மூன்று விஷயங்கள் என்றென்றும் பெண்களின் உள்ளத்தில் கிளர்ச்சியை மூட்டுபவை. தங்கம், வைரம், பட்டு இவை இந்த 3 விஷயங்கள். இவற்றுக்கு மயங்காத பெண்கள் குறைவு. இதற்கு பெண்களை குறை கூறவில்லை. தொன்று தொன்று இவை ஒரு கம்பீரத்தை, உயர்ந்த அந்தஸ்தை கொடுக்கும் பொருட்களாக வழக்கிலிருந்து வருகின்றன. ஏன், ஆண்களும் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் பட்டுவேட்டி, அங்கவஸ்திரம், பட்டுச்சட்டை, வைர மோதிரம், மைனர் தங்க செயின் போட்டுக் கொள்வதை கௌவரமாகத்தான் கருகின்றனர்.
பட்டின் முதல் தோற்றம் சீனாவில் கி.மு. 3000 ஆண்டில் (சிலர் கி.மு. 6000 ஆண்டு என்கின்றனர்) சீனாவில் சக்கரவர்த்தினி ஜு லீ – (Lei – Tzw) அவர்களால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்கின்றனர் சரித்திர வல்லுனர்கள். சீனாவின் ராஜ வம்சத்தால் மட்டும் உபயோகிக்கப்பட்டு வந்த பட்டு, மெதுவாக ஆசியாக முழுவதும் பரவியது.
இதற்கான ஆதாரங்களில் ஒன்று 2007 ம் ஆண்டில் கொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் ஒரு சமாதியில் கிடைத்தது. இந்த சமாதி கிட்டத்தட்ட 2500 வருடங்களுக்கு முன்பிலிருந்து ஜு (Zhou) வம்சத்தை சேர்ந்தது. இதில் மிக நுட்பமாக நெய்யப்பட்ட, சாயமிடப்பட்ட பட்டு துணிகள் காணப்பட்டன. இதனால் சீனாவில் பழங்காலத்திலிருந்து பட்டுதுணி தயாரிப்பு மிகவும் முன்னேறிய நிலையில் இருந்தது, என்பது தெரியவருகிறது.
சீனாவிலிருந்து ஆரம்பித்த பட்டு வியாபரத்திற்கென்று உருவான “பட்டுப் பாதை” (Silk road) உலகப் பிரசித்தி பெற்ற பாதை. இந்தப் பாதையில் பட்டு மட்டுமல்ல, பல வணிகப் பொருட்களும் இந்த பாதையில் கொண்டு செல்லப்பட்டன. சீனா, இந்தியா, பாரசீகம், எகிப்து, அரேபியா, சோமாலியா, மத்திய தரைக்கடல் தேசங்கள் இவற்றை இந்த பட்டுப்பாதை இணைத்திருந்தது.
பட்டு வியாபாரம் மும்முரமாக நடந்தது என்பதற்கான ஒரு ஆதாரம் எகிப்திய “மம்மி” (பாதுகாக்கப்பட்ட சவம்) ஒன்றின் தலைமுடியில், பட்டுநூல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த “மம்மி” கி.மு. 1070 ஆம் ஆண்டை சேர்ந்தது!
சீனாவின் அரச வம்சத்தினர் பட்டு தயாரிக்கும் முறையை பல காலம் ரகசியமாக வைத்திருந்தும், கொரியாவை கி.மு. 200 ஆண்டிலும் இந்தியாவில் கி.பி. 300 ம் ஆண்டிலும், சென்றடைந்தது.
இந்தியாவும், பட்டும்:-
தென்னாட்டில் ‘பட்டு’ இந்தியில் “ரேஷம்” எனப்படும் பட்டு இந்தியாவின் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சிந்துவெளி நாகரிகத்தின் பிரசித்த பெற்ற ஹாரப்பா – மொஹஞ்சதாரோ அகழ்வாய்வுகளில் பட்டின் உபயோகம் அங்கு பழக்கத்திலிருந்து வந்தது என்பது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட இதே சமயத்தில் தான் சீனாவிலும் முதன் முதலாக பட்டு தோன்றியிருக்கலாம்.
உலகிலேயே பட்டுத்துணியை அதிகம் உபயோகிக்கும் தேசம் இந்தியா! காஞ்சிபுரம், பனாரெஸ் பட்டுப்புடவைகளைப் பற்றி கேள்விப்படாதவர்கள் யார்? இவை தவிர, முர்ஷிதாபாத் (மே.வங்காளம்), பாகல்பூர், அஸ்ஸாம், கர்நாடாகா, ஆந்திராவில் தர்மாவரம், போச்சம்பள்ளி இவற்றில் தயாரிக்கப்படும் பட்டுக்களும் பிரசித்தி பெற்றவை.
காஞ்சிபுரம் பட்டு சேலைகள் அதன் சாஸ்தீரிய டிசைன்கள், அதிக நாள் உழைக்கும் உறுதி, மற்றும் ஜரிகை வேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்றவை. மைசூர் சில்க், மென்மையானவை. மிருதுவானவை. ஜரிகை சேர்த்து நெய்வதால் பொதுவாக பட்டுச்சேலைகள் விலை உயர்ந்தவை.
பட்டின் வேதியல்:-
பட்டு இயற்கையான புரத நார். புரத அமினோ அமிலங்களில் ஒன்றான க்ளைசின் (Glycin),பட்டு நார்களில் 50% இருப்பதால், இழைகளுக்கு உறுதி அதிகம். பட்டு இழை மிக உறுதியான இயற்கை நூல்களில் ஒன்று. ஆனால் நீரில் நனைந்தால் 20% உறுதி குறைந்து விடும். சூர்ய ஒளி பட்டால் இழைகள் நைந்து விடும். எனவே தான் பட்டுப்புடவைகளை நிழலில் காய வைப்பது அவசியம். இழைகள் சிறிது இழுத்தாலே, இழுத்த நிலையிலேயே தங்கி விடும்.
பட்டின் பளபளப்புக்கு காரணம் அதன் இழை நார்களில் உள்ள ‘பிரிஸம்’ போன்ற முக்கோண பரிமாணங்கள், வட்டமான மூலைகள், இவை ஒளியை உள்வாங்கி, பல கோணங்களில் பிரதிபலிப்பதால், பட்டு பளபளக்கிறது!
பட்டுகளை பூச்சிகள் எளிதாக தாக்கும். அதுவும் அழுக்கான பட்டுத்துணிகளை அதிகம் தாக்கும். வியர்வை சுலபமாக பட்டுத்துணிகளில் படிந்து, மஞ்சள் கறையை உண்டாக்கும்.
மின்சாரத்தை கடத்தாது அதனால் அசைவற்ற நிலையான, “ஒப்புக்கொள்ளும்” மின்சாரத்தை (Static cling) உண்டாக்கும்.
பட்டு 8% சுருங்கும். எனவே துணிகள் தயாரிக்கும் முன்பு பட்டு சுருக்கப் படவேண்டும். இல்லை துணிகளாக தைத்த பின் உலர் – சலவை செய்யப்பட வேண்டும். இதனால் சுருக்கம் தன்மை 4% ஆக குறையும். நீராவி அயர்ன் (Steam Iron) செய்தால் இந்த சுருக்கமும் மறையும்.
பட்டின் மடிப்பின்றி அழகாக தொங்கும் குணத்தால், புடவைகள் செய்ய ஏற்றது. மற்றும் போர்வை, இரவு ஆடைகள், உள்ளாடைகள் போன்ற பலவற்றுக்கு பட்டு பயன்படுகிறது.
இதர உபயோகங்கள்:-
இரண சிகிச்சைகள் முடிந்த பின் சாயத்திற்கு தையலுக்கு நீர் உறிஞ்சாத “பாண்டேஜ்” ஆக பட்டு பயனாகிறது. இதற்காக பட்டின் வெளிப்புறத்தில் உள்ள “செரிசின்” (Sericin) எனும் எரிச்சலை உண்டாக்கும் பொருள் எடுக்கப்பட்டுவிடுகிறது. இந்த முறையை பயன்படுத்தி, “எக்சிமா” (Eczema) தோல் வியாதிகளுக்கேற்ற பட்டு உள்ளாடைகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் அரிப்பு குறையும்.