இரத்த சோகை நீங்க கொத்தமல்லி

Spread the love

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் ஒரு வாசனைப் பொருளே கொத்தமல்லிக்கீரையாகும் கொத்தமல்லிக் கீரையை அதன் மணத்திற்காக பயன்படுத்துகிறோம் என்று நம்மில் பலர் நினைக்கின்றனர்.

ஆனால், அதன் மருத்துவக் குணங்களோ ஏராளம் அவற்றையெல்லாம் நாம் அறிந்தோமானால் கொத்தமல்லிக்கீரை நம் அன்றாட உணவில் ஒர் முக்கிய அங்கம் வகிக்கும்.

கொத்தமல்லி தோன்றிய இடம் மத்திய தரைக்கடல் நாட்டுப்பகுதிகளாகும். முற்காலத்திலேயே எகிப்தில் பயிரிடப்பட்டுள்ளது. இச்செடி ஒன்று அல்லது இரண்டு அடி உயரம் வரை வளரும் மூன்று மாதத்தில் பூத்து காய்க்கும். உலகிலேயே இந்திய மல்லி தான் தரமுடையதாக விளங்குகிறது. இந்தியாவிலிருந்து மற்ற உலக நாடுகளுக்கு மல்லி ஏற்றுமதியாகிறது.

கொத்தமல்லியின் தாவரவியல் பெயர் கொரியாண்ட் ரம் சாட்டைவம்என்பதாகும். ஆங்கிலத்தில் கொரியாண்டாஎனவும், தமிழில் உத்தம் பரி, தானியம், தேனிகை, உருளரிசி, நூறு கிராம் மல்லித்தழையில் கீழ்க்கண்ட அளவில் சத்துக்கள் உள்ளன.

நீர்ச்சத்து-86.3கி, புரதச்சத்து-3.3கி, கொழுப்பு-0.6கி, தாது உப்புகள்-2.3கி, நார்ச்சத்துகள்-1.3கி, மாவுச்சத்து-6.3கி, எரிசக்தி-44கலோரி, சுண்ணாம்புச்சத்து-154மி.கி., மணிச்சத்து-75மி.கி., இரும்புச்சத்து-18மி.கி., நியாசின்-0.08மி.கி., வைட்டமின் சி‘-135மி.கி.,

மருத்துவ பயன்கள்

கொத்தமல்லிக் கீரையை துவையலாகச் செய்து, சாதத்துடன் சேர்த்து உண்ணும் போது கொத்தமல்லி பசியைத் தூண்டி, செரிமானத்தை அளித்து உடலில் இரத்தம் ஊறிட துணை புரிகிறது. கொத்தமல்லியை அன்றாட உணவில் மிகுதியாக சேர்ப்பதால் சிறுநீர் நன்கு வெளியேறும். தாது புஷ்டியை ஊக்குவிக்கும். தலைசுற்றல், பித்தம் உள்ளவர்கள் மல்லிக்கீரையை அரைத்து பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து சாப்பிட மயக்கம், தலைச்சுற்றல் பித்தம் குறையும்.

இரத்த மூல நோய் கடுமையாகும் போது தனியாவைக் கஷாயம் செய்து அதில் பசும்பாலும் பனங்கல்கண்டும் சேர்த்துப் பருகி வர அந்நோய் கட்டுப்படும். செயின் ஸ்மோக்கர் எனப்படும் புகைப்பிடிப்போரின் இரத்தத்தில் தூய்மையும், நிறமும் கெட்டு, அதனால் கண்கள், கன்னம், உதடுகள் கறுத்துக் காணப்படும். இதனைப் போக்க கொத்தமல்லி இலையைப் பச்சையாகப் பறித்துக் கழுவி சிறிதளவு வாயிலிட்டு மென்று விழுங்கவும். ஒன்று இரண்டு மாதங்கள் இப்படிச் செய்து வர கருமை நிறம் மாறி பழைய நிறம் திரும்பும்.

இரண்டு வயதைத் தாண்டும் குழந்தைகளுக்கும், மகப்பேறு அடைந்த தாய்மார்களுக்கும் கட்டாயம் கீழ்க்கண்டவாறு கொத்தமல்லி துவையல் செய்து உண்பது இரத்த சோகைநோயை விரட்டும் வழியாகும்.

கொத்தமல்லித் துவையல்

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி –1பிடி

உளுந்து      –2ஸ்பூன்

இஞ்சி     –1துண்டு

புளி       -சிறிது

பெருங்காயம்-1துண்டு

மிளகு      –10

நெய்       –1டீஸ்பூன்

தேங்காய்த்துருவல்-1டீஸ்பூன்

செய்முறை

கொத்தமல்லி இலைகளை ஆய்ந்து தனியே வைக்கவும்.

உளுந்து, இஞ்சி, புளி, பெருங்காயம், மிளகு ஆகியவற்றை நெய் ஊற்றி வறுத்து வதக்கவும்.

தேங்காய்த்துருவல், கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி துவையலாக்கவும். இத் துவையலை சூடான சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சுக்கு மல்லி காபி

கொத்தமல்லியின் விதை தனியா எனப்படும். 200 கிராம் தனியா, 100 கிராம் சுக்கு (தோல் சீவி) 10 கிராம் ஏலக்காய் இம்மூன்றையும் லேசாக வறுத்துப் பொடி செய்து 1 ஸ்பூன் அளவு தினசரி எடுத்து காலி டிகாஷன் போல் தயாரித்துப் பால், தேன் கலந்து பருகவும்.

இவ்வாறு செய்து குடிப்பதால், இக்காபி உடலின் உஷ்ண நிலையை சீராக்கும். இரத்த அழுத்தம் சமநிலையில் இருக்கும் பசி உரிய வேளையில் எடுத்து உணவு செரிமானமாகும். பித்தம் தணியும். தினசரி காலையில் பல் துலக்கிய பின் சிறிது கொத்தமல்லி இலைகளை வாயிலிட்டு மென்று அதற்குப் பின் வெந்நீரில் வாய்க் கொப்பளித்து வர, பயோரியா நோய் வராது. ஈறுகளில் இரத்தம் கசியாது. பற்களில் கறை படியாது. வாய் மணக்கும் தோல் வியாதிகளுக்கு கொத்தமல்லி சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தேமல்கள் உள்ள இடத்தில் இவ்விலைகளை பசும்பால் விட்டு அரைத்துப் பூசி 15 நிமிடம் கழித்துக் குளிக்கவும். சிறிது நாட்களில் தேமல் மறையும்.

கொத்தமல்லி இலையை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கம் கட்டிகளுக்குக் கட்டி வர அவை பழுத்து உடைந்து சீக்கிரம் ஆறும். வயிற்றுக்கோளாறு காரணமாக வரும் நீண்ட ஏப்பம் நிற்க தனியாவுடன் சிறிது சோம்பு சேர்த்து கஷாயம் செய்து குடிக்கவும்.

இவ்வளவு மருத்துவ குணமும், நல்ல மணமும் கொண்ட கொத்தமல்லி இலைகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி அதன் மருத்துவ குணங்களை முழுமையாகப் பெற வேண்டும். இவ்வாறு கொத்தமல்லியின் பயன்களை கூறிக் கொண்டே போகலாம். கொத்தமல்லியை எவ்வாறு உண்டாலும் நன்மை தரக்கூடியதே. ஆதலால் கொத்தமல்லியை அன்றாட உணவில் ஒர் அங்கமாக்கி வாழ்வில் நலம் பெறுவோம்.

கொத்தமல்லி அடை

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி   –2கப்

கடலைப்பருப்பு –1/2கப்

துவரம்பருப்பு  –1/2கப்

வெந்தயம்    –1டே.ஸ்பூன்

மிளகு        –1டீஸ்பூன்

சீரகம்        –1டீஸ்பூன்

பச்சை மிளகாய்-4

கொத்தமல்லி  –2கட்டு

கறிவேப்பிலை உருவியது-1/2கப்

இஞ்சி     –1/2அங்குலத்துண்டு

உப்பு       -தேவையான அளவு

பொடியாக அரிந்த வெங்காயம்-1கப்

சூரியகாந்தி எண்ணெய்-சுடுவதற்கு

செய்முறை

புழுங்கலரிசியோடு கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அதோடு மிளகு, சீரகம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து மெல்லிய ரவை பதத்திற்கு அரைக்கவும். கடைசியில் உப்பு சேர்த்து அரைக்கவும்.

அரைத்த பிறகு வெங்காயத்தை கலந்து சிறிய அடைகளாக நான் ஸ்டிக் தவாவில் ஊற்றி சூடாக பரிமாறவும். வேண்டுமென்றால் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சுடலாம்.

கொத்தமல்லி சட்டினி

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி  –1பெரிய கட்டு

தக்காளி        –8பழம் (மீடியம் சைஸ்)

வெள்ளைப் பூண்டு-7பல்

இஞ்சி          –11/2 அங்குலத் துண்டு

புளி            -பெரிய நெல்லிக்காயளவு

சிகப்பு மிளகாய் –10

உப்பு           -தேவையான அளவு

வதக்க         -எண்ணெய் சிறிதளவு

தாளிக்க

நல்லெண்ணெய்  –2டீஸ்பூன்

கடுகு            –1/2டீஸ்பூன்

வெந்தயம்       –1டீஸ்பூன்

பெருங்காயம்    –1சிட்டிகை

செய்முறை

தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாயோடு சேர்த்து வதக்கவும்.

தக்காளியில் நீர் வற்றியதும் பூண்டு, இஞ்சி, புளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

உப்பு சேர்த்து பதமாக சட்டினி போல அரைக்கவும்.

நல்லெண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம்.

இட்டிலி, தோசையோடு பரிமாறலாம்.

கொத்தமல்லி சூப்

தேவையான பொருட்கள்

புளி   -எலுமிச்சை அளவு

உப்பு  -தேவையான அளவு

மிளகாய் வற்றல்-6

வெல்லம்  -நெல்லிக்காய் அளவு

மிளகு     –1/4டீஸ்பூன்

சீரகம்     –1/2டே.ஸ்பூன்

நெய்     –2டீஸ்பூன்

தண்ணீர்  –500மி.லி

கொத்தமல்லி-சிறிது

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் உப்பு, புளியைப் போட்டு நன்கு கரைத்து மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு பின்பு, அதில் வெல்லமும் போட்டுக் கொதிக்க விட வேண்டும். நீர் நன்றாக கொதித்ததும் மிளகு, சீரகம், ஆகியவற்றை நெய் விட்டுத் தனித்தனியாக வறுத்துப் பொடி செய்து சூப்பில் போட்டு நன்றாக கொதித்ததும் அதனை இறக்கி நீர்விட்டுக் கிளறி வைக்கவும். சிறிது நேரத்திற்குப் பிறகு சூப் தெளிந்ததும் தெளிவை மட்டும் ஒரு பாத்திரத்தில் இறுத்துக் கொண்டு கொத்தமல்லியை சூப்பில் போடவும். சூடாகப் பரிமாறவும்.

கொத்தமல்லி பொடி

தேவையான பொருட்கள்

உலர்ந்த கொத்தமல்லி இலை-3கப்

சிகப்பு மிளகாயம்   –3/4கப்

தனியா            –1/4கப்

உளுத்தம்பருப்பு    –3/4கப்

பெருங்காயம்      -சிறிதளவு

உப்பு              -தேவையான அளவு

புளி               -சிறிய எலுமிச்சையளவு

செய்முறை

இளம் கொத்தமல்லித் தழைகளை சிறிது காம்போடு கிள்ளி எடுத்து நன்றாக மண்போக கழுவி வடிய வைக்கவும். இதை ஒரு துணியின் மேல் பரப்பி முதலில் நிழலில் காய வைக்கவும்.

ஈரம் வற்றியதும் ஒரு தட்டில் பரப்பி வெய்யிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்ததும் அளந்து கொள்ளவும். தனியா, மிளகாய், உளுந்து ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.

அதோடு உப்பு, பெருங்காயம், சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்யவும். கடைசியில் அதில் புளி, உலர்ந்த கொத்தமல்லி தழை சேர்த்து பொடிக்கவும்.சூடான அரிசி சாதத்துடன் பரிமாறவும்.

கொத்தமல்லிப்புலவு

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி  –1கப்

பட்டை          –1அங்குலத்துண்டு

இலவங்கம்      –2(அ)3

ஏலக்காய்        –2

வெங்காயம்      –2

தக்காளி          –2

பட்டாணி உரித்தது-1/4கப்

எண்ணெய்       –11/2டே.ஸ்பூன்

உப்பு             -தேவையான அளவு

சிப்பிக் காளான்   –200கிராம்

அரைத்துக் கொள்ளவும்

கொத்தமல்லித் தழை –1கட்டு

இஞ்சி                –1/2அங்குலத்துண்டு

பூண்டு                –4பல்லு

பச்சைமிளகாய்        –6

சீரகம்                –1/2டீஸ்பூன்

சிறு வெங்காயம்      –8

செய்முறை

வெங்காயத்தையும் தக்காளியையும், கழுவிய காளானையும் ஓரங்குல நீளத்துண்டுகளாக அரிந்து கொள்ளவும். அரிசியைக் கழுவி 5 லிருந்து 10 நிமிடம் வரை ஊற வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி வாசனைப் பொருட்களைச் சேர்க்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும். அதோடு காளான் சேர்த்து வதக்கிய பின் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து விழுதாகும் வரைத் தொடர்ந்து வதக்கவும்.

பிறகு அரைத்த மசாலாவைச் சேர்த்து, மெதுவாகக் கலக்கி, மிதமான அனலில் நல்ல வாசனை வரும் வரை வதக்கவும். ஈரம் வற்றியவுடன் ஊற வைத்த அரிசியைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

இரண்டு கப் கொதி நீர் விட்டு, ருசிக்கேற்ற உப்பும், பட்டாணியும் சேர்க்கவும். நன்றாகக் கலந்து விடவும். நேரடியாக குக்கரில் வைத்து மூடி, வெயிட் வைத்து குறைந்த அனலில் 10 நிமிடங்கள் வைக்கவும்.


Spread the love