காகத்தின் குஞ்சு ஒன்று முதன் முதலாக இறை தேட சென்றது. ஆனால் இறை தேடி திரும்பிய குஞ்சு காகம் மிகவும் வருத்தமாக காணப்பட்டது. வருத்தத்தின் காரணத்தை பற்றி தாய்காகம் கேட்கும் பொழுது, நாம் மட்டும் ஏன் அம்மா இப்படி கருப்பாக, அசிங்கமாக இருக்கின்றோம். குரல் கூட இனிமையாக இல்லையே, மற்ற பறவைகளை பார்க்கும்போது என் உருவத்தை பற்றி எனக்கு கவலையாக உள்ளது என்றது குஞ்சு காகம்.
அதற்கு தாய் காகம் சரி என்னுடன் வா என்று கூறி, நீண்ட தூரம் பறந்து சென்ற பின்பு, உயரமான மரத்தின் மீது இருவரும் அமர்ந்தார்கள். அது ஒரு உயிரியல் பூங்கா, உள்ளே எழில் கொஞ்சும் நிறங்களில் பெரிதும், சிறிதுமாக ஆங்காங்கே பறவைகள் நின்றன. பல பறவைகள் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தன. இதை பார்த்த குஞ்சு காகம் ஆச்சரியத்தில் திகைத்தது. கீழே நின்றிருந்த பார்வையாளர்கள், பறவைகளை நோக்கி உணவு பண்டங்களை எறிந்தனர். குஞ்சு காகமும் அதை தின்னும் ஆவலுடன் கீழ் நோக்கி பறந்து சென்றது.
உடனே பார்வையாளர்கள் கைகளை அசைத்து காகத்தினை விரட்டினார்கள். இதனால் வேதனையடைந்த குஞ்சு காகம், வேகமாக மரத்தின் உச்சியில் வந்து அமர்ந்து, பாரும்மா நான் சொன்னேன் கேட்டியா? நாம் மிகவும் அசிங்கமாக இருக்கின்றோம், நம்மை யாருக்குமே பிடிக்கவே இல்லை. மற்ற பறவைகளை பார்த்து பரவசமடையும் மனிதர்கள், அவைகளை கொஞ்சி அழைப்பதும், உணவு கொடுப்பதும் போன்ற செயல்களில் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் நம்மை துரத்துகிறார்கள் என்று வேதனையடைந்தது.
அதற்கு தாய்காகம் நீ மிகவும் தாழ்வு மனப்பான்மை கொண்டுள்ளாய் என்றது. ஆனால் குஞ்சு காகம், பின்ன என்ன, நம் குரல் குயில் போல இனிமையாக இல்லை, நம் இறகுகள் மயில் போல வண்ணமாக இல்லை. நம் அழகு கிளியை போல் சிவப்பாக இல்லை என புலம்பியது. அது எல்லாம் சரி..நீ சொல்லும் பறவைகள் எல்லாம் இப்போது எங்கே உள்ளது என்று தாய்காகம் கேட்டது. அதற்கு குஞ்சு காகம் அதோ கூண்டிற்குள் அடைத்து இரை போடுகிறார்கள் அம்மா, உனக்கு தெரியவில்லையா என வெகுளியாக கேட்டது.
ஆம், எல்லாம் கூண்டில் சிறைபட்டு கிடைக்கின்றன. நீ இப்போது நினைத்தால் கூட பறந்து விடலாம். ஆனால் அவற்றால் பறக்க முடியாது. இப்படி அவை சிறைப்பட்டிருக்க காரணம் என்ன தெரியுமா? நீ சொன்ன அதே அழகு தான். யாராவது நம்மை சிறைப்படுத்தி கேள்விப்பட்டிருக்கிறாயா? நாம் அழகற்று இருப்பது நமக்கு கிடைத்த பெரிய பாதுகாப்பு. இது இயற்கை நமக்கு அளித்த வரம். அதுவே நமக்கு பெறுமை. மேலும் மனிதர்கள் நம்மை வெறுப்பவர்கள் இல்லை. விழா நேரம் என்றாலும், இறைவழிபாட்டிற்கு பின்னும் முதலில் நமக்கு உணவு அழிப்பது அவர்களது வழக்கம்.
அது மட்டுமில்லாமல் கூடி வாழ்வதற்கும், பகிர்ந்து உண்பதற்கும் நம்மை உதாரணமாக காட்டி அதை பின்பற்றுபவர்கள் மனிதர்கள். இந்த பெருமையெல்லாம் மற்ற பறவைகளிடம் கிடையாது. மேலும் நிறத்தாலும், அழகாலும் இந்த பெருமையெல்லாம் நமக்கு வந்து சேரவில்லை என்று தாய்காகம் கூறியது. தாயின் வார்த்தைகளை கேட்டு தன் பெருமைகளை எண்ணி மகிழ்ச்சி அடைந்து, தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்தது குஞ்சு காகம்.