காற்று மாசு தப்பிக்க…

Spread the love

அன்றாடம் நாம் பயன்படுத்தும் இரு சக்கர, நான்கு சக்கர மோட்டார் வாகனங்களாலும், தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகளாலும் மற்றும் நச்சுப் புகை, காட்டுத் தீ, மோசமான மண் புழுதியைக் கிளப்பும் சாலைகள் போன்றவைகளினாலும் காற்று பலவிதத்தில் மாசுபடுகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

மேற்கூறிய மாசுபடுதலில் அடங்கியுள்ள வாயுக்கள் நைட்ரஜன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு, ஓசோன் மற்றும் சல்பர் டை ஆக்சைடு போன்றவற்றை நாம் கூறலாம்.மாசுபடுத்தும் சில பொருட்களை நாம் கண்களால் கூட பார்க்க இயலும். ஒரு சில பொருட்களை மின்னணு நுண்ணோக்கி மூலமே காண இயலும்.

என்ன வகையான மாசுக்களாக இருந்தாலும், அவை உடல் நலத்திற்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு காற்று மாசுபடுதலினால் ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்றன.

காற்று மாசுபாட்டினால் குழந்தைகளும் பெரியவர்களும் உடல் அளவில், மனதளவில் பாதிப்படைகின்றனர். நுரையீரல் செயல்பாடு குறைகிறது.கண்கள், மூக்கு, வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல், ஆஸ்துமா மற்றும் மூச்சிரைப்பு நோய் ஏற்படுகிறது. இருமல் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறிகள் தோன்றுகின்றன.

சுவாச மண்டலத்தின் நோயான மார்புச் சளியை அதிகரிக்கிறது.தலைவலி, தலைச் சுற்றல் ஏற்படுகிறது.நரம்பு செயல்பாடுகள், இரத்த ஓட்டங்களில் பாதிப்பு ஏற்படுகிறது.புற்று நோய், இறுதியாக இறப்பு வரை கொண்டு செல்கிறது.உலக அளவில் இதயம் மற்றும் புற்று நோயிற்கு அடுத்து அதிக அளவு பாதிப்பைத் தந்து மனிதர்களைக் கொல்லுகிறது காற்று மாசு.

மேற்கூறிய காற்று மாசுபடுதலால் குழந்தைகள் பாதிக்காமல் இருக்க உங்கள் சுற்றுப் புறங்களில் அமைந்துள்ள காற்று மாசு ஏற்படுவதற்குரிய காரணிகளை நாம் குறைக்க வேண்டும்.

காற்று மாசுபடுதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சில வழிமுறைகள்

1.பாதுகாப்பான சமையல் முறைகளுக்கும் திறன் வாய்ந்த ஸ்டவ் அடுப்புகளைப் பயன்படுத்துங்கள்.

2. புகையை உருவாக்கவோ அல்லது வெளியேறும் புகையின் அருகில் இருப்பதையோ தவிருங்கள்.

3. குறைந்த புகை வெளியிடும் திறன் வாய்ந்த வாகனங்களைப் பயன்படுத்துங்கள்.

4.தனிப்பட்ட உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் உங்கள் வாகனங்களை சரியாக பராமரிக்கவும்.

5.குளிரூட்டும் இயந்திரத்திற்கு மேலே விசிறியை பயன்படுத்துங்கள்.

6.முடியும் போதெல்லாம் நீங்கள் நடந்து செல்லுங்கள் அல்லது மிதிவண்டியில் செல்லுங்கள்.

7.காகிதம், பிளாஸ்டிக், உலோகம் மற்றும் உயிரிப் பொருட்களை மறுசுழற்சி செய்யுங்கள்.

8.குளிர்ந்த நீரில் உங்கள் ஆடைகளை கழுவி, சுத்தம் செய்து பின்னர் உலர்த்துங்கள்.

9.பாலீத்தின் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துங்கள்.

10.உள்ளூரில் கிடைக்கும் உழவர் சந்தைகளில் இயற்கை விவசாயம் மூலம் விளைவித்து உற்பத்தியாகும் பொருட்களை வாங்குங்கள்.

11.நடைப்பயிற்சி கழகம், மரம் நடும் கழகம், தோட்டக் கலைச் சார்ந்த குழு, மிதிவண்டி பயணம் செய்யும் குழு என்ற பசுமையான சூழலில், காற்று மாசுபடுதலைத் தடுக்கும் குழுக்களில் நீங்களும் ஒரு உறுப்பினராக சேர்ந்து இயங்கலாம்.

கா. ராகவேந்திரன்


Spread the love
error: Content is protected !!