அகத்திக் கீரை குளிர்ச்சி தரும் இயல்புடையது. உடலில் உள்ள அனைத்து விதமான ‘விஷங்களையும்’ முறிக்கக் கூடியது.
அகம் + தீ = அகத்தீ
உடலின் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருள்களை முறிக்கும். அதிகளவு சாப்பிட்டால் வாயுப் பிரச்சனை உருவாகும்.
தாவரவியல் பெயர் Sesbania grandiflora
அகத்திக் கீரையின் தன்மை – விஷநாசினி, குளிர்ச்சி உண்டாக்கி, மலமிளக்கி, புழு அகற்றி
அகத்தில் உள்ள உஷ்ணத்தை குறைக்கும் அகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஆனால், தினமும் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அரிப்புடன் கூடிய புண் மற்றும் வாயு அதிகமாகிவிடும். அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இந்தக் கீரையை குறைவாகச் சாப்பிட வேண்டும். விஷங்களை மட்டுமல்லாமல், மருந்துகளையும் முறிக்கும் குணம் உள்ள அகத்திக் கீரையை, மருந்து எடுத்துக் கொள்ளும் காலங்களில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
அகத்திக் கீரையின் மருத்துவப் பயன்கள்
அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, கரும்படை, தேமல், சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது பற்றுப்போட்டால் பூரண குணம் கிடைக்கும்.
அகத்திக் கீரை சாற்றில் (200 மி.லி.) 50 கிராம் அதிமதுரத்தை பால் சேர்த்து அரைத்து, அத்துடன் நல்லெண்ணெய் (250 மி.லி.) சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து தைலபதத்தில் இறக்கவும். இதைத் தினமும் அதிகாலையில் 5 மி.லி. (1 ஸ்பூன்) அளவுக்கு சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் குணமாகும். உதடு வெடிப்புக்கும் நிவாரணம் கிடைக்கும்.
அகத்திக் கீரை, மருதாணி இலை, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.
அகத்திக் கீரைச் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் அவை உதிர்ந்து விழுந்துவிடும்.
அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.
அகத்திக் கீரை, ஊறவைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, அடைதட்டிக் காய வைக்கவும். பிறகு, அதை நல்லெண்ணெய்யில் சுடுவது போல் சுட்டு எடுத்து விட்டு, எண்ணெய்யை பத்திரப்படுத்தி வைத்து, தினமும் அதை உடலில் தடவிக் குளித்தால் உடல் மிணுமிணுக்கும், கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாக்கும்.
அகத்திக் கீரைச் சாற்றில், ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் தயாரித்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஆசனக் குளியல் செய்தால், மூலக்கிருமிகள், மூல எரிச்சல், மூலச் சூடு, இரத்த மூலம் போன்றவை முழுமையாகக் குணமாகும்.
அகத்திக் கீரைச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால், உடலில் இருக்கும் அதிகப்படியான பித்தம் குறையும்.
அகத்திக் கீரையை அரைத்து ஆறாத, நாள்பட்ட உடல் காயங்கள் மீது தடவினால், அவை விரைவில் ஆறும்.
அகத்திக்கீரை சாற்றை மூக்கில் பிழிந்து விட்டால் அடிக்கடி உண்டாகும் காய்ச்சல் குணமாகும்.
அகத்திக் கீரையின் பிற பயன்கள்
அகத்திக் கீரை சூப்
தேவையான பொருள்கள்
அகத்திக் கீரை – ஒரு கட்டு
தக்காளி – 3
வெங்காயம் – 2
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
மைதா மாவு – 3 ஸ்பூன்
வெண்ணெய் – 50 கிராம்
செய்முறை
முதலில் கீரையை சுத்தம் செய்து, ஆய்ந்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு வேக வைத்து இறக்கி சாற்றை வடிகட்டிக் கொள்ளவும். பிறகு, வாணலியில் வெண்ணெய்யைப் போட்டு உருக்கி, அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கி, மிளகுத்தூள் கலந்து வடிகட்டி வைத்துள்ள கீரை சாற்றுடன் சேர்க்கவும். பின் வாய் அகலமான பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் விட்டு உருக்கி, மைதா மாவைத் தூவி கிளறி, சிவந்ததும், ஏற்கெனவே தயாரித்துள்ள சாற்றையும் சேர்த்து, உப்புப் போட்டு, ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். இது பல நோய்களை விரட்டி உடல் நலம் காக்கும் சிறந்த சூப்.
அகத்திக் கீரை மண்டி
தேவையான பொருள்கள்
அகத்திக் கீரை – ஒரு கட்டு
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 2
மிளகாய் வற்றல் – 2
கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
செய்முறை
முதலில் அகத்திக் கீரையை அலசி சுத்தம் செய்து, ஆய்ந்து கொள்ளவும். பிறகு, ஒரு வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கி, அதோடு கீரையையும் சேர்த்து வதக்கி, அதில் அரிசி களைந்த நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். கீரை வெந்த பிறகு உப்பு போட்டு இறக்கவும். இதில், தேங்காய், சீரகம், கசகசா ஆகியவற்றை அரைத்துச்சேர்த்தால் சுவை கூடும்.
அகத்திக் கீரை சாம்பார்
தேவையான பொருள்கள்
அகத்திக் கீரை – ஒரு கட்டு
புளி – 50 கிராம்
தனியா – ஒரு ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 25 கிராம்
தக்காளி – 3
தேங்காய் – அரை மூடி
எண்ணெய் – 2 ஸ்பூன்
துவரம் பருப்பு – ஒரு கப்
மிளகாய் வற்றல் – 2
பெருங்காயம்,
மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் அகத்திக் கீரையைத் தண்ணீரில் அலசி, சுத்தப்படுத்திக் கொள்ளவும். அடுத்து, தனியாவை வறுத்து பொடித்துக் கொள்ளவும். பின் தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
துவரம் பருப்பை மஞ்சள், பெருங்காயம் சேர்த்து வேக வைத்து நன்றாக கடைந்து கொள்ளவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய் வற்றல், தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கி, ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பொடி வாசனை அடங்கியதும் கடுகு, பருப்பு தாளித்துக் கொட்டவும்.
அகத்திக் கீரைப் பொடி
தேவையான பொருள்கள்
நிழலில் உலர்த்திய
அகத்திக் கீரை – அரை கிலோ
மிளகு – 20 கிராம்
சீரகம் – 20 கிராம்
மஞ்சள் – 10 கிராம் மேற்கண்ட அனைத்துப் பொருள்க¬யும் ஒன்றாகக் கலந்து அரைத்துக் கொள்ளவும். இதில், தினமும் காலை மாலை இரு வேளையும் 5 கிராம் (1 ஸ்பூன்) அளவில் சாப்பிட்டால், உடல் சூடு, ஜீரணக் கோளாறுகள், கண் நோய்கள், பித்த நோய்கள் போன்ற அனைத்தும் விலகும்.