கற்றாழை

Spread the love

கற்றாழை என்றும், சோற்றுக்கற்றாழை என்றும் அழைக்கப்படும் மூலிகை சரித்திர புகழ் பெற்றது. உலகெங்கும் அறிந்த மூலிகைகளில் ஒன்று.

நாளுக்குநாள் தேவை அதிகரித்து வரும் கற்றாழைக்காக அந்த காலத்திலேயே போநடந்திருக்கிறது. மாவீரன் அலெக்சாண்டரின் குருவான அரிஸ்டாடில்கற்றாழை போர்வீரர்களுக்கு ஏற்படும் புண்கள், காயங்களை உடனடி ஆற்றிவிடும் ஆற்றல் படைத்தது என்பதை தெரிந்து, அலெக்சாண்டரை கிழக்கு ஆப்ரிக்க தீவான சாக்கோர்டோ (Socorto) மீது படையெடுக்க தூண்டினார். ஏனென்றால் இந்த தீவில் அபரிமிதமாக விளைந்திருந்த கற்றாழையை கைப்பற்றத்தான்! அரிஸ்டாடில் பிறகு கற்றாழையை உபயோகித்து, போர் வீரர்களின் காயங்களை அகற்றிக் காட்டினாராம்.

உலகெங்கும் மூலிகை பொருட்களை அதிகம் பயன்படுத்தும் விருப்பம் அதிகரித்து வருகிறது. மருந்தாகட்டும் இல்லை அழகுப்பொருள் சாதனமாகட்டும் கற்றாழை இன்று வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் நடந்த வண்ணமே உள்ளன.

நம்நாட்டு சித்தர்கள் கற்றாழை குன்றாத இளமையை தருவதால் இதை குமரிஎன்று குறிப்பிடுகின்றனர். உலகப்பேரழகிகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் கிளியோபாட்ராவால் புகழப்பெற்றது கற்றாழை!

விஞ்ஞான ரீதியாக கற்றாழையின் பெயர் ALOE BARBADENSIS வட ஆப்ரிக்காவில் முதன்முதலாக பயிரிடப்பட்டது. ஆங்கிலப்பெயர் Aloe Vera இதில் உள்ளவை:-

அமினோ அமிலங்கள்

தாதுப் பொருட்கள்

வைட்டமின்கள்

என்ஸைம்கள் (Enzymes)

சோற்றுக்கற்றாழையின் சிறப்புத்திறமை என்னவென்றால் இதன் சாற்றின் சில குறிப்பான அணுக்கூறுகள் (Molecules) உள்ளன. இந்த அணுக்கூறு, நம் உடலில் உள்ள நோய் தடுக்கும் செல்களில் உள்ள சில receptor (விரும்பி வரவேற்கும்) மிகவும் ஒத்தவையாகவும், பிடித்தமாகவும் இருப்பதால் கற்றாழை சாறு சேர்ந்த உடனேயே நோயை அழிக்கும் நடவடிக்கை பலமாக தொடங்கி விடுகிறது. முக்கியமாக Phagocytes எனப்படும். நம் உடல் செல்கள், கற்றாழை சாறால் பலமாக ஊக்குவிக்கப்பட்டு, தீய பாக்டீரியா, கழிவுப்பொருட்கள் இவற்றை சுற்றி வளைத்து விரைவாக அழித்து விடுகின்றன. இதனால் உடல் பலவிதத்தில் சுத்தி கரீக்கப்படுகிறது. காயங்கள் விரைவாக ஆறிவிடுகின்றன.

இதில் ஒருவிதமான கொழுப்பும், நாற்றமும் இருப்பதால் உணவாக சேர்த்துக்கொள்வது கடினம். அதனால் சுவையூட்டப்பட்ட Ready made ஜூஸாக கற்றாழை கிடைக்கிறது. இதன்சாறு நல்ல டானிக், வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அடங்கியது.

வீட்டில் தயாரிக்க வேண்டுமென்றால் மடல்களை 10 முறை தண்ணீரில் கழுவி உலர்த்தி, பொடி செய்து, தினசரி இரு வேளை அரை ஸ்பூன் அளவு வெந்நீருடன் அருந்த, மலச்சிக்கல் நீங்கும்; மூல வியாதிக்கு நல்லது. நாள்பட்ட மலச்சிக்கல் குணமாகும்.

முன்பு சொன்ன மாதிரி காயங்கள், தீப்புண்கள், இவற்றுக்கு கற்றாழையை வெட்டி அதன் ஜெல்‘ (Gel) எடுத்து அப்படியே பூசிட காயங்களும் ஆறும், வடுவும் வராது.

தேங்காய் எண்ணையுடன் இதன் சாற்றை காய்ச்சி, வாசனை திரவியங்கள் சேர்த்து, 15 நாள் வெய்யிலில் வைத்து தலைக்கு உபயோகிக்க, தலைமுடி செழித்து வளரும்.

சோரியாஸிஸ், எக்சிமா போன்ற பல சர்மவியாதிகளுக்கு கற்றாழை சோறுநிவாரணமளிக்கிறது. எரிச்சல், அரிப்பு இவற்றை நீக்குகிறது.

மேலை நாடுகளில் தயாராகும் பலவித அழகு சாதனப் பொருட்களில் கற்றாழை இல்லாமல் இல்லை. தோலை மிருதுவாக்கி இறந்த செல்களை நீக்கி, புது செல்களை வளர்விக்கிறது.

வாய் பற்களின் சுகாதாரத்திற்கு Mouth Wash ஆகவும் கற்றாழை தயாரிக்கப்படுகிறது. கற்றாழையில் “குழம்பு” (Pulp) வயிற்றுப் புண்கள், கல்லீரல் நோய்கள் (Cirrhosis), ஆர்த்ரைடீஸ், மூட்டுவலிகள் இவை வராமல் தடுக்கும். வலியுள்ள மூட்டுக்களில் கற்றாழை சாற்றை தடவலாம்.

சித்தவைத்தியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கும், ஆண்தன்மை நீடிப்பத்தற்கும் கற்றாழை பயனாகிறது. ஹோமியோபதி முறையிலும் கற்றாழை அருமருந்தாக பயன்படுகிறது.

இதன் பயனை அடைய தினமும் ஒரு தேக்கரண்டி அல்லது மேஜைக்கரண்டி கற்றாழை சாற்றை குடிக்க ஆரம்பிக்கவும். நாளாக இதை 2 (அ) 4 மேஜைக்கரண்டியாக (தினசரி) அதிகரிக்கவும். மூன்று மாதம் குடித்தால் உங்கள் சக்தி பெருகும். இந்த மருத்துவ பயன்களை தவிர, கற்றாழை நார் துணிகள் நெய்ய பயன்படுகிறது!

கற்றாழை ஜுஸ்

தேவையான பொருட்கள்

கற்றாழைத் தண்டுகள்-2

தேன்                –3டீஸ்பூன்

எலுமிச்சம் ஜுஸ்     –2டீஸ்பூன்

உப்பு                 –2சிட்டிகை

சீனி                  –1டீஸ்பூன்

செய்முறை

கற்றாழையின் மேல் தோலை சீவினால் உள்ளே ஜெல்லி போன்ற பொருள் இருக்கும். அந்த ஜெல்லியோடு, தேன், எலுமிச்சம் ஜுஸ், உப்பு, சீனி, ஐஸ் க்யூப்ஸ், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றிப் பருகவும். கற்றாழை உடல் சூட்டை தணிக்கும். வயிற்று பிரச்சனைகளை குறைக்கும். தோல் வியாதிகளை போக்கும் குணமுடையது.

ஆலு வீரா லஸ்ஸி

தேவையான பொருட்கள்

சோற்றுக்கற்றாழை –100கிராம்

தயிர்              –1கப்

எலுமிச்சம்பழஜுஸ் –1/4டீஸ்பூன்

உப்பு               –1சிட்டிகை

சீனி               -தேவைக்கேற்ப

ஐஸ் க்யூப்ஸ்      -சிறிது

புதினா இலை      – 5

செய்முறை

சோற்றுக்கற்றாழையின் பச்சையான தோலை சீவி எடுத்தால் உள்ளே நுங்கு போல் இருக்கும். அதனை 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தயிர், உப்பு, சீனி, எலுமிச்சம் ஜுஸ், ஐஸ் க்யூப்ஸ் முதலியவற்றைச் சேர்த்து ஒரு ப்ளண்டரில் போட்டு ஒரு அடி அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே புதினா இலைகளைத் தூவி பருகவும்.


Spread the love