சிறுகுடலும், பெருங்குடலும்

Spread the love

ஜீரண மண்டலத்தின் அவயங்களில், சிறுகுடலும், பெருங்குடலும் முக்கியமானவை. இரண்டும் இணைந்த ‘குடல்’ வயிற்றிலிருந்து ஆசன வாய் வரை நீடித்த அவயம். குடலில் முதல் பகுதியான சிறுகுடல், மூன்றாக பிரிக்கப்படுகிறது. டியோடினம் (சிறுகுடல் முன்பகுதி), ‘ஜெஜுனம்’ (இடை சிறுகுடல்) மற்றும் ‘இலியம்’ (கீழ்ச்சிறுகுடல்). சிறுகுடலின் நீளம் சுமார் 21 அடி ஆகும்.

டியோடினம்:-f

வயிற்றின் பைலோரியஸ் பகுதியிலிருந்து ஜெஜுனம் வரை உள்ள பகுதி. வயிறு உணவுக் கூழை டியோடினத்திற்கு செலுத்துகிறது. சிறிது சிறிதாக சிறுகுடலின் ஜீரண சக்திக்கேற்ப உணவு டியோடினத்திற்கு அனுப்பப்படும். நிரம்பியவுடன், டியோடினம், உணவு அனுப்புவதை நிறுத்தும் படி வயிற்றுக்கு செய்தி அனுப்பும். எக்காரணம் கொண்டும் மீண்டும் உணவுக் கூழை திரும்பி வயிற்றுக்குள் செல்ல அனுமதிக்காது. உணவைத் தவிர, டியோடினத்திற்கு கணையத்திலிருந்து கணைய என்சைமும், பித்தப்பை, கல்லீரல் இவற்றிலிருந்து பித்த நீரும் வருகின்றன. இவைகள் உணவை ஜீரணமாக்க உதவுகின்றன. என்சைம் மற்றும் பித்த நீரிலும் அல்கலைன் (Alkaline) ஆக இருப்பதால், உணவின் அமிலத்தன்மை கட்டுப்படும். தவிர பைரிஸ்டால்சிஸ் எனப்படும் அலை போன்ற தசை அசைவுகளால் உணவு சிறுகுடலின் என்சைம், பித்தநீர், இவற்றுடன் நன்கு கலந்து, முன் செல்ல உதவுகின்றன.

முதல் சில சென்டிமீட்டர் வரை டியோடினத்தின் சுவர்கள் மிருதுவாக, மென்மையாக இருந்தாலும், பிறகு மடிப்புகள், ‘வில்லஸ்’ எனப்படும் ‘வெல்வெட்’ துணியில் நிமிர்ந்து நிற்கும் நூல்கள் போன்றவை நீட்டிக் கொண்டிருக்கும். இவை சிறுகுடலின் பரப்பளவை அதிகரித்து சீக்கிரமாக உணவு சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கு உதவுகின்றன.

டியோடினத்தின் சுவரில் ‘பிரன்னர்’ சுரப்பிகள் (Brunner’s glands) உண்டாக்கும் அல்கலைன் சாறுகள் ‘கோழை’ நிறைந்தவை. இவை வயிற்றிலிருந்து வரும் அமிலம் நிறைந்த உணவுக் கூழின் அமிலத் தன்மையை மாற்றுகின்றன.

டியோடினம் ‘அல்சர்’ நோயால் பாதிக்கப்படும் சாத்தியங்கள் அதிகம். எச்-பைலோரி எனப்படும் கிருமியினாலும் வயிற்றின் அமிலத்தன்மை அதிகரிப்பதாலும் டியோடினம் அல்சர் உண்டாகிறது.

ஜெஜுனம், இலியம்:-

இந்த பகுதிகள் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை கிரகித்துக் கொள்ள உதவுகின்றன. பொதுவாக சிறுகுடலின் மூன்று பகுதிகள், வயிற்றிலிருந்து வரும் உணவுக் கூழை நன்றாக கடைந்து விடுகின்றன. மடிப்புகள், ‘வில்லஸ்’ நிறைந்த சிறுகுடலின் சுவர்களுக்கு அதிக ரத்தம் பாய்கிறது. இதனால் உணவின் ஊட்டச்சத்துக்கள் நன்கு உறிஞ்சப்பட்டு, புகுமுக ரத்தக் குழாய்கள் மூலம் கல்லீரலை அடைகின்றன.

சிறுகுடலின் மடிப்புகள், சுவர்களின் நீட்டிக்கொன்றிருக்கும் வெல்வெட் துணி போன்ற நுண்ணிய மயிர்க்கால்கள் (விலஸ் – Villus) இவைகளால் சிறுகுடலின் ‘பரப்பு’ அதிகமாகி, அதிகமான உணவுகளை சீக்கிரமாக கிரகின்றன. தவிர சிறுகுடலின் சுவர்கள் சளி போன்ற கோழை, மற்றும் தண்ணீரை சுரப்பதால், உணவுப் பொருட்கள் கரைக்கப்பட்டு விடுகின்றன. சிறிய அளவில் சுரக்கும் என்ஸைம், புரதம், சர்க்கரை, கொழுப்பு சத்துகளை ஜீரணிக்க உதவுகின்றன. கடைசியில் சிறுகுடல் பெரும்பான்மை சத்துக்களை கிரகித்துவிட்டு, கிட்டத்தட்ட 1 லிட்டர் அளவு உணவுக்கூழை மட்டும் கிரகிக்காமல், பெருங்குடலுக்கு அனுப்புகிறது.

பெருங்குடல்:-

இது சிறுகுடலைப் போல் இரண்டு பங்கு பருமன் உள்ளது. சுமார் ஆறு அடி நீளம் உள்ளது.

இதில் செகம் (Cecum), வலது கோலான் (Colon) இடது கோலான், குறுக்கான கோலான் மற்றும் ஸிக்மாய்ட் கோலான் பகுதிகள் உள்ளன. முன்பகுதியான செகம், சிறுகுடலுடன் இணைகிறது. இந்த செகம் பகுதியில் நீட்டிக் கொண்டிருக்கும். சின்ன விரல் போன்ற ‘குழாய்’ அப்பெண்டிக்ஸ் எனப்படும், எதற்காக இருக்கிறது என்ற விடை தெரியாத அவயம். இதை ‘குடல் வால்’ என்பார்கள். திரவமாக வரும் உணவுக் கூழ், மலக் குடலை அடைந்ததும் கெட்டியாக, மலமாக மாறுகின்றன.

பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்கள், மீந்த உணவுகளை ஜீரணித்து, வாயுவை (Gas) உண்டாக்குகின்றன. பெருங்குடல் பாக்டீரியாக்கள் பல முக்கிய பொருட்களையும் உருவாக்கின்றன. உதாரணம் – வைட்டமின் ‘கே’. ரத்தம் உறைவதற்கு உதவும் விட்டமின். பெருங்குடல் பாக்டீரியாக்கள் பெருங்குடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன. சில வியாதிகள் மற்றும் ஆன்டி – பயாடிக் மருந்துகள் இந்த பாக்டீரியாவை பாதிப்பதால், பேதி போன்றவை ஏற்படுகின்றன.

சிறுகுடல் கோளாறுகள்:-

1. வயதினால் சிறுகுடலும், பெருங்குடலும் அதிக பாதிப்பு அடைவதில்லை. மலச்சிக்கல் அடிக்கடி ஏற்படலாம்.

2. ஜீரண மண்டலத்தில் இரத்தப் போக்கு ஏற்படலாம்.

3. பித்தப்பை, அப்பெண்டிக்ஸ், குடல் இவை வெடித்து சேதமாகலாம். காரணம் கிருமிகள் தொற்று வியாதிகள்.

4. க்ரோன் வியாதி (Crohn’s disease): இது ஜீரண மண்டல உறுப்புகளில் எந்த இடத்திலும் ஏற்படும் ரணம், காயம் வீக்கத்தை குறிக்கும் வியாதி. இதன் காரணங்கள் சரிவர கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வியாதி அதிகமாக சிறுகுடலை பாதிக்கும்.

5. புற்று நோய் – சிறுகுடலில் அபூர்வமாகத்தான் புற்றுநோய் ஏற்படும்

பெருங்குடல்

1. அமிபியாஸிஸ் (Amebiasis), என்டமிபா ஹிஸ்டாலிடிக்கா (Entamoela Histobytica) என்ற கிருமியினால் ஏற்படும். சுகாதார குறைவால் ஏற்படும் வியாதி. பேதி, வாய்வு அதிகரிப்பு, வயிற்றுவலி இவை அறிகுறிகள்.

2. இ.கோலி (Escherichia coli) என்ற கிருமியும் பெருங்குடலை தாக்கும்.

3. Gastro – enterites குடலைத் தாக்கும் கோளாறு.

4. குடலை ஹெர்னியா பாதிக்கும்.

5. குடலில் வயிற்று புழுக்கள் ஏற்படலாம்.

சிறுகுடல் வியாதிகள் பெருங்குடலிலும், பெருங்குடல் வியாதிகள் சிறுகுடலிலும் ஏற்படலாம். சிறுகுடல், பெருங்குடல் பாதிப்புகளை, சரியான உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம். சில யோசனைகள்:-

1. அப்பொழுது சமைத்த, ஆறிப்போகாத, சிறிது சூடான உணவுகளை உட்கொள்ளவும்.

2. சமச்சீர் உணவு அவசியம்.

3. சாப்பிடும் போது மகிழ்ச்சியான சூழ்நிலை தேவை. வேகமாக உணவை உள்ளே தள்ளாதீர்கள். அதற்கென்று மிகவும் நிதானமாக சாப்பிடுவதும் வேண்டாம்.

4. குளிர்ந்த பால் 200 – 500 மி.லி. தினமும் குடித்தால் அதிக அமில சுரப்பை கட்டுப்படுத்தும். ஆனால் கேஸ் (வாய்வு) உள்ளவர்கள் பாலை தவிர்க்கவும்.

5. கீரை, பச்சைக் காய்கறிகள் பழங்கள் மலச்சிக்கலை குறைக்கும்

6. வறுத்த பொரித்த உணவுகளை தவிர்க்கவும்.

7. குடலுக்கு இதமானவை – இளநீர், பழங்கள், பால், விட்டமின் ‘சி’ உள்ள கேரட், ஒரு வருடம் பழமையான அரிசி.

8. வயிற்றில் வாய்வை (Gas) உண்டாக்கும் உணவுகள் பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டை, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, பட்டாணி போன்றவை.


Spread the love