ஆடாதொடை மூலிகை செடியின் மருத்துவ குணங்கள்

Spread the love

போர்களில் பயன்படுத்தப்படும் ஈட்டி வடிவில் மிகவும் கூர்மையான இலைகளையும், வெள்ளை வண்ணத்தில் அழகான சிறிய பூக்களுடன் சுமார் 15 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த செடியின் இலைகள் அரை அடி வரையில் நீண்டு இருக்கும். இந்த செடியின் இலை, பூ, வேர் அனைத்தும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது. தமிழில் வாதகி, நெடும்பர், அட்டகசம், ஆடாதொடை, ஆடுதொடா என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்க்கலாம்.

ஆடாதொடை இலைச்சாறெடுத்து சம அளவு தேன் கலந்து நான்கு வேளை சாப்பிட்டு வர நுரையீரல், இரத்த வாந்தி, மூச்சுத் திணறல், இரத்தம் கலந்து கோழை வருவது போன்றவை குணமாகும். சீதபேதி, இரத்தபேதி உள்ளவர்கள் ஆடாதொடை இலைச்சாற்றை எருமைப்பாலுடன் கலந்து இரண்டு தேக்கரண்டி என இருவேளைகள் சாப்பிடவும்.

இதன் பத்து இலைகள் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து கால் லிட்டராக சுண்டக்காய்ச்சி அதனை தேனில் கலந்து இரண்டு வேளையாக நாற்பது நாட்கள் பருகி வர எலும்புருக்கிக் காசம்(T.B), இரத்தகாசம், சளி, சுரம், விலாவலி போன்றவை குணமாகும். உலர்ந்த ஆடாதொடை இலையை தூளாக்கி அதை ஊமத்தை இலையில் சுருட்டி புகைப்பிடிக்க மூச்சுத்திணறல் உடனே நீங்கும்.

எவ்வகை சுரமானாலும் ஆடாதொடை இலையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் அஷ்டமூல கஷாயம் குணமாக்கும். இந்த கஷாயத்தை செய்ய ஆடாதொடை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகிரந்தி, துளசி, பேய்ப்புடல், காஞ்சங்கோரை ஆகியவற்றை ஒரு பிடி அளவு எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து அரை லிட்டர் ஆகும் வரை சுண்டக்காய்ச்சி கஷாயம் தயாரித்து ஒரு வேளைக்கு 50 மில்லிஅளவு குடிக்கவும். இதே கஷாயத்தை கர்ப்பிணிப் பெண்கள் கடைசி மாதத்தில் காலை, மாலை குடித்து வர சுகப்பிரசவம் ஆகும்.

ஆடாதொடையின் வேருடன் கண்டங்கத்திரி வேர் சம அளவு எடுத்து இடித்துப் பொடியாக்கவும். பின் ஒரு கிராம் அளவு எடுத்து அதைத் தேனில் கலந்து இரண்டு வேளைகள் தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாசகாசம், ஜன்னி, ஈளை, இருமல், சளி காய்ச்சல் குணமாகும்.

ஆடாதொடை இலை மற்றும் புதினா இலை ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி இரண்டு வேளைகள் குடித்து வர கரப்பான், குட்டம், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி போன்றவை குணமாகும்.


Spread the love