பகல் தூக்கம் நன்மையா? தீமையா?

Spread the love

சிலருக்கு பகலில் குட்டி தூக்கம் போடுவது பிடிக்கும். சிலருக்கோ பகலில் பல மணி நேரம் தூங்குவது பிடிக்கும். பகல் தூக்கம் பற்றி பலரும் பேசத் தொடங்கி விடுகின்றனர்.

பகலில் தூங்கினால் உடல் குண்டாகி விடும். இதுதான் பலரது கருத்து. ஆனால், அது தவறு. வயிறு நிறைய உணவு சாப்பிட்டு விட்டு அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்கிறது புது ஆய்வுகள்.

பொதுவாக, நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை தூங்கும் விதமாகத் தான் படைக்கப்பட்டு இருக்கிறது. இரவில் 6 மணி முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை உடல் அல்லது மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும்போது, சற்று இளைப்பாற மூளையோ அல்லது உடலோ தானாகவே ஓய்வு கேட்கும். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டு அரை மணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால், உடலும் மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன.

இப்படி போடும் பகல் குட்டித் தூக்கம் மூளையின் செயல்பாடு அ திகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக் கழக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. 39 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். அப்போது பகலில் தூங்கினால் மூளை செயல்பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும் என்பது தெரியவந்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 39 பேரை இரவு நேரத்தில் நன்றாக தூங்க வைத்து பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர்.

அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தார்கள். இவர்களின் செயல்திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது. இதில் இரவில் மட்டுமே தூங்கியவர்களைவிட பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளை செயல்பாட்டு திறன் அதிகரித்து காணப்பட்டது. இந்த சோதனையை பலமுறை மேற்கொண்ட போதிலும் ஒரே முடிவுதான் வந்தது.

மேலும், பகல் நேரத்தில் தூங்குவது இதயத்துக்கு நல்லது என்று அமெரிக்காவின் பென்சில்வேனியா கல்லூரி பேராசிரியர்கள் ரியான் பிரிண்டில் காராகாங்கிளின் ஆகியோரும் கண்டறிந்துள்ளனர். இவர்கள் 85 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

இவர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினரை பகலில் சில மணி நேரம் தூங்கும்படியும், மற்றொரு பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும்படியும் செய்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால் ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டது. பகலில் தூங்குவதன் மூலம் இதய நோய்க்கு தாக்குவது தடுக்கப்படுகிறது என்பது இதன் மூலம் தெரிய வந்தது.

இந்த இரண்டு ஆய்வுகளுமே இன்னொரு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளன. பகலில் குட்டித் தூக்கம் மட்டுமே பயன்தரும். அதை விட்டு அரை மணி நேர தூக்கமானது ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என நீடித்துக் கொண்டே போனால் அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதுதான் அந்த எச்சரிக்கை. பகலில் அளவாக தூங்குங்கள் நல்லது.


Spread the love