கற்றாழையில் இத்தனை விஷயங்களா?

Spread the love

குளிர்ச்சியைத் தரும் கற்றாழைச் சாறு கண் நோய், சரும நோய், கல்லீரல், மண்ணீரல் சார்ந்த சிக்கல்களையும், பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சனைகள், முக அழகை பராமரிக்க, தலைமுடி வளர மொத்தத்தில் மனிதனுக்கு முழுமையான ஆரோக்கியத்தை தருவதில் கற்றாழை மிகச்சிறந்த மூலிகையாக அமைந்துள்ளது.

எங்கு காணப்படுகிறது

இந்தியா முழுவதும் வறண்ட பகுதிகளில், தென்னிந்தியாவில் பரவலாகவும் காணப்படும் கற்றாழையானது, பழங்காலத்தில் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிகம் காணப்பட்டது. இரயில் பயணிகளுக்கு வேலியாக, நடுவதற்காக தென்னிந்திய இரயில்வேத்துறை நட்டு பயிரிட்டது. குஜராத்தில் கற்றாழை இலை மற்றும் பூக்காம்புகளை ஊறுகாய் போடுகின்றனர். இதிலிருந்து கிடைக்கும் கற்றாழை நாரானது, சுவர் மறைப்புகள், தொங்கும் திரைகள், கைப் பைகள் தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இலைகளில் இருந்து ஒரு வித இயற்கைச் சாயமும் தயாரிக்கப்படுகிறது.

புங்கம், வேம்பு, நொச்சி போன்ற பல்வேறு வகையான தாவரங்களுடன் கலந்து தயாரிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்தும் இதன் பூச்சிக் கொல்லித் திறனை அதிகரித்து பயிர்களைக் காப்பாற்றுகிறது. கற்றாழைக்கு பூஞ்சனங்கள், பாக்டிரியாக்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. ஆமணக்கு, புண்ணாக்குடன் கலக்கும் பொழுது பூச்சிகளைக் கவரும் தன்மை உண்டாகிறது.

கிராமப் புறங்களில் கற்றாழைச்செடி இயற்கையாகவே பல இடங்களில் வளரக் கூடியது. கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை மற்றும் பேய்க் கற்றாழை என பல வகைகள் உண்டு.

கற்றாழை எப்படி இருக்கும்?

அலோ பார்படென்சிங் என்று அழைக்கப்படும் கற்றாழை பல பருவச்செடி வகையை சேர்ந்தது. சிறிய தண்டுப் பகுதியுடன் சொர, சொரப்பாக காணப்படும். இலைகள் ஒரு அடி முதல் இரண்டடி அளவு நீளம் இருக்கும். கரும்பச்சை நிறத்தில் காணப்படும் இலைகளின் அடிப்பகுதி நெருக்கமாகக் காணப்படும். இலைகளில் அதிக அளவு சாறு காணப்படும். இலைகளின் ஓரங்களில் ரம்பப் பல் போன்று காணப்படும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

கற்றாழைக்கு உகந்த மண் மணலும், களி மண்ணும் கலந்ததாக இருக்க வேண்டும். வாழையைப்போல இவற்றிலும் பக்கக் கன்றுகள் தோன்றும். அந்தக் கன்றுகளைப் பெயர்த்து எடுத்து வாழைக் கன்றுகள் நடுவது போல நட வேண்டும். கற்றாழை 8 ஆண்டுகளுக்குப் பிறகு பூக்கத் தொடங்கும். பூத்த கற்றாழைகளை அகற்றி விட வேண்டும்.

மருத்துவ பயன்கள் அதிகமுள்ள கற்றாழை

எலும்புருக்கி, ஷயரோகம், காச நோய் என்றெல்லாம் அழைக்கப்படும் டி.பி, நோய் குணம் பெறுகிறது. இதற்கு கற்றாழைச் சாறு சுமார் 70 கிராம் அளவு எடுத்துக் கொண்டு அரை லிட்டர் நல்லெண்ணெய் கலந்து ஊற வைத்து நீர்ச்சத்து இன்றி சுண்டக்காய்ச்சி, அந்த எண்ணெயை தினசரி இருவேளை ஒரு தேக்கரண்டி உட்கொள்ள வேண்டும்.

சோற்றுக் கற்றாழையை முறையாக பக்குவப்படுத்தி, மஞ்சள் காமாலை நோயாளிகளுக்கு கொடுக்க பலன் கிடைக்கும். சோற்றுக் கற்றாழையின் ஆணி வேரை தோண்டி, வெட்டியெடுத்து உமிச்சாம்பலில் வைத்து வேக விட வேண்டும். பிறகு இடித்துச்சாறு பிழிந்து கொள்ள வேண்டும். ஒரு நெல்லிக்காயின் எடைக்கு சீரகத்தை எடுத்து, முறத்தில் போட்டு கைகளால் தேய்த்து உமியை அகற்றிவிட்டு, சிறிது சோற்றுக் கற்றாழைச்சாறு விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை மிச்சமிருக்கும் சாற்றில் கலந்து காலை ஒரு வேளை மட்டும் மூன்று நாட்கள் உட்கொண்டு வர காமாலை குணமாகும். சருமப் பராமரிப்பு, முகப் பொலிவு பெற உதவுகிறது.

சோற்றுக் கற்றாழையில் வைட்டமின் சத்துகள், தாது உப்புகள் அமினோ அமிலம் என்று பால் சத்துக்கள் உள்ளன. இதன் காரணமாக மருந்துகள் தயாரிக்க, அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்புகளிலும் கற்றாழை அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளக்கெண்ணெய் உடன் கற்றாழைச்சாறு சேர்த்து காய்ச்சிய எண்ணெயை வடிகட்டி குளிர வைத்துக் கொள்ளவும். மேற்கூறிய எண்ணெயை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு தினசரி காலை, மாலை என இருவேளை உட்கொண்டு வர உடல் பளபளப்புத் தோன்றும். மேற்கூறிய மருந்தே உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும். நீண்ட நாட்களாக மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு மிகுந்த பலன் தரும். கல்லீரலின் செயல் திறன் மேம்படும்.

கற்றாழையானது முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதுடன் இளமையானத் தோற்றத்தை அதிகரிக்கும். சருமத்தில் உள்ள கொலாஜன் என்னும் கொழுப்புச்சத்தைக் குறைக்கக்கூடிய புரதம் கற்றாழையில் அதிகம் உள்ளது என்பதால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், முதுமைத் தோற்றத்தை தடுக்கிறது.

தோல் நோய் வராமல் தடுக்க, சருமம் பளபளக்க, கற்றாழையை தோலோடு அரைத்து மஞ்சள் சேர்த்துக் குழைத்து முகம், கழுத்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, பின்னர் வெந்தயப் பொடி மூலம் தேய்த்துக் குளித்து வர வேண்டும். கற்றாழைச் சாறை இரவு படுக்கச்செல்லும் முன்பு முகத்தில் தேய்த்து, காலையில் வெதுவெதுப்பான நீர் விட்டு கழுவி வர கருமை நீங்கும். முகம் பளபளப்பு தரும். சோற்றுக் கற்றாழை முக க்ரீம், முக அழகை பொலிவாக்கும். இதனை நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கற்றாழை ஜெல் –                   அரை கோப்பை

சர்க்கரை –                   ஒரு கோப்பை

எலுமிச்சைச் சாறு –    2 மேஜைக் கரண்டி

மூன்றையும் ஒன்று சேர்த்து கலந்து கலவையாக செய்து கொள்ளவும். மேற்கூறிய கலவையை முகம், உடல் உள்ளுறுப்பு மற்றும் சருமத்திலும் பூசி தேய்த்து சிறு சிறு கற்கள் கொண்டு தேய்த்து விட சருமம் மாசு மருவின்றி பளபளக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

தூக்கமின்மை மற்றும் உடல் குளிர்ச்சிக்கு கற்றாழைச்சாறு எண்ணெய்

கற்றாழைச் சாறுடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டு காய்ச்சிய எண்ணெயை ஆறிய பின்பு வடிகட்டி கண்ணாடிப் பாட்டிலில் சேகரித்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய எண்ணெயை தினசரி தலைக்கு தேய்த்து வர தூக்கமின்மை, உடல் சூடு தலைமுடி உதிர்தல் குணமாகும். தலைமுடி வளர்ச்சி அடர்த்தியாகவும் அதிகரித்து வளரும். கற்றாழைத் துண்டுகளை நறுக்கி கண்களில் ஒற்றி எடுக்க கண் எரிச்சல் நீங்கும்.

நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு ஹிலிகோ பாக்டர் பைலோரியா என்னும் பாக்டிரியா காரணமாக உள்ளது. அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கும் இந்த பாக்டிரியாவை அழிப்பதில், கற்றாழைச்சாறு தினசரி அருந்தி வர மிகுந்த பயன் தருகிறது. நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

பெண்களுக்குத் தோழி கற்றாழை

மாதவிடாய்க் காலத்தின் போது ஏற்படும் வயிற்று வலி, உடற்சூடு மற்றும் வெள்ளைப்படுதல் போன்றவைகளை கற்றாழை குணப்படுத்துகிறது. சோற்றுக் கற்றாழையை எடுத்து தோல் சீவி அதன் உட்பகுதியில் இருக்கும் நீர்ச் சத்துள்ள கொழ கொழப்பான சதைப்பகுதி எடுத்து அதன் வழவழப்பு போகும் வரை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த சோற்றில் 25 கிராம் எடுத்து இரவு தூங்குமுன்பு சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.

உடற்சூட்டை தணிக்க கிராமங்களில் சோற்றுக்கற்றாழை குழம்பு செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. சோற்றுக் கற்றாழைச் சாறு 6 தேக்கரண்டி, சிறிது பொரித்த வெங்காயம் இரண்டையும் எடுத்துக் கொண்டு தேவையான அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை 2லு கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டு தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வென்னீர் அருந்தி வர மாதவிடாயின் போது வரும் வயிற்று வலி குறையும்.

சோற்றுக் கற்றாழை மேல் தோலை நீக்கி, சதையை நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு கைப்பிடி முருங்கைப் பூ சேர்த்து அம்மியில் அரைத்து சிறிது வெண்ணெய் கலந்து கொள்ள வேண்டும். இதை வேளை ஒன்றுக்கு எலுமிச்சம் பழம் அளவுக்கு தினசரி, காலை வேளை மட்டும் தொடர்ச்சியாக ஒரு வாரம் வரை சாப்பிட்டு வந்தால் மூலம் கட்டுப்படும். இம்மருந்து சாப்பிடும் காலங்களில் உப்பு, காரம், நீக்கி பத்திய உணவு உட்கொள்ள வேண்டும்.

சத்யா


Spread the love