ஒரு முறை வந்துவிட்டால் மறுமுறை இந்நோய்கள் வரமாட்டாது என்று நாம் திடமாக நம்பினோம். நமது நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை. இது எவ்வாறு சாத்தியமாயிற்று? இந்த நோய்களை எதிர்க்கும் Immunity எனப்படும் எதிர்ப்பாற்றலை நாம் பெற்றுவிட்டோம் என்பது தான் காரணம். இது போன்று நம்மைத் தாக்கிய பல நோய்களிடமிருந்தும் சிறுகவும் பெருகவும் பல விதமான நோய் எதிர்ப்பு சக்திகளை நாம் பெறுகிறோம்.
நோய்களை இயற்கையாக எதிர்கொண்டு அவற்றை எதிர்க்கின்ற தடுப்பு சக்தியைப் பெறுவது போல் செயற்கை முறையிலும் நோய்களை எதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும். இதை Immunization அல்லது தடுப்பாற்றல் பெறுதல் என்கின்றனர். ஆன்ட்டிஜென் (antigan) என்னும் புறப்பொருட்கள் உடலினுள் சேருகின்ற போது ஆன்ட்டிபாடீஸ் (antibodies) என்ற எதிர்ப்புப் பொருளை நமது உடல் உற்பத்தி செய்து அதன் மூலம் ஒவ்வாத புறப்பொருளை எதிர்க்கிறது. அப்போது நிகழ்கின்ற உடலின் இயல்புக்கு மாறான செயல்பாடுகளை அலர்ஜி அல்லது ஒவ்வாமை என்று வான்பிர்கே அழைத்தார்.
ஒரு நோய் தீவிரமாக உடலைத்தாக்குகின்ற போது அதனை எதிர்க்கின்ற வகையில் ஏராளமான எண்ணிக்கையில் ஆன்ட்டிபாடீஸ் உடலில் தோன்றுகின்றன. பின்னர் அந்த முயற்சியிலே வெற்றி பெற்று நோய் குணமானதும் அந்த நோயை எதிர்த்த ஆன்ட்டி பாடீஸ் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விடுகின்றன என்றாலும் உடலில் சிறிய அளவில் இவை இருந்து கொண்டே இருக்கின்றன. பிறிதொரு முறை அந்நோய் தாக்க முயல்கின்ற போது இதே ஆன்ட்டி பாடீஸ்கள் கிளர்ந்தெழுந்து நோய்க்கிருமிகளை (ஆன்ட்டிஜென்) எதிர்த்து விரட்டி நோய் வரமால் செய்துவிடுகின்றன. நாம் இந்த நோயின் எதிர்ப்பு ஆற்றலை பரம்பரை வழியாகத் தாயிடமிருந்தும் நாமே நோயுற்று அதன்பிறகு பெற்றும், தடுப்பு மருந்துகளின் மூலம் பெற்றும் வளர்த்து கொள்கிறோம். இந்த ஆன்ட்டி பாடீஸ் பல நேரங்களில் நமக்குத் தெரியாமலே நோய்க்கிருமிகளையும், உடலுக்கு ஊறு செய்யும் பிற புறப்பொருள்களையும் போரிட்டு விரட்டி விடுகின்றன. சிற்சில வேளைகளில் புறப்பொருள்களினால் உடல் கூருணர்ச்சி மிகுந்து (Hyper sensitivity) தாங்க இயலாது போகின்ற போது உடலில் பல மாற்றங்கள் (தும்மல், இருமல், கண், மூக்கில் நீர்வடிதல், வீக்கம், அரிப்பு, சிவந்து போதல் போன்றவை) ஏற்படுகிறது. இதையே அலர்ஜி என்றனர். இதை உண்டுபண்ணும் ஆன்டிஜென்களை அலர்ஜென்ஸ் (Allergens) அல்லது ஒவ்வாமை என்றனர்.
இந்த ஒவ்வாமை உணர்வு அல்லது இயல்பு எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. ஒருவருக்கொருவர் பெரிதும் மாறுபடுகிறது. ஒரே உணவு ஒருவருக்கு ஒத்துக் கொள்கின்ற போது மற்றவருக்கு உடன்படாது போகிறது. பால், குளுக்கோஸ், லேக்டோஸ் போன்ற பால் பொருட்கள் குழந்தைகளுக்குச் சிறந்த
உணவாகின்ற போது சில குழந்தைகளுக்கு இது ஒவ்வாமல் வயிற்றுப்போக்கு உண்டாகிறது. சில குழந்தைகளுக்குக் கரப்பான் எனப்படும் அரிப்பு, தோலில் செம்மை நிறம் போன்றவற்றை ஏற்படுவதுடன் தோலில் நீர்வடியும் எக்ஸிமாவையும் உண்டு பண்ணலாம்.
ஒவ்வாமையைத் தூண்டுகின்ற பொருள்கள் காற்று, நீர், உணவு, ஊசி, மருந்துகள் போன்றவற்றின் மூலம் உடலை அடைகின்றன. பெரும்பாலும் ஒவ்வான்கள் புரதப் பொருட்களினால் ஆனவைகளே, சிற்சில வேளைகளில் புரதமில்லாத ஒவ்வானும் புரதம் போல் செயல்படுகின்றன.
காற்று மூலம் வீட்டுத் தூசி, ஒட்டடை, பஞ்சுத் துகள்கள், மகரந்தப் பொடி, சிகைக்காய்த்தூள், பூனை, நாய், முயல் போன்ற வீட்டு விலங்குகளின் முடிகள், பறவைகளின் இறகு, அரிசி, கோதுமை போன்ற தானியங்களின் மாவு முதலியன உடலுள் புகுகின்ற ஒவ்வான்களாகும். முட்டை, மீன், நண்டு, தக்காளி, அன்னாசி, சிலவகைக் கிழங்குகள், காய்கறிகள், ஆகியவற்றாலும் ஒவ்வாமை ஏற்படலாம். பெனிசிலின் வைட்டமின் ‘ B ‘ ஆஸ்ப்பிரின் அயோடின், டெட்டனஸ் தடுப்பூசி, நுண்ணுயிர் எதிர் மருந்துகள் (antibiotics) சருமத்தில் தடவப்படும் சில களிம்புகள், மருந்துப்பொடி, சாயப்பொடி, ரப்பர் கையுறைகள், காலணிகள், நைலான் உடைகள், வாசனைப் பொருள்கள் போன்றவற்றாலும் ஒவ்வாமை வரலாம். என்றாலும் எல்லோருக்கும் ஒன்றுபோல் இவ்வகைப் பொருட்களால் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. ஒருவருக்கு ஒத்துக்கொள்ளாத பொருள் பலருக்கு ஒத்துப்போய்விடலாம்.
எனவே, ஒவ்வொருவரும் முயன்று தமக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள் எவையெவை என்பதைத் தெரிந்துகொள்வதுடன் எவையெவற்றாமல் தும்மல், அரிப்பு, வீக்கம் ஆகியவை வருகின்றன என்று கவனித்து அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
ஒவ்வான்கள் தாக்கியவுடன் உடலில் ஹிஸ்டாமினும் (Histamine) செரோட்டானினும் (Serotonin) சுரக்கின்றன. அவை உடலைத் தூண்டி எதிர்ப்பாற்றலை உண்டாக்குகின்றன. சில சமயங்களில் இவ்வித மீளாக்கம் மிக முனைப்படைவதால் கடுமையான விளைவுகளை (Anaphylactic shock) ஏற்படுத்துவதும் உண்டு. இரத்தத்திலும் திசுக்களிலும் (Ecsinophil) இயோசினோபில்கள் பெருகுகின்றன. தமனிகள் விரிந்து சுரப்பிகள் மிகுதியாகச் சுரந்து மூக்கின் உட்பகுதியும் தொண்டையும் வீங்கி விடுகின்றன. மூக்கின் உட்பகுதியில் கீழ் வளைவு எலும்பின் மேல்படலம் வெளிர் நிறமாகத் தெரியும். இருபக்க மூக்கும் அடைபடுவதால் நுகரும் திறன் குறைந்துவிடும். மூக்கில் தும்மலாகத் தொடங்கி தொண்டை வீங்கி, நுரையீரலில் சளி சேர்ந்து மூச்சுவிடக் கடினமாவது ஒவ்வாமையின் வெளிப்பாடு.
சருமம்
ஒவ்வாமையினால் முதலில் பாதிக்கப்படுவதும் உணர்குறிகளை (Symptoms) முதலில் வெளிப்படுத்துவதும் சருமம் தான்.
செம்மை படர்தல் (Reshes)
டெர்மடைடிஸ் (Dermatitis)
அரிப்பு/தடிப்பு (Urticaria)
கரைப்பான் (Eczcma)
உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்படும் போது கீழ் காணும் கோளாறுகள் ஏற்படலாம். வயிற்றுப் போக்கு, வாந்தி/குமட்டல், இசிவு, வாயு பிரிதல், கண் சிவத்தல், அரிப்பு, நீர் வடிதல், தற்காலிக செவிகேளாமை, செவியில் அரிப்பு, சீழ் வடிதல், மூக்கு, தும்மல், சளி, மூச்சடைப்பு.
உணவு ஒவ்வாமை
உடலில் தோன்றும் பல உணர்குறிகளுக்கு உணவு ஒவ்வாமை தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. சாதாரணமாகத் தீங்கில்லாத பல காய்கறிகள், உணவுப் பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையைத் தோற்றுவித்துள்ளன. உருளைக்கிழங்கு, தக்காளி, டீ, காபி போன்ற பொருட்கள் கூட ஒவ்வாமைக்குக் காரணமாக இருக்கக்கூடும். அதே போல் பால், பால் பொருட்கள், முட்டை போன்ற உணவு வகைகள் ஒவ்வாமையைத் தோற்றுவித்து ஆஸ்த்துமா, எக்ஸிமா, தும்மல், இருமல், வயிற்றுக்கோளாறுகள் போன்ற பல உணர்குறிகளைத் தோற்றுவித்துத் தொல்லை தரலாம்.
இன்னும் சிலருக்கு செரிமானத்தைத் தூண்டுகின்ற நொதிப்பொருட்கள் (Ebzymes) உணவில் இல்லாது போகின்ற போதும் ஒவ்வாமை ஏற்படுகிறது. அதே போல் டைராமின் (Tyramine) என்னும் ஒரு பொருள் பால், வெண்ணெய், தயிர், சாக்லேட், மீன், இறைச்சி, ஈஸ்ட், ஒயிள் போன்ற பொருட்களில் உள்ளது. பலரது ஒற்றைத் தலைவலிக்கு (Migraine) இந்த டைராமின் தான் காரணம் என்பதும் அறியப்பட்டுள்ளது. இதே போல் கோதுமைப் பண்டங்களில் உள்ள (Gluten) குளுடன் என்னும் புரதப்பொருள் பலருக்கு ஒத்துக்கொள்வதில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
காபி மற்றும் டீயில் உள்ள கபீன் என்னும் வேதி தலைவலி, கிறுகிறுப்பு, குமட்டல், மயக்கம் போன்ற தொல்லைகளை ஏற்படுத்தவும் கூடும்.
மருந்து ஒவ்வாமை (Drug Allergy)
மருந்தோ அதன் சிதை மாற்றப் பொருளோ மருந்துடன் சேர்ந்துள்ள பிற பொருள்களோ துயரரிடத்தில் (Patient) ஏற்படுத்தும் இடைவினையின் விளைவு மருந்து ஒவ்வாமை (Drug Allergy) எனப்படும். மருந்தை முதல் தடவை உடலில் செலுத்துகின்ற போது எதிர்பொருள் ஊக்கி (எதிர் செனி) எதிர்ப்பொருளுடன் (Anti body) வினைபுரிந்து இடைவினைப் பொருள்களை உண்டுபண்ணுகிறது. இவை ஒவ்வாமை வினைகளை ஏற்படுத்துகின்றன. நாம் முன்பு சொல்லியது போல எதிர்ப்பொருள் ஊக்கி இரண்டாம் முறை செலுத்தப்படுகின்ற எல்லோருக்கும் ஒவ்வாமை ஏற்படும் என்பது பொருளல்ல பலருக்கு பெனிசிலின் எதிர்ப்பொருள் உண்டாகியிருந்தும் கூட ஒரு சிலரே திடீரென்று பென்சிலினுக்கு ஒவ்வாமை உடையவராக உள்ளனர்.
மருந்து ஒவ்வாமையை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்
உடனடி ஒவ்வாமை
தன் ஒவ்வாமை
கலவை ஒவ்வாமை
தாமதவகை ஒவ்வாமை
உடனடி ஒவ்வாமை
இது பெரும்பாலும் ஊசி மூலம் உடலினுள் செலுத்தப்படும் மருந்துகளினால் ஏற்படுவது. ஒரு முறை செலுத்தப்படும் மருந்து திசுக்களைக் கூருணர்ச்சிப்படுத்தும் (Sensitising) எதிர்ப்பொருள்களை (antibodies) உண்டாக்கி இரத்த வெள்ளையணுக்களில் நிலைபெறச் செய்கிறது. இம்மருந்து மறுமுறை செலுத்தப்படும் போது இது எதிர்ப்பொருள்களுடன் சேர்ந்து மேற்சொன்ன வெள்ளையணுக்களைத் தூண்டுகிறது. இதனால் உண்டாகின்ற ஹிஸ்டாமின், பிராஸ்டோகிளாண்டின் மற்றும் உடனடி ஒவ்வாமை வினைபுரியும் பொருள்கள் ஆகியவைகள் இரத்த ஓட்டச் சீர்குலைவு, தோல் தடிப்பு, மூச்சுத்திணறல் போன்ற வேண்டாத தீய விளைவுகளை சில நிமிஷங்களில் உண்டாக்குகின்றன. இவ்விளைவுகள் 1 முதல் 2 மணி நேரம் வரை நீடிக்கலாம்.
உடனடியாக மருத்துவம் செய்யாவிட்டால் உயிருக்கே தீங்கு நேரிடலாம். இவ்வகை உடனடி ஒவ்வாமையை உண்டாக்கும் மருந்துக்குப் பென்சிலின் நல்ல எடுத்துக்காட்டாகும்.
தன் ஒவ்வாமை
மருந்து அல்லது அதன் சிதை மாற்றப்பொருள்கள் உடலிலுள்ள ஒரு புரதத்துடன் சேர்வதால் உடல் எதிர்ப்பொருளை உண்டாக்குகிறது ஹைட்ரசன் ஏற்படுத்துவர் இணைப்புத்திசு நோய், மீத்னதல்டோபா, பெனிசிலின் ரிபாம்பிலின் இவற்றால் ஏற்படும் சிவப்பணு அழிவுறும் சோகை (Haemolytic anaemia) முதலியவை இவ்வகை ஒவ்வாமையால் ஏற்படுகின்றன. ஒவ்வாமையத் தவிர்க்கும் முறைகள்.
ஒவ்வாமைக்குக் காரணமான ஒவ்வான்களைத் தவிர்த்தல், ஒவ்வான்களைத் தவிர்க்கின்ற முயற்சியில் ஈடுபடுவதற்கு முன் எவ்வகையான ஒவ்வான்களால் ஒவ்வாமைக்குறிகள் ஏற்படுகின்றன என்பதை முதலில் கண்டுபிடித்துத் தனிமைப்படுத்த வேண்டும். இது சிறிது கஷ்டமான செயல் என்றாலும் இயலாதது அல்ல. இதை இரு விதங்களில் கண்டுபிடிக்கலாம். முதலில் Trial and error என்னும் முறையில் ஒவ்வொரு உணவுப்பொருளாக நீக்கிக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு நீக்கிக் கொண்டு வருகின்ற போது எந்தப் பொருளுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது என்று கண்டுகொள்ளலாம். இதே போல் நீங்கள் பயன்படுத்தும் சோப், பவுடர், வாசனைப்பொருள்கள், எண்ணெய் போன்றவற்றையும் ஒவ்வொன்றாக நீக்கிக் கொண்டு வந்தும் அவற்றில் ஏதாகினும் காரணமா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
வாழுகின்ற இடங்கள், பணி செய்கின்ற அறைகள் போன்றவற்றில் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாதவைகள் எடுத்துக்காட்டாக புத்தகத் தூசி, ரம்பத்தூள், பஞ்சுத்துகள், கடுமையான வாசனைகள் போன்றவைகள் ஏதேனும் உள்ளனவா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சில வாரங்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாதது எது என்று தெரிந்துகொள்ள முடியும். பின்னர் அவற்றைத் தனிமைப்படுத்தித் தவிர்ப்பதன் மூலம் ஒவ்வாமைத் துயரை அறவே போக்கி விடலாம். உணவுப்பொருட்களில் ஒவ்வாதது எது என்று கண்டுபிடிக்க டாக்டர். கொக்கோ என்பவரது நாடி ஆய்வு (Pulsetest) உதவி செய்யும். ஏதாவது ஒரு உணவுப் பொருள் உங்களுக்கு ஒவ்வாமையை உண்டு பண்ணுகிறது என்று நீங்கள் எண்ணினால் அந்த உணவுப் பொருளை மட்டும் உண்ணுவதற்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். பிறகு அதை உண்ணுவதற்கு முன்னும் உண்ட பின்னரும் உங்கள் நாடித்துடிப்பைக் கணக்கிட்டுப் பாருங்கள். உண்ட பின்னர் நாடித்துடிப்பு இலேசாக உயர்ந்திருந்தால் அதாவது பத்து துடிப்பு வரை உயர்ந்திருந்தாலும் அது இயல்பானது.
அந்த உணவுப்பொருளினால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படவில்லை என்று கருதலாம். ஆனால், நாடித்துடிப்பு 84 க்கு மேல் இருக்குமானால் அதிலும் ஒரு மணி நேரம் உயர்ந்தே இருக்குமானால் அந்த உணவுப் பொருள்தான் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி உள்ளது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிந்து கொண்ட பின்னர் அந்தப் பொருள்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும். மேற்சொன்ன முறைகளில் ஒவ்வாத பொருளைக் கண்டுபிடிக்க முடியாது போனால் ஆய்வு ஒவ்வான்களின் துணை கொண்டு ஒவ்வாத பொருளைக் கண்டறியலாம்.
ஒவ்வாமையைத் தோற்றுவிக்க கூடியவை என்று கருதப்படும் பல பொருள்களிலிருந்து தனித்தனியாகத் தயாரிக்கப்பட்ட ஆய்வு ஒவ்வான்கள் (Test allergens) தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றில் ஒவ்வொரு ஆய்வு ஒவ்வாமையும் தனியாகச் சிறு ஊசிக்குழலில் எடுத்து முன்னங்கையின் உட்புறத்தில் 0.1மி.லி. அளவில் தோலினுள் செலுத்திப் பத்து நிமிடங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஓர் இடத்தில் தூய உப்பு நீரைச் செலுத்தி அதன் விளைவையும் கவனிக்க வேண்டும். எந்தப் பொருளுக்கு ஒவ்வாமை உள்ளதோ அது தொடர்புடைய ஆய்வு ஒவ்வானை தோலினுள் ஊசி மூலம் செலுத்தும்போது செலுத்திய இடத்தைச் சுற்றித் தோல் தடித்தும், வீங்கியும் சிவந்தும் காணப்படும்.
கூருணர்ச்சி நீக்கி எதிர்ப்பாற்றல் வளர்த்தல் (Desensitization) பண்டைய நாட்களில் பாம்பின் விஷத்தைக் கூடச் சிறுகச் சிறுக உடலினுள் செலுத்தித் துறவிகள் தங்கள் எதிர்ப்பாற்றலை வளர்த்துக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போன்று கூருணர்ச்சி நீக்க வல்ல வாக்சீன்களை (Desensisiting naccine) கொண்டு ஒவ்வாமையினால் அவதியுறுவோர் தங்கள் எதிர்ப்பாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
இவ்வகை வாக்சீன்கள் 1:500 மற்றும் 1:50 என்ற செறிவில் தயாரிக்கப்படுகின்றன. முதலில் குறைந்த செறிவுடைய வாக்சீனில் 0.1 மி.லி. அளவு எடுத்து தோலின் அடியில் ஊசி மூலம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் 0.1 மி.லி. அளவு என அதிகரித்துக் கொண்டே 10 வாரங்கள் கொடுக்க வேண்டும். பிறகு 1:50 என்ற செறிவுள்ள வாக்சீனை 0.1 மி.லி. அளவில் தொடங்கி ஒவ்வொரு வாரமும் 0.1 மி.லி. அதிகரித்துக்கொண்டே வந்து பத்து வாரங்கள் கொடுக்க வேண்டும். இவ்வாறு சிறிது சிறிதாக எதிர்ப்பாற்றலை மிகுதியாக்கினால் ஒவ்வாமையால் விளைகின்ற துன்பங்களிலிருந்து விடுபட இயலும்.
குறிப்பாக ஆஸ்த்துமா என்னும் மூச்சிழுப்பு நோயினால் துயரப்படுகின்றவர்கள் இம்முறையினால் மூச்சிழுப்பு வருவதைத் தடுத்துக் கொள்ளலாம்.
ஒரு முறை தடுப்பு மருத்துவம் செய்தால் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நலமாக இருக்கலாம். பின்னர் மறுபடியும் கூருணர்ச்சி நீக்க மருத்துவம் செய்யப்பட வேண்டும். ஓரு ஊசி மருந்தில் குறைந்தது நான்கு பொருள்களுக்கான வாக்சீனைத் தயாரிக்கலாம். ஹிஸ்டமின் எதிர்ப்பிகள் (Anti Histamines) ஒவ்வான்கள் உடலைத் தாக்குகின்ற போது அதை எதிர்க்கும் வேதியைச் சுரக்கின்றன. தும்மலுக்கும், இருமலுக்கும், மூக்கிலும் கண்களிலும் நீர் ஒழுகுவதற்கும் இன்னும் பல கோளாறுகளுக்கும் இந்த ஹிஸ்டாமின் என்னும் வேதியே காரணம். இந்த ஹிஸ்டாமினின் செயல்பாட்டைத் தடைசெய்து Nautralize செய்வதற்கென Anti Histamine எனப்படும் எதிர் ஹிஸ்டாமின்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகளை உட்கொள்ளுகின்ற போது ஒவ்வாமையினால் ஏற்படுகின்ற துயரங்களை மட்டுப்படுத்தவும் குறைக்கவும் செய்யலாம்.
நடைமுறையிலே பல திறப்பட்ட எதிர் ஹிஸ்டாமின்கள் கிடைக்கின்றன. என்றாலும் அவைகள் ஒவ்வொன்றிற்கும் சில குறிப்பிட்ட குணங்கள் உள்ளன. சில வகை எதிர் ஹிஸ்டாமின்கள் வீக்கத்தையும் அரிப்பையும் குறைக்கும். இன்னும் சிலவகை நீர் ஒழுகுதலைக் குறைக்கும். இன்னும் சில வகை உமிழ் நீர் ஊறுவதைத் தடை செய்வதுடன் வாந்தி வராது தடுக்கும்.
அத்துடன் பொதுவாக எல்லா ஆன்ட்டி ஹிஸ்டாமின்களும் (Anti Histamines) ஒரு வகையான மயக்க உணர்வையும் தூக்கத்தையும் உண்டாக்க வல்லவை. எனவே, இவ்வகை மருந்துகளை எடுக்கின்ற போது கார் போன்ற வாகனங்களை ஓட்டுவதையும் இயந்திரங்களின் அருகே நின்று பணிபுரிவதையும் தவிர்க்க வேண்டும்.
ஹார்மோன் மருந்துகள் (Steraids) ஒவ்வாமையினால் அளவிற்கதிகமான துயரம் ஏற்படுகின்ற போது எதிர்ஹிஸ்டாயின், எதிர்ப்பிகளால் போதிய அளவு குணம் தெரியாத போதும் அட்ரீன்ஸ் சுரப்பியில் இருந்து பெறப்படுகின்ற கார்டிகோ ஸ்பெராஸ்ட்ஸ் (Cortion steroids) என்னும் மருந்துகள் விரைந்து பலனளிக்கக் கூடும். மிகச்சக்தி வாய்ந்த ஒவ்வாமை எதிர்ப்பு (Anti allergic) மருந்துகளான ஸ்டெராய்ட்ஸ் ஒரு மருத்துவரின் நேரடி பார்வையில் மிக்க கவனத்துடன் உட்கொள்ளப்படவேண்டும்.
ஒவ்வாமை தவிர்க்கும் மருந்துகள் (Anti allergics) ஒவ்வாமையை தவிர்ப்பதற்குபயோபிளேவனாய்ட்ஸ் (Bioflaronnity) எனப்படும் வைட்டமின் சி தொடர்புடைய பொருள்கள் கொடுக்கப்படலாம். இவை செல்களின் ஊடுருவும் தன்மை (Permeasility) யை அதிகரித்துத் திறம்படச் செய்து உடலின் எதிர்ப்பாற்றலை வளர்க்கின்றன. விட்டமின் ஙி – 5 என்று சொல்லப்படும் பான் போதினிக் ஆசிட் (Pantothin acid) ஒவ்வாமையினால் துயருறுவோர்க்கு நல்ல குணம் குன்றிய செயல்பாட்டினாலும் சிலருக்குப் பல விதமான ஒவ்வாமைகள் (Multiple allergies) ஏற்படலாம். இதற்கும் பான்போதினிக் ஆசிட் நல்ல தீர்வளிக்கிறது. மேலும், விட்டமின் E – யும் ஒவ்வாமையை நிக்குவதில் மிகுந்த உறுதியளிக்கிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆயுர்வேதமும் அலர்ஜியும்
ஆயுர்வேதம் ஒவ்வொரு பருவ காலத்தின் முடிவில், உடலில் சேர்ந்த நச்சுப்பொருட்களை நீக்க வேண்டும், என்கிறது. கப – பித்தங்களை சமனாக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலின் நாளங்கள் (வழிகள்) சுத்திகரிக்கப்பட்டுவிடுவதால் ஒவ்வாமை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தவிர பருவ கால மாற்றங்களால் ஏற்படும் ஒவ்வாமை வராமல் தடுக்கலாம்.
காய்கறி சாறுகள், வாழைப்பழம் இவற்றை உட்கொள்ளலாம். ஆனால் வாழைப்பழம் சிலருக்கு ஆகாது! அந்தந்த ஸீஸனுக்கு ஏற்ப உணவு உட்கொள்வது நல்லது என்கிறது ஆயுர்வேதம். அலர்ஜிக்கு ஆயுர்வேதம், உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிப்பது சிறந்த சிகிச்சை என்று கருதுகிறது.
அலர்ஜி குழந்தைகளுக்கு பல சர்ம உபாதைகளை உண்டாக்கும்
வேப்பிலை சிறந்த ரத்த சுக்தி மற்றும் உடலின் நச்சுப்பொருட்களை நீக்கும் மூலிகை. பழங்காலத்திலிருந்தே வேப்பிலையின் விஷமுறிக்கும் சக்தி தெரிந்திருந்தது. எக்ஸிமா, முகப்பரு, உணவு ஒவ்வாமை இவற்றுக்கெல்லாம் வேப்பிலை நல்ல மருந்து.
கற்றாழை உடலின் எதிர்ப்புச்சக்தியில் ஒரு அங்கமான ரத்தத்தில் உள்ள லிம்போசைட்ஸ் (Lymphocytes) (வெள்ளணுக்கள்) உற்பத்தியை அதிகரிக்கிறது. இதர வெள்ள அணுவான “மானோசைட்” டி – செல்கள் (T-cells), பாக்டீரியாவை ஓழிக்கும் “மாக்ரேபேஜஸ்” (Macrophages) இவற்றையும் கற்றாழை ஊக்குவிக்கும்.
தோலில் ஏற்படும் அலர்ஜியால் உண்டாகும் அரிப்பு, தடிப்புகளுக்கு மணத்தக்காளி (Black Night shade) இலைகளின் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.
எல்லாவித அலர்ஜிகளுக்கு மஞ்சள் சேர்ந்த பல ஆயுர்வேத மருந்துகள் கிடைக்கின்றன. இவற்றால் அலர்ஜிகளை தவிர்க்கலாம்.