சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருந்தான ஆவாரை. சூரியனை விரும்பும் தாவரம். குளிரை அவ்வளவாக விரும்பாது. 10-12 அடி உயரம் வளரும் ஆவாரை செடி, புதர் போல் பரவி வளரும். பலமான, கெட்டியான தண்டுடன், அநேக கிளைகளுடன் இருக்கும். மஞ்சள் – பச்சைநிற இலைகள், பெரிய மஞ்சள் பூக்களுடனும் காணப்படும். இதன் பழங்களில் 7-10 விதைகள் இருக்கும்.
இதன் தாவரவியல் பெயர்: Cassia Auriculata.
சம்ஸ்கிருதம்: தெலபோடகம் ஹிந்தி – தர்வார் தெலுங்கு – தங்கேடு கன்னடம் – ஆவாரே கிடா மலையாளம் – அவார ஆங்கிலம் – Tanners Cassia இந்தியாவில் எல்லா இடங்களிலும் வளரும்.
இதன் பட்டையில் ‘டானின்’ இருப்பதால், தோல் பதனிடும் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் சிறப்புகுணம், நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து என்பதாகும். மிக பழமையான நீரிழிவு நோய்க்கு இது வரை முற்றிலும் குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே மாற்று வைத்தியங்கள் – அதுவும் ஆயுர்வேத மூலிகை மருந்துகள் – பற்றிய ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த முயற்சியில், ஆவாரை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏற்கனவே “ஆவாரை பஞ்சாங்க சூரணம்”, நீரிழிவு நோய்க்கும், கண் நோய்கள் மருந்தாகவும், ‘டானிக்காகவும், உபயோகிக்கப்படுகிறது. ஆவாரம் பூக்கள் இந்த சூரணத்தில் ஒரு முக்கிய பொருள். எனவே விஞ்ஞானரீதியான ஆராய்ச்சிக்கு ஆவாரம் பூக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
திருச்சியில் உள்ள வி.மி.ணி.ஜி. கல்லூரி வளாகத்திலிருந்து ஆவாரை பூக்கள் சேகரிக்கப்பட்டு, நிழலில் ஏழு நாட்கள் காயவைக்கப்பட்டன பிறகு பொடியாக்கப்பட்டன. பூவில் உள்ள ஃப்ளபனாய் (Flavanoid) மற்றும் பினாலிக் அமிலம் (Phenolic acid) சாறாக எடுக்கப்பட்டது.
ஆரோக்கியமான எலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு அல்லோக்ஸான் (Alloxan) மருந்தின் மூலமாக நீரிழிவு நோய் உண்டாக்கப்பட்டது, பல பிரிவுகளாக எலிகள் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு அளவில், அவற்றுக்கு ஆவாரப்பூச்சாறு கொடுக்கப்பட்டது. 30 நாளில் ஆவாரம் கொடுக்கப்பட்ட எலிகளில் இரத்தச்சர்க்கரை அளவு கணிசமாக குறைக்கப்பட்டிருந்தது. இந்த நீருபிக்கப்பட்ட ஆவாரம் பூவின் பயன்கள் மேற்கொண்டு இதன் பலனை முழுமையாக பெற ஆராய்ச்சிகள் நடத்த தூண்டுதலாக உள்ளன.
சர்க்கரை வியாதிக்கு ஆவாரை அருமருந்தென சித்த வைத்தியத்திலும் கூறப்படுகிறது. ஆவாரைச் சமூலம் ‘சர்வபிரமேகமூத்திர ரோகங்களையும், சிறுநீர் எரிச்சலையும் போக்கும். ஆவாரம் இலை உடலுக்கு வலிமைதரும். பூ இளைத்த உடலுக்கு பலத்தை உண்டாக்கும். விதைகள் உடல் சூட்டை தணிக்கும் என்கிறது சித்த வைத்தியம். இதன் எல்லா பாகங்களையும் பயன்படுத்த பல முறைகளை சித்த வைத்தியம் விவரிக்கிறது.
ஆவாரத்தின் இதர பயன்கள்
இதன் பட்டை ரத்தப்பெருக்கை நிறுத்தும்.
இலைகள் டானிக். சுரத்தை குறைக்கும்.
கண் நோய்களுக்கு மருந்தாக, விதைகளின் பொடி பயன்படுகிறது.
இலைகள் மலமிளக்கி. மலச்சிக்கலை போக்கும்.
பெண்களின் முக அழகை ஆவாரம் பூவும், மொட்டுக்களும் விதைப் பொடிகளும் மேம்படுத்தும்.
ஆப்ரிக்காவில் பட்டை, விதைகள் ருமாடிஸம், கண் வியாதிகள், நீரிழிவு, கொனேரியா வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.