், பல சமயம் அலட்சியமாக இருந்து விடுவது இரத்த சோகை விஷயத்தில் தான்.

வெளிறிய கண்கள், நா, நகம் மற்றும் உள்ளங்கை, அதைப்பான (குளுப்பையான) முகம், படபடப்புடன் இதயம் துடித்தல் (மருத்துவ துறையில் இதை ‘குதிரை ஓட்டம் போன்ற துடிப்பு’ என்பர்) போன்ற குறிகளுடன், நடந்தால் மூச்சு இறைப்பு, ஆயாசம், சோர்வு, ஒரு வேலையிலும் பிடிப்பு இல்லாமல் வெறுப்பு போன்றவையே சோகையின் குணங்கள். ஆனால், இவை எல்லாம் இரத்தத்தில் இரும்புச்சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பின்னர்தான் தெரிய வரும். லேசான சோகையில், பெரும்பாலும் எந்தக் குணங்களும் தெரிவதில்லை.

ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு இரத்தசோகை தொந்தரவு அதிகம் வரும் வாய்ப்பு உண்டு. மாதவிடாயில் ஏற்படும் இறப்பு, குழந்தை உண்டாகி இருக்கும் போது, பாலூட்டும் போது என பெண்களுக்கான பிரத்யேக பணியிலேயே அதிக இருப்புச் சத்து இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். மாதவிடாயில் அதிக இரத்தப் போக்கு அல்லது மாத விடாயில் ரத்தமே போகாது இருப்பது என இரண்டுக்குமே சோகை ஒரு காரணம். மாதவிடாய் கோளாறுகள் பலவற்றுக்கும் சோகையே முதல் காரணம்.

இவை தவிர, சரியான உணவு இல்லாமை, அக்கறை இல்லாத ஊட்டச்சத்து குறைந்த உணவு இவையே இரத்தசோகைக்கு மிக முக்கியக் காரணங்கள். மூல நோயில் ஏற்படும் இரத்த இழப்பு, சிறுநீரக நோய்கள், ஈரல் நோய்கள், வயிற்றுப் பூச்சிகள், சில புற்று நோய்கள் என பிற நோய்களிலும் இரத்தசோகை ஏற்படக்கூடும்.

முதலில், இரத்தசோகை என்னும் அனீமியா உள்ளதா என்பதை மருத்துவர் உதவியுடன் தெளிவாக அறிந்து கொள்வது முக்கியக் கடமை. சிவப்பு அணுக்களில் உள்ள இரும்புச் சத்துதான், உடல் முழுவதும் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் முக்கிய பணியைச் செய்கிறது. சரியான இரும்புச் சத்து இல்லை எனில், சோர்வும் சோம்பலும் என தொந்தரவுகள் ஒவ்வொன்றாக தொடங்கிவிடும்.

அனிமியாவை, தேர்ந்தெடுத்த உணவின் மூலமே சரியாக்கிவிட முடியும். அதற்கான முதல் தேர்வு, கீரை, சிறுகீரை, முருங்கைக் கீரை, அகத்திக்கீரை, பசலைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை என கிடைக்கும் எல்லா கீரைகளிலும் இரும்புச் சத்து அதிகம் உண்டு.

கீரையைப் பொறுத்தமட்டில் சங்கடப்பட வைக்கும் விஷயம், சந்தைக்கு வரும் கீரைகளில் தெளிக்கப்படும் கொடிய நச்சுத்தன்மையுள்ள பூச்சிக் கொல்லிகள் தான். வாய்ப்புள்ள ஒவ்வொருவரும், சிறி சிறு தொட்டிகளில் ‘கிச்சன் கார்டன்’ என கீரைகளை வீட்டில் வளர்த்து அன்றாடம் பறிப்பது மிகமிக நல்லது. வீட்டு கிச்சன் கழிவுகளும், இயற்கை உரங்களும், வேப்பெண்ணெய் தூவலும் பாதுகாப்பாக  உங்கள் கீரைகளைக் கூடுதல் சத்துடன் உருவாக்கிவிடும்.

இரும்புச் சத்து மிகக் குறைவாக உள்ள பட்சத்தில், சத்து மாத்திரைகள் மிகவும் அவசியமானது. உங்கள் குடும்ப மருத்துவர் பரிந்துரைக்கும் சரியான சத்து மாத்திரையை எடுப்பது அவசியம். கருவுற்ற மற்றும் பாலூட்டும் காலங்களில் இரும்புச் சத்து மாத்திரைகள் அவசியமாகவே தேவைப்படுகிறன. சித்த மருந்துகளில் உடலின் பித்தத்தைச் சீராக்கி, இரும்புச் சத்தை அளித்திடும் மூலிகை மருந்துகள் நிறையவே உண்டு.

இரும்புச் சத்து மருத்துகள், வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்துவது உண்டு. இரத்தசோகைக்கு அளிக்கப்படும் சித்த மூலிகை மருந்துகளின் சிறப்பே, மலத்தையும் எளிதாகக் கழிக்க வைத்து, குடல் புண்ணையும் ஆற்றக்கூடியது என்பது தான்.

அனீமியா, மூலம், அதிக மாதவிடாய் ரத்தப்போக்கு போன்ற பிற நோய் வந்திருந்தால் அதற்கான சிகிச்சை முக்கியம். வெறும் சத்து மாத்திரை போதாது.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் ஒவ்வொருவரும் தம் இரத்தத்தில் உள்ள இரும்பின் அளவை அறிந்து கொள்ள வேண்டும். இனி அரிசி உண்ணும் ஆவல் அதிகமானால், ‘அட! கல்யாணத்துல மழை பெய்யும் அவ்வளவு தானே!’ என்று இருக்க வேண்டாம். இரத்தம் ஏற்றும் அளவுக்கு, சோகை நம்மை சோகப்படுத்திவிடும். ஆகையாய் இனி இரத்த சோகையை தவிர்ப்போம். இனி வரும் அடுத்தடுத்த மாதங்களில் இரத்த சோகையை தவிர்க்கும் கீரை வகைகளை பார்க்கலாம்.

 -தொடரும்.

ஸ்ரீ.ராஜேஸ்வரி ஸ்ரீதர்


Spread the love