சிறுநீரகம் பற்றி தெரிஞ்சுக்கோங்க…

Spread the love

நுரையீரலையும் வயிற்றுப் பகுதியையும் பிரிக்கிற விதானத்திற்கு கீழ்ப்புறம் இடது பக்கம் ஒரு சிறுநீரகமும், வலது பக்கம் கல்லீரலுக்குக் கீழ்பக்கம் ஒரு சிறுநீரகமும் அமைந்துள்ளது. வலது புறத்தில் உள்ள சிறுநீரகமானது, இடது புறத்தில் உள்ள சிறுநீரகத்தை விட சற்றே கீழிறங்கி காணப்படும். இரண்டு சிறுநீரகங்களின் மேல்புறத்தில் அட்ரினல் சுரப்பிகள் ஒரு தொப்பி போன்று அமைந்து காணப்படும்.

இரண்டு சிறுநீரகங்களும் தண்டு வடத்துடன் இணைந்து இருப்பதுடன் இதயம் இருபத்தி நான்கு மணி நேரமும் இடைவிடாது இயங்குவது போல, சிறுநீரகங்கள் இரண்டும் ஓய்வின்றி இயங்கிக் கொண்டே இருக்கும். சிறுநீரகங்களின் முக்கிய வேலை என்ன? சரியாக இயங்கவில்லை எனில் என்னவாகும்? சிறுநீரகத்தில் சிக்கல்கள் வராமலிருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்வது நல்லது.

நாம் உண்ணும் திட, திரவப் பொருட்களின் செரிமானம் நடைபெற்ற பின்பு மலம், சிறுநீர் என்று இரண்டு பொருட்கள் உடலுக்கு தேவையில்லாத கழிவுகளாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியேறுகிறது. இதில் திரவ நிலையில் இருக்கும் கழிவுப் பொருட்களைத் தான் சிறுநீரகம் வெளியேற்றுகிறது.

சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர் நாண்கள் வழியாக வெளியேற்றப்படும் சிறுநீரானது, சிறுநீர்ப்பையை வந்தடைகிறது. சிறுநீர்ப் பையில் அதிக சிறுநீர் சேர்ந்தவுடன், சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க்குழாய் வழியாக உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

சிறுநீரகம் நமக்கு உதவும் முக்கிய நண்பன்

நமது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் கழிவுப் பொருட்களானது, சிறுநீரகங்கள் மூலம் வெளியேற்றப்படுகிறது. ரத்தத்தில் உள்ள உப்பின் அளவு (ஆல்புமின்) சரியான அளவில் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதிகப் படியாக இரத்தத்தில் சேரும் உப்பை மற்றும் யூரிக் அமிலத்தை மற்றும் உடலுக்குத் தேவைக்கு அதிகமான தண்ணீரை, நச்சுத் தன்மை கொண்டதாக இருக்கும் அமினோ அமிலத்தையும் வெளியேற்றுகிறது.

இரத்தத்தில் கலந்துள்ள நச்சுத் தன்மை கொண்ட பொருட்களை நாம் உட்கொள்ளும் மருந்துகளில் உடலுக்கு தேவையானது போக தேவையற்ற அதிகப்படியானவற்றையும் சிறுநீரகம் சிறுநீராக வெளியேற்றி பல வித சிக்கல்கள், நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்றால் ஆச்சரியப்படுவீர்கள். ரத்த நாளம் மூலம் சிறுநீரகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இரத்தம் வடிகட்டப்பட்டு, யூரினிஃபெரஸ் என்ற குழாய் வழியாகச் செல்லும் போது, அதில் உள்ள பயன்தரும் புரதம், சர்க்கரை போன்றவைகளை மீண்டும் கிரகித்துக் கொள்ளப்படும்.

தண்ணீரும் சிறிதளவு கிரகிக்கப்படும். இவ்வாறு கிரகிக்கப்படுபவை மீண்டும் கேப்பிலரி என்னும் தொகுதிக்கு அனுப்பப்படுகிறது. சர்க்கரை கிரகிக்கப்படாமல் சிறுநீருடன் வெளியேறினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் அதிகரித்து சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் என்ன?

நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாது உப்புகளினால் சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுகின்றன. சிறுநீரகத்தில் சிறுநீர் வெளியேறுகிற பாதை அருகில் கற்கள் உருவாகலாம். அவை சிறிது சிறிதாக நகர ஆரம்பித்து சிறுநீர் நாளங்கள் வழியாக சிறுநீர்ப் பையை வந்தடைந்து அங்கேயே தங்கி விடுகிறது. சிறுநீர்ப் பாதை தொற்று என்ற நோய் சிறுநீர்ப் பையில் கற்கள் தங்குவதாலும், வெளியேறாமல் இருப்பதாலும் ஏற்படுகிறது. இத்தொற்று ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இத்தொற்று ஏற்பட்டால், இந்த வியாதியை குணப்படுத்த நீண்ட நாட்கள் ஆகும் என்பது மட்டுமல்லாது மீண்டும், மீண்டும் வந்து சிரமம் தரும். சிறுநீர்ப் பையிலும், சிறுநீரகத்திலும் காச நோய், புற்று நோய் சிரமம் ஏதும் தராத நீர்க் கட்டிகள் ஏற்படாலம். சிறுநீர்ப் பையின் கழுத்துப் பகுதியில் உள்ள ‘பிராஸ்டேட் சுரப்பி’ ஆண்களுக்குத் தான் இருக்கும். வயதான ஆண்களுக்கு, இச்சுரப்பி விரிவடைவதன் காரணமாக சிறுநீர்த் தொற்று, எரிச்சல், வலி, சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் ஏற்படும்.

பிராஸ்டேட் கேன்சர் வந்தால் அதிலிருந்து புற்று நோய் திசுக்கள் கல்லீரலுக்கும், உடலின் மற்ற பகுதிகளுக்கும் சென்று அந்தந்த பகுதிகளில் புற்று நோயை தோற்றுவிக்கிறது. சிறுநீர் கழிக்கும் போது அதிகமான எரிச்சல் ஏற்படுவது பசியின்மை, உடல் எடை குறைவது போன்றவை சிறுநீரகத்தில் புற்று நோய் ஏற்பட்டிருக்கும் என்று தெரிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் ஆகும்.

இரத்தத்தில் உப்பின் அளவைக் கட்டுப்படுத்துங்கள்

சிறுநீரகத்தின் இயக்கம் வழக்கத்திற்கு மாறாக சிறிதளவு குறைந்தால் கூட சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். அந்த சூழ்நிலையில் கை, கால்கள், முகம், வயிறு என்று உடலின் எல்லா பாகங்களிலும் வீக்கம் தோன்றுகிறது. இயக்கம் குறைந்த சிறுநீரகத்தை மீண்டும் இயல்புக்கு கொண்டு வர மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவில் உப்பை குறைத்து விட அல்லது தவிர்த்து விட வேண்டும்.

சிறுநீரகம் பாதிப்படைந்தால் அது கல்லீரல், நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகளையும் பாதிக்கச் செய்யும். மூளையைப் பாதிப்புக்குள்ளாக்கும். இரத்தத்தில் யூரியா என்ற உப்பு 40 மி.கி. இருக்க வேண்டும். அதன் அளவு 150, 200 மி.கி. என அதிகரிக்கும் பொழுது மூளை பாதிப்படைந்து, ஞாபக சக்தி குறைந்து விடும். இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தம், சம்பந்தமின்றி பேசுவார்கள். இதனை யூரிமிக் கோமா நிலை என்று கூறுவர். இரத்தத்தில் இருக்கும் உப்பின் அளவு 200 மி.கி., 300 மி.கி. என்று அதிகரித்து விட்டால் கோமா நிலை ஏற்பட்டு விடும்.

இச்சூழலில் நோயாளியை குணப்படுத்துவது என்பது மிகவும் கடினம். உப்புடன் ‘கிரியாடினைனின்’ என்கிற கழிவு பொருளானது, இரத்தத்தில் ஒரு மில்லிகிராம் இருக்க வேண்டும். அது சில நேரங்களில் 4 மி.கி., 5 மி.கி. என்று அதிகரிப்பதும் உண்டு. சிறுநீரகம் பழுதடைவதை நாம் இரத்தத்தில் உப்பின், கிரியாட்டினைனின் அளவு அதிகரிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

நாம் உடல் நலமின்றி இருக்கும் பொழுது உபயோகபடுத்தும் மாத்திரைகள், மருந்துகளின் கழிவுப் பொருட்கள் சிறுநீரகத்தின் மூலமாக, சிறுநீரினால் வெளியேற்றப்படுகிறது. சிறுநீரகத்தை பாதிக்கும் மருந்து, மாத்திரை, உணவு, மது, புகையிலையை உபயோகிக்கக் கூடாது. உணவில் உப்பை குறைத்து அல்லது அறவே சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. மெர்க்குரி, இரும்புச் சத்து நிறைந்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுவது நல்லதல்ல. அளவுக்கு அதிகமான மெர்க்குரி, இரும்புச் சத்தானது சிறுநீரகத்தில் வந்தடைந்து அங்கேயே தங்கி விடும். சர்க்கரை வியாதி உடையவர்களுக்கு ‘நெப்ரோபதி’ என்கிற நிலையில் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.

உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரித்து, உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவது நல்லது. அசைவ உணவு தினமும் சாப்பிடும் பழக்கம் கூடாது. வாரத்திற்கு ஒரு நாள் என்று அளவோடு சாப்பிடலாம். ஏனெனில் அசைவ உணவில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று, குடும்பத்தில் ஏற்கனவே யாராவது ஒருவருக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் இருப்பின்/ இருந்திருந்தால் மருத்துவரை அணுகி உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். உயர் இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், இரத்தத்தில் கொழுப்புச் சத்து அளவு வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருப்பவர்கள், சிறுநீர்ப் பாதை அடைப்பு, சிறுநீர்ப் பையில் கற்கள் உள்ளவர்கள் முழுமையான இரத்த யூரியா கிரியாட்னைடினின் அளவை அடிக்கடி தெரிந்து கொள்வது அவசியமாகும்.

கா. ராகவேந்திரன்


Spread the love