இந்தியன் கூஸ்பெர்ரி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நெல்லி சமஸ்கிருதத்தில் ‘தத்திஃபாலா‘ “பூமியின் எதிர் காலம்” என்றும் ஹிந்தியில் ‘ஆம்லா‘ சுத்தமானது என்றும் பெயர் பெற்றுள்ளது. தாவரவியலில் ‘எம்பிளிக்கா அஃபிஸினேலிஸ்‘ என்று வகைபடுத்தப்பட்டு ‘எம்பிளிமிரோ பாலன்‘ என்று பொதுவாக விளங்குகிறது.
நாகரீகம் தோன்றிய காலம் முதலே மனிதனுடைய வாழ்வில் செடி, கொடிகளும் மூலிகைகளும் இணைந்து விட்டன. வாழ்க்கையின் பல தருணங்களில் மூலிகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அன்றாட வாழ்வில் எளிமையாக கிடைக்கக் கூடியதும் பல நற்பலன்களை மனிதனுக்கு தருகின்ற மூலிகைகளின் முதலிடத்தை பெறுவது ‘நெல்லி‘யாகும். சரகர் தனது ஆயுர்வேத நூலில் நெல்லியை சிறப்பாக விளக்கி நெல்லி மனிதனுக்கு அனைத்து நோய்களையும் எதிர்க்கும் திறனை தருகிறது என்றும் நெல்லி வயது முதிர்ச்சியை காலம் தாழ்த்துகிறது என்று பெருமைப்பட எழுதியுள்ளார்.
ஆயுர்வேத மருத்துவ முறையில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகள் தான் மனிதனின் சீரான இயக்கத்திற்கு அடிப்படையாக கருதப்படுகிறது. அவை சீர்குலையும் பொழுது தான் மனிதன் நோயை உணர்கிறான். அந்த மூன்று தோஷங்களான (நாடிகளையும்) நெல்லி சமன் செய்து சீர்படுத்துகிறது. மூன்று நாடிகளின் ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்து நோய் வராமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
நெல்லி மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் படைத்தவை என்றாலும் குறிப்பாக நெல்லிக்காய், நெல்லிக்கனி சிறப்பான மருத்துவ குணத்தை பெற்றவை. நெல்லிக்காய், குளிர்ச்சியாகவும், உடல் உஷ்ணத்தை தணிக்கக் கூடியதாகவும், மலமிளக்கியாகவும், வீரியத்தை அதிகப்படுத்தக் கூடியதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் ஆயுர்வேத மருத்துவத்தில் திகழ்கிறது. நெல்லிக்காயில் அதிகமான அளவு வைட்டமின் C எனப்படுகிற ‘அஸ்கார்பிக் ஆஸிட்‘ கிடைக்கின்றது.
இவ்வகை இயற்கை மூலிகை வகை வைட்டமின் C உலர்ந்த நிலையிலும், அதிக உஷ்ண நிலையிலும் கெடாமல் கிடைக்கின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய், கடுக்காய், தானிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்து ‘திரிபலா‘ என அழைக்கப்படுகிறது. திரிபலா குடலை சுத்தம் செய்வதற்கும், பசியை தூண்டுவதற்கும் ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதற்கும் மலமிளக்கியாகவும் உபயோகிக்கப்படுகிறது. மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் எளிதாக மலம் கழிக்க உதவுகிறது.
நெல்லி மூளைக்கு வலுவூட்டியாகவும் திகழ்கிறது. மன அழற்சியை குறைத்து மூளையின் செயல் திறனை மேம்படுத்துகிறது. நெல்லிக்காயை பொடியாக்கி அதனை பல பிரச்சனைகளுக்கு எளிதாக பயன்படுத்தலாம். ஆயுர்வேதத்தில் ‘ச்யனவளபிராஷ்‘ போன்ற தயாரிப்புகளில் நெல்லி முக்கிய இடத்தை வகிக்கின்றது. வாழ்க்கையை செவ்வனே வாழ்வதற்காக பரிந்துரைக்கப்படும் அனேக ஆயுர்வேத தயாரிப்புகளில் நெல்லி இடம் பெறுகின்றது.
இவை தவிர பெரும்பாலான மூலிகை தயாரிப்புகளிலும் இடம் பெறுகின்றது. ஷாம்பூ, சோப்பு, சீயக்காய், குளியல் பவுடர், முகப்பொலிவு தயாரிப்புகள் ஆகியவற்றிலும் நெல்லி முதலிடத்தை பெற்றுள்ளது. கூந்தல் தைலம், முடி வளர்க்கும் தைலம், முடியை கருமைப்படுத்த உதவும் பிற தயாரிப்புகளிலும் நெல்லி இடம் பெறுகின்றது. உலர்ந்த நெல்லி தூள் வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகின்றது. நெல்லி பொதுவாக ஊறுகாய் ஆகவும் சமையலிலும் உபயோகிக்கப்படுகிறது.
நெல்லியை எளிதாக பயன்படுத்தக் கூடிய சில வழிமுறைகள்
உணவிற்கு இடையில் நெல்லியை சாறு எடுத்து பருகினால் உடல், மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நெல்லியை தைலமாக காய்ச்சி தினசரி தலையில் தடவி வர உடல் உஷ்ணம் நீங்கும். மூளை வலுப்பெறும், நரம்பு மண்டலம் சீர்படும். ஞாபகமறதி அடியோடு நீங்கும்.
நெல்லியை துண்டுகளாக வெட்டி நிழலில் உலர விட்டு பின்பு தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்ச கருமையான தைலம் கிடைக்கும். இதை தலையில் தடவி வர, முடி கருமை நிறம் பெறும் இளநரை நீங்கும்.
நெல்லிக்காயை நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து பின்பு அந்த நீரில் கண்களை கழுவினால் கண் எரிச்சல் நீங்கும் பார்வை அதிகரிக்கும்.
நெல்லிக்காயை நீரில் இட்டு அந்த நீரை இரவு பருகி வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
நெல்லி சாறை 3 – 4 சொட்டுகள் மூக்கில் விட்டால் காரணமில்லாமல் மூக்கில் இரத்தம் வழிதல் கட்டுப்படும்.
நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும், கொலஸ்ட்ரால் அளவும் குறையும்.
நெல்லி இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. கல்லீரல் செயல்பாட்டினை தூண்டுகிறது. இரத்த புரதத்தை அதிகரிக்கின்றது.
நெல்லி வாய் நாற்றத்தை கட்டுப்படுத்துகின்றது. பற்களையும், ஈறுகளையும் வலுப்படுத்துகின்றது.
நெல்லி நெஞ்செரிச்சலை குறைக்கின்றது. அல்சர் போன்ற வயிற்று புண்களை குணமாக்குகிறது. வாய்வுத் தொல்லையை நீக்குகிறது. நெல்லி பல வகையான உபாதைகளிலும் சிறந்த பயனை தருகிறது.
சுவாச மண்டலம்
சுவாச மண்டல பிரச்சனைகளான கக்குவான் இருமல், ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் பிரச்சனைகள் போன்றவற்றிற்கும் நெல்லி உபயோகிக்கப்படுகிறது.
நீரிழிவு
நீரிழிவு உடையவர்கள் தினசரி ஒரு 5 மி.லி. நெல்லி சாறும் ஒரு 30 மி.லி. பாகற்காய் சாறும் கலந்து தினசரி காலை எழுந்தவுடன் உட்கொண்டு வர இரண்டு மாதங்களில் கணையம் தூண்டப்பட்டு தானாகவே இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். நெல்லி, பாகற்காய், நாவற்கொட்டை ஆகிய மூன்றையும் நிழலில் உலர்த்தி சம அளவு எடுத்த பொடியாகவும் தினசரி ஆகாரத்திற்கு முன்பு உட்கொள்ள நீரிழிவு சிறந்த முறையில் கட்டுப்படும்.
மூட்டுவலி
ஆரம்பகால கட்டத்தில் மூட்டுவலி உடையவர்கள் காய்ந்த நெல்லி பொடி ஒரு அளவும் வெல்லத் தூள் இரண்டு அளவும் எடுத்து தினசரி காலை மாலை என இரண்டு வேளைகள் உட்கொண்டு வர மூட்டு வலியும் வீக்கமும் குறையும்.
வயிற்றுப் பொருமல்
வயிற்று உபாதை உடையவர்கள் நெல்லி வத்தல் பொடியை எடுத்து உணவிற்கு 15 நிமிடங்கள் முன்பு சிறிது நீரில் இட்டு கலந்து குடித்து வர ஜீரணசக்தி அதிகரிக்கும். வாய்வுத் தொல்லை நீங்கி, எளிதாக மலம் கழியும். நவீன காலத்தில் எத்தனையோ மருத்துவ முறைகள் வந்தாலும் இராமாயண மஹாபாரத் காலம் முதல் நெல்லியும் நெல்லி மரமும் பிரசித்த பெற்றவையாகும். இந்து மதத்தில் நெல்லி மரம் மனித உயிரை வளர்க்கக் கூடியதாக விளக்கி போற்றப்பட்டுள்ளது. எனவே, இக்காலத்தினர் நெல்லிக்கு அன்றாட உணவில் ஒர் இடத்தைக் கொடுத்தார்களேயானால் எத்தகைய நோய்களுக்கும் பிரச்சனைகளுக்கும் விடை கொடுக்கலாம்.
உணவு நலம் அக்டோபர் 2010
நெல்லி, மூலிகை, சரகர், ஆயுர்வேதம், ஆயுர்வேத மருத்துவம், வாதம், பித்தம், கபம், நோய் எதிர்ப்பு சக்தி, மருத்துவ குணம், மருத்துவம், உடல் உஷ்ணம், மலமிளக்கி, வீரியம், சிறுநீர் பெருக்கி, வைட்டமின் சி, அஸ்கார்பிக் ஆஸிட், திரிபலா, மூலம், மலச்சிக்கல், மூளை, மன அழற்சி, முகப்பொலிவு தயாரிப்புகள், கூந்தல் தைலம், முடி வளர்க்கும் தைலம், வாய் துர்நாற்றம், நெல்லியை, எளிதாக, பயன்படுத்தக், கூடிய, வழிமுறைகள், உடல், மன ஆரோக்கியம், உடல் உஷ்ணம், மூளை வலுப்பெறும், நரம்பு மண்டலம், இளநரை, கண் எரிச்சல், மலச்சிக்கல், கொலஸ்ட்ரால், கல்லீரல், பற்களையும், ஈறுகளையும், அல்சர், வயிற்று புண், வாய்வுத் தொல்லை, சுவாச மண்டலம், கக்குவான் இருமல், ஆஸ்துமா, காசநோய், நுரையீரல், நீரிழிவு, பாகற்காய், கணையம், மூட்டுவலி, வயிற்றுப் பொருமல், மருத்துவ முறை,