மது தரும் உடல் நல பிரச்சனை

Spread the love

போதை.. ஒருவழிப்பாதை போதைப் பழக்கம், இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. குடி, புகையிலை, மாவா, கஞ்சா, பிரவுன் சுகர் என்று விதவிதமான லாகிரி வஸ்துகள்.

போதை எனும் நூலில் மனிதன் பொம்மையாக ஆடிக் கொண்டிருக்கிறான். தற்கால மனிதனுக்கு வருமானமும் அதிகம் பிரச்சனைகளும் அதிகம். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில கெட்ட பழக்கங்கள் அவனது வாழ்வில் இடம் பிடித்து விட்டன. இன்று மது குடிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லும் படி ஆகி விட்டது. பெரிய, பெரிய கம்பெனிகளில் குடிப்பதற்கென்ற சலுகைகள் வழங்குகிறார்கள்.

வீக் எண்ட் பார்ட்டி என்று உடல் நலத்தை ‘வீக்’ ஆக்குகிறார்கள். கேட்டால் டென்ஷனை குறைக்க என்கிறார்கள். டென்ஷன் குறைவதில்லை. போதையால் மேலும் மேலும் அதிகமாகிறது. போதைப் பழக்கத்துக்கு நவ நாகரீக யுவதிகளும் அடிமையாகி விட்டார்கள். நட்சத்திர ஓட்டல்களில் அவர்களுக்கென்று தனி வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க..

போதைப் பாக்கு பள்ளி சிறுவர்களிடம் தொடங்கி பெரியவர்கள் வரை பரவிக் கிடக்கிறது. பான்பராக்குக்கு (குட்கா) அரசு தடை விதித்தாலும், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் அதையும் மீறி பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. மதுவை விட மோசமான இந்த புகையிலை கலந்த பாக்குகளுக்கு சிறுவர்கள், இளைஞர்கள் அடிமையாகி கிடக்கிறார்கள். இந்த போதை வஸ்துகளுக்கு தங்களை, தங்கள் வாழ்க்கையை விலை பேசி விட்டனர். முன்னொரு காலத்தில் கல்லூரில் திருட்டு தம் அடிப்பார்கள்.

இன்று பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதித்தாலும் பலரும் அதை சட்டை செய்யாமல் பகிரங்கமாக புகைக்கிறார்கள். நுரையீரலை நூறு சதவீதம் பகைக்கிறார்கள். சளியில் ஆரம்பித்து புற்றுநோய் வரை எல்லா சனியன்களும் இந்த புகை மனிதர்களை புதை குழியில் தள்ளுகின்றன. உலர்ந்த உதடுகள், மற்றும் தொடர் இருமல்கள். முன்பெல்லாம் ஒருவன் கெட்டு அழிந்துவிட்டான் என்றால் அவன் மது மாது சூது என்று இருந்தான் என்பார்கள். ஒருவன் கெட்டழிவதற்கு இன்று அந்த மூன்று மட்டுமா இருக்கிறது. எண்ணற்ற லாகிரி வஸ்துக்கள் பரவிக்கிடக்கிறது.


போதைப் பழக்கம் உடையவர்கள் அதிலிருந்து உடனடியாக வெளிவர வேண்டும். குறைந்த பட்சம் வெளிவருவதற்காகவாவது முயற்சிக்க வேண்டும். போதை பழக்கம் ஒருவழிப்பாதை. அது மரணத்திற்குத்தான் இட்டுச் செல்லும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். போதைப் பழக்கத்தால் தனிமனிதன் மட்டுமல்ல.. ஒரு சமுதாயமே கெட்டு குட்டிச் சுவராக போய்க் கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்திற்கு தடையாக.. முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் போதை பழக்கத்திற்கு குட்பை சொல்ல வேண்டும். அதற்கு எண்ணற்ற எளிய வழிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love