பச்சைப் பயறை பொடியாக அரைத்து, தயிருடன் கலந்து கை, கால், முகம் ஆகியவற்றில் பேக் போட்டு, 20 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யலாம். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி, சிறிய ஐஸ்கட்டிகளை ஒரு பருத்தித் துணியில்வைத்து, மென்மையாக ஒற்றி எடுத்தால், முகம் பொலிவு பெறும். முகம் பொலிவு அடைய, அரை கப் பப்பாளி பழம், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து முகத்துக்கு பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.அதன் பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக்கை கை, கால்களிலும் போட்டுக்கொள்ளலாம்.
தக்காளிச் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்த கலவையை வாரம் மூன்று முறை குளிக்கும் முன்பு தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், கருப்பு நிறத் திட்டுகள் அகலும். தோல் வறட்சி ஏற்பட்டால், துவண்டு போக வேண்டாம். குங்குமப்பூ, தேன், எலுமிச்சைச் சாறு, பால் மற்றும் ஆயுர்வேத எண்ணெய்கள் கொண்டு, மாதம் ஒரு முறை உடல் முழுவதும் மசாஜ் செய்துகொள்ளலாம். இதனால், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, உடல் பொலிவு பெறும். தோல் மினுமினுப்பாகும். அடிக்கடி தக்காளி ஜூஸ் அருந்துவது, தோலில் வறட்சி ஏற்படாமல் தடுக்கும். கற்றாழை, உடல் குளுமைக்கும் தோல் பொலிவுக்கும் ஏற்றது. வெயில் காலங்களில் கற்றாழையை நன்கு கழுவி, கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன் பசும்பால் சேர்த்து கை கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு வெளியே போனால், சூரியக் கதிர்களில் இருந்து கை,கால்களை பாதுகாக்க முடியும்.