இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12, போலிக் அமிலம் போன்ற சத்துக்கள், இரத்தம் பெருகி உடல் நல்ல முறையில் இயங்க மிகத் தேவையானவை. இவை உடல் வளர்ச்சிக்கும், நலனுக்கும் மிகவும் தேவையானவை. இரும்புச்சத்து இரத்த விருத்திக்கு தேவையானவை உலோகச் சத்துக்கள். நமது இரத்தத்தில் மிகவும் நுண்ணிய சிவப்பு அணுக்கள் உள்ளன. இவ்வணுக்களில் ஹீமோகுளோபின் என்ற சிவப்புப் பொருள் உள்ளது. இதனுள் தான் இரும்புச் சத்து அதிகளவில் உள்ளது.
ஹீமோகுளோபின் வேலை என்னவென்றால், உயிர் வாழ அத்தியாவசியமான ஆக்சிஜனை உடலின் எல்லாத் திசுக்களுக்கும் எடுத்துச் செல்கிறது. இரும்புச் சத்து குறையும் பொழுது ஹீமோகுளோபின் அளவும் குறைவதால் உடலுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. ஆகவே இரும்புச் சத்துக் குறைவில் இரத்தம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை.
உடலில் எல்லாத் திசுக்களுக்கும் கெடுதல் ஏற்படும். இதயம், நுரையீரல், கல்லீரல், இரைப்பை மற்றும் குடல் போன்ற முக்கிய உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு சீர்கெடும். இரும்புச் சத்துக் குறையும் பொழுது இரத்தச் சோகை மட்டும் ஏற்படுவதில்லை. உடலின் எல்லா உறுப்புக்களும், திசுக்களும் பாதிக்கப்படுகின்றன. இரத்த சோகை உடல் வளர்ச்சியை, ஆரோக்கியத்தைப் பெருமளவில் பாதிக்கும் கடுமையான சத்துக் குறை நோயாகும்.
கருவுற்ற தாய்க்குச் சோகை இருந்தால், சிசு குறை எடையுடன் பிறக்கும். அதோடு நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து, பல தொற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். கொக்கிப்புழு மற்றும் பல குடற்புழுக்கள் நோய், சீதபேதி, காசநோய், நிமோனியா போன்ற நோய்களும் சோகையை அதிகமாக்கும்.
இரத்தச் சோகை உடல் முழுவதையும் பாதிப்பதால் முதலில் சோர்வு, பசியின்மை, வேலை செய்ய இயலாமை, மயக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும். குழந்தைகள், சிறுவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி ஏற்படும். சோகை கடுமையாகும் போது உடல் வெளிறி மேல் மூச்சு வாங்கும். கொக்கிப் புழுவால் சோகை ஏற்படும் போது உடல் முழுவதும் வீங்கி விடும். இதயமும் பலவீனமடையும். இரத்தச் சோகையால் அதிக நாள் அவதிப்படுவோருக்கு நகங்களில் கரண்டி போன்ற குழி விழும்.