உ டலைத் தூய்மைப்படுத்துவதற்காக நாம் குளிக்கிறோம். சோப்பு போட்டு, ஷாம்பூ போட்டு, சீயக்காய் போட்டு அவரவர் விருப்பத்திற்கேற்ப குளிக்கிறோம். குளிப்பதை நம் முன்னோர்கள் முறையாகக் கையாண்டனர். ஆனால், அப்படித்தான் பயன்படுத்துகிறோமா?
விஷயத்துக்கு வருவோம்!
நீராடும்போது உடலில் உள்ள வியர்வை நாளங்களில் படிந்துள்ளஅழுக்கு நீங்க நன்கு தேய்த்துக் குளித்தல் வேண்டும். பாத வெடிப்புகள், கால் விரல் இடுக்குகள், நகங்கள், காதுமடல் இவற்றை எல்லாம் தேய்த்துக் குளிப்பது அவசியம். இவ்வாறு தேய்த்துக் குளிப்பது ஒரு வகை அக்குபிரஷர்தான்.
இக்காரணத்தினால்தான் கிராமத்து முன்னோர்கள் காலையில் குளம், குட்டை, ஏரி, கிணறுகளில் தேய்த்து நீராடி நலம் பெற்றனர். அத்துடன் குளித்துவிட்டு வீட்டுக்கு வரும் வரை நீர்த்துறையில் துவைத்த ஈரத் துணிகளையே உடலில் இறுக்கி கட்டிக் கொண்டும் நடந்து வருவார்கள். தலையை அதிகம் அழுத்தி துவட்ட மாட்டார்கள். அவர்கள் அறிந்தோ, அறியாமலோ என்னவோ அழுத்தித் துடைக்காமல் இருப்பதிலும் நன்மை உண்டு.
தலையில் மிக நுண்ணிய நரம்பு மண்டலங்களின் இணைப்பு உண்டு என்றும் தலையில் சில முக்கிய வர்மப் புள்ளிகள் உண்டு என்றும் கூறுவர். அவ்விணைப்பு நரம்பு மண்டலங்களையும், வர்மப் புள்ளிகளையும் என்றோ ஒரு நாள் நாம் தலைக்கு நீர் ஊற்றிக் கொள்ளும் நாளில் மிக அழுத்தித் துடைக்கின்றோம் பேர் வழி என்று சொல்லிக் கொண்டு இயல்புக்கு அதிகமாக நரம்பு மண்டலங்களையும், புள்ளிகளையும் அசைத்துவிட்டு, நமக்கு நாமே உடல் நலக் கேட்டை உருவாக்கிக் கொள்கிறோம்.
இத்தவறுகள் நேராமல் இருக்க நம் தலையை துவட்டும்போது மிக மெல்லிய மென்மையான துணிகொண்டு ஒற்றி எடுப்பதுபோல தலையின் ஈரத்தை ஒற்றித் துடைக்க வேண்டும்.
ஒரு சில இனத்தவர்கள் மெல்லிய துணியை தலையின் மேல் முக்காடு இட்டுக் கொண்டது அவர்களே அறியாமல் அவர்களின் முன்னோர்கள் தலையில் உள்ள நரம்பு மண்டல இணைப்புகளையும் வர்மப் புள்ளிகளையும் பாதுகாக்கச் செய்வித்த பழக்கமாகும்.
நாம் குளித்து, தலையை ஒற்றித் துடைத்த பின்னர் நமது கவனம் காதின் பக்கம் திரும்ப வேண்டும். காதின் மடல், காதின் குருத்து, காதின் விளிம்பு, காதின் உட்பக்கக் குழி, காதின் பின்பக்க தலை, சாய்ந்த எலும்புப் பகுதி போன்றவற்றை மேலிருந்து கீழாக மென்மையாகத் துடைத்தல் வேண்டும்.
தலைப் பகுதியைத் துடைத்தபின் தொப்புள் குழியில் உள்ள ஈரத்தை ஒற்றித் துடைத்தல் வேண்டும். பின்னர் வலது கையில் உலர்ந்த துணியை வைத்துக் கொண்டு இடது விலா எலும்புகளை ஒட்டிய பகுதியை வயிறு நோக்கி நெஞ்சுவரை இதமாகத் துடைத்தல் வேண்டும். அடுத்து இரு அக்குளின் உள் பகுதியை கைகளைத் தூக்கியவாறு மேலிருந்து கீழாக துடைத்தல் வேண்டும். பின்னர், முதுகுப் பக்கம் துடைக்க இரு கைகளில் துணியின் இரு முனைகளைப் பிடித்தவாறு முதுகின் மேலிருந்து கீழாக துணியை இழுத்துவிட்டு அசைத்துத் துடைக்க வேண்டும்.
அடுத்து இரு தொடைகளின் இடுக்குப் பகுதியை துடைத்து இரு கால்களையும் மேலிருந்து கீழாக ஈரம் போக துடைத்தல் நல்லது. இறுதியாக பாதங்களில் உள்ள ஈரத்தை துடைத்தல் வேண்டும். நம்மில் எத்தனை பேர் இதுபோல நீராடி துடைக்கின்றோம்?