நாமும் அடம் பிடித்தவர்கள்தான்.

Spread the love

குழந்தைகளிடம் அடம்பிடிக்கும் பழக்கம் மூன்றாவது மாதத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது. எப்போதும் தன்னை தூக்கியே வைத்திருக்க வேண்டும் என்பதில் இந்த ‘அடம்’ ஆரம்பிக்கிறது. கொஞ்சம் பெரிதானதும், சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள்; அதன் பிறகு பொம்மை உள்பட கேட்ட பொருட்கள் எல்லாம் வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்.

அடம்பிடித்தல் என்பது மரபணு வழியாகவும், பழக்கத்தாலும் வருகிறது. அடம்பிடிக்கும் பழக்கம் எந்த வழியில் வந்தாலும், குடும்பத்தினர் ஒன்றிணைந்து தொடர் முயற்சி செய்தால் சரிசெய்யலாம். குழந்தைகள் எல்லோருமே சூழல் புரியாமல் அடம்பிடிப்பது இல்லை. இவர்கள் ஒரு வகையில் புத்திசாலிக் குழந்தைகள் எனச் சொல்லலாம். தங்கள் மனதில் உள்ள விஷயத்தைச் செய்வதற்கு அவர்கள் எடுத்துள்ள ஆயுதமே அடம்பிடித்தல்.

ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்ய வலியுறுத்தி அடம்பிடிப்பார்கள். ‘உடனே கடைக்கு கூட்டிட்டுப் போக வேண்டும், டிவி போட வேண்டும்’ என எதுவாகவும் இருக்கலாம். நினைத்தது நிறைவேறவில்லை என்றால் புரண்டு அழுதல், பொருளைப் போட்டு உடைத்தல் எனச் செய்வார்கள். இத்தகைய செயல்களில் குழந்தைகள் ஈடுபடும்போது, பெற்றோர்களும் சம்மதித்துவிடுவார்கள். அல்லது, அதற்கு மாற்றாக வேறு ஏதாவது செய்கிறேன் என வாக்குறுதி அளித்து சமாளிப்பார்கள். எடுத்துக்காட்டாக, பொம்மை வேண்டும் என அடம் பிடித்தால், உடனே வாங்கித் தரக்கூடாது. நாளை வாங்கித் தருகிறேன் என சமாளிக்கவும் கூடாது. எப்போது முடியும் அல்லது ஏன் முடியாது என்பதைத் தெளிவாக, திட்டவட்டமாகக் கூற வேண்டும். அடம்பிடித்துக் கீழே உருண்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் வீட்டில் இருக்கும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என எல்லோரும் ஒருமித்த கருத்தில் இருக்க வேண்டும். ஒருவர் கண்டிக்கும்போது, மற்றொருவர், சப்போர்ட் செய்யக் கூடாது. இதனால், யாரிடம் கேட்டால் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, நினைக்கும் காரியத்தை சாதிக்க நினைப்பார்கள்.

பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சில பெற்றோர்கள் அடித்துத் துன்புறுத்துவார்கள். அடித்துவிட்டு பின்னர் கேட்டதை வாங்கித் தருவார்கள். இதுவும் தவறான அணுகுமுறை. அடிப்பதும் தகாத வார்த்தைகளால் திட்டுவதும் பிடிவாதத்துக்குத் தீர்வாகாது. அவற்றை நாளடைவில் பழக்கப்படுத்திக்கொண்டு தொடர்ந்து அடம்பிடிப்பார்கள். இன்னும் சில பெற்றோர், அறைக்குள் போட்டு அடைப்பது, பூச்சாண்டியிடம் விட்டுவிடுவேன். டீச்சரிடம் சொல்லிவிடுவேன் என பயமுறுத்துவார்கள். இதுவும் தவறான அணுகுமுறையே.

சில குழந்தைகள் வீட்டில் நினைத்ததைச் சாதிக்க முடியாது என்பதற்காக, வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் அடம்பிடிப்பார்கள். மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதை தவிர்க்க, பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள் எனக் குழந்தைகள் நினைக்கும். இத்தகைய புத்திசாலி குழந்தைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, பொது இடம் எனப் பதறாமல், கோபத்தைக் காட்டாமல் கண்டுகொள்ளாமல் இருக்கும் நடைமுறையை இங்கும் பயன்படுத்த வேண்டும். யாரும் நம்மைக் கண்டுகொள்ளவில்லை என்ற மனநிலைக்கு நாளடைவில் வந்துவிடுவார்கள்.

இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றும்போது உடனே இதற்கான பலன் கிடைக்காது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பலன் தெரியவரும். முயற்சியை விட்டுவிடாமல் தொடர வேண்டும். முடிந்தவரை இரண்டு அல்லது மூன்று வயதிலேயே குழந்தைகளின் அடம்பிடிக்கும் போக்கை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், பள்ளிக்குப் போக மாட்டேன் என்பதில் ஆரம்பித்து சைக்கிள், பைக் வரை சென்று நிற்பார்கள்.

பொறுமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொண்டால் குழந்தைகளை சமாளிக்கலாம். நாமும் குழந்தையாக இருந்து இப்படி அடம்பிடித்து வந்தவர்கள்தான்; வளர்ந்தவர்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது. நம்மாலேயே சமாளிக்க முடியாதபோது மட்டும் குழந்தை மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறலாம்.


Spread the love
error: Content is protected !!