இப்போது எல்லாம் நடுத்தர வயதிலேயே பலர் சோர்வடைந்த நிலையில் இருப்பதை காண முடியும். இவர்களால் ஒற்றை ஆளாக கூட சைக்கிளை ஓட்டிச்செல்ல முடியாது. காரணம், உடலில் நடுக்கம் ஏற்பட்டு, வேர்க்க, விறுவிறுக்க ஆரம்பித்துவிடும். இதற்கு முக்கிய காரணம், மூளைக்கு வயதாகி வருவதும், உடற்பயிற்சி இல்லாததும்தான்.
உடலுக்கு வயதாவதுபோல், மூளைக்கும் வயதாகிறது. அதாவது சிறுவயதில் 1.40 கிலோ வரை இருக்கும் மனித மூளை 80 வயதை எட்டும்போது, அதில் பத்து மடங்கு, அதாவது 140 கிராம் எடை குறைந்து விடுகிறது. சிறுவயதில் இருக்கும் மூளையின் அளவு, மூப்படையும்போது சுருங்குகிறது என்பது ஸ்கேன் சோதனை மூலமாக ஆதாரப்பூர்வமாக மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை குறைந்து, மூளை சுருங்குவதே இதற்கு காரணம். சிறுவயதில் ஒருவருக்கு, உடல் இயக்கத்துடன் தொடர்புடைய சப்ஸ்டான்ஷியா நிகரா என்ற செல்கள் 6 லட்சம் வரை உள்ளன. ஆனால், மூப்பு எட்டியபின்பு இது 1 லட்சம் செல்களாக குறைந்து விடுகிறது. நாளன்றுக்கு 1,000 செல்கள் வரை அழிகின்றன.
மூளையின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் அழியும்போது, உடலில் நடுக்கம், தளர்வு, பார்கின்சன், அஸீமர்ஸ் நோய்கள் ஆகியவை ஏற்படுகின்றன.
மூளைக்கு ஏற்படும் இந்த மூப்பினால்தான், உடலில் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், சிலர் 80 வயதிலும் கூட இளமையில் இருந்த அதே துடிதுடிப்புடன் இருப்பதை பார்க்க முடியும். இவர்களுக்கு மட்டும் எப்படி அது சாத்தியம் என்று கேட்டால், அவர்களின் சிறந்த சரிவிகித உணவு பழக்கம், உடற்பயிற்சி ஆகியவையாகத்தான் இருக்கும்.
உடற்பயிற்சியினால் எந்த நன்மையும் கிடையாது; அதனால் வியர்வை ஏற்படுவதுதான் மிச்சம் என்று முன்பு கூறப்பட்டு வந்தது. ஆனால், உடற்பயிற்சியால், உடலுக்கு மட்டுமின்றி, மூளைக்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்று இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரியம் டைமண்ட் என்ற ஆய்வாளர் எலிகளை கொண்டு உடற்பயிற்சி சோதனையை மேற்கொண்டார். வெள்ளை எலிகள், ஏணிகள், வளையங்கள் மூலம் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. மற்றொரு பிரிவு எலிகள், இந்த உடற்பயிற்சியில் ஈடுபடுத்தப்படாமல் பல மணி நேரங்கள் மற்ற எலிகளின் உடற்பயிற்சியை கவனிக்க வைக்கப்பட்டும், சில மணி நேரங்கள் மட்டும் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
ஆனால், கடைசியாக ஒரு பிரிவு எலிகள் எந்த உடற்பயிற்சியும் இல்லாமல் வெறுமனே கூண்டுகளில் சுற்றித் திரிய விடப்பட்டன.
இந்த ஆராய்ச்சி முடிவில், உடற்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட எலிகள், 3 வயதிலும் கூட நல்ல சுறுசுறுப்புடன் இருந்தன. எலிகளுக்கு 3 வயது என்பது, மனிதர்களின் 90 வயதுக்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக சில மணி நேரங்கள் மட்டும் பயிற்சியில் ஈடுபட்ட எலிகள் ஓரளவு சுறுசுறுப்புடன், உடற்பயிற்சியே செய்யாத எலிகள் பெரிய அளவில் மூப்பு தன்மையுடன் இருந்தன. அதாவது நினைவுகள் தப்பிய நிலையிலும், சுறுசுறுப்பு இல்லாமலும், வயதான காலத்தில் வரும் அத்தனை பாதிப்புகளையும் பெற்றிருந்தன.
சுறுசுறுப்புடன் இருந்த எலிகளை ஆராய்ந்தபோது, 3 மாதத்தில் இருந்த மூளைகளின் செல் அளவுகள், 3 வயதிலும் அதே அளவில் இருந்தன. 2ம் பிரிவு எலிகளுக்கு இதன் அளவில் சற்று குறைந்திருந்தது. ஆனால், 3ம் பிரிவு எலிகளின் மூளை செல் அளவு பெருமளவில் குறைந்திருந்தன.
இதன் மூலமான முடிவு என்னவென்றால், உடற்பயிற்சி செய்யும்போது, மூளையில் உள்ள செல்கள் அழிவது தடுக்கப்படுகின்றன. இதனால் எளிதில் மூப்பு தன்மை வராமல் பாதுகாக்கப்படுகிறது.
டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசரியர் ஸ்பிர்டுசோ நடத்திய ஆய்விலும், உடற்பயிற்சி பெற்ற எலிகளின் உடலில் டோபாமின் என்ற அமிலம் அதிகம் சுரப்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். டோபாமின்தான் மூளையின் நினைவு செல்களை பாதுகாக்கிறது. இந்த சுரப்பு குறையும்போது பார்கின்சன் நோய் ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
டோபாமின் சுரப்புக்கு மிகப்பெரிய எதிரி மது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மது குடிக்கும்போது, அது மூளையில் உள்ள டோபாமின்னை பாதிக்கிறது. இதனால் அதிகளவில் மது குடிக்கும்போது, மறதி ஏற்படுகிறது. அடிக்கடி மது குடித்தால், செல்களின் பாதிப்பு அதிகரிக்கும். மது குடிப்பதை அறவே மறக்க வேண்டும் என்பதுடன், தினமும் உடற்பயிற்சியும் மேற்கொண்டால், உங்களுக்கு சதாபிஷேகம் நடப்பதை நிச்சயித்து கொள்ளலாம்!