நாலு விஷயத்துக்கு நல்லது நாயுருவி

Spread the love

அட்டகர்ம மூலிகை, மூலிகைகளில் பெண் மற்றும் தெய்வத் தன்மை கொண்டதும், நவகிரகங்களில் ஒருவரான புதன் பகவானுக்கு மிகவும் விருப்பமானதும் ஆகும். இது இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா  இடத்திலும் வளரும் குறுஞ்செடியாகும்.

தரிசு நிலங்கள், வேலியோரங்களில், காடு மலைகளிலும் வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவமாக இருக்கும். இதன் தண்டிலிருந்து கதிர் போல் செல்லும், அதில் அரிசி போல் முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். பூக்களில் பச்சை நிறம் காணப்படும். இதன் விதை ஒட்டும் தன்மையுடையதால் விலங்குகள், மனிதர்கள், மற்றும் பறவைகளின் மீது ஒட்டிச்சென்று வேறு இடங்களில் விழுந்து வளரும் தன்மையுடையது. இது விதை மூலம் இனவிருத்தி செய்கிறது. எதிரடுக்கில் இலைகள் மற்றும் காம்புள்ள நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி. இவற்றின் தண்டுகளில் இலை பச்சை மற்றும் ஒருவிதமான சிகப்பு நிறத்தில் காணப்படும் வகை செந்நாயுருவி எனப்படும். இந்த செந்தாயுருவியே அதிக மருத்துவப்பயன்களை உடையது. செந்நாயுருவியே தெய்வீக ஆற்றலும் பெற்றது. (மிகவும் அரிதாகக் காணப்படுவதாகும்).

வேறு பெயர்கள்:- காஞ்சரி, கதிரி, மாமுநி, நாய்க்குருவி, அபாமார்க்கம் போன்றவை நாயுருவியின் வேறு பெயர்களாகும்.

வகைகள்: நாயுருவியில் சிவப்பு, பச்சை என இரண்டு வகை நாயுருவி இருக்கின்றன. இரண்டையுமே மருத்துவத்தில் பயன்படுத்தலாம்.

மூலிகையின் பெயர் :- நாயுருவி.

தாவரப்பெயர் :- ACHYRANTHES ASPERA.

தாவரக்குடும்பம் :- AMARANTACEAE.

மருத்துவப் பயன்கள் :

நம் உடலில் சிறுநீரைப் பெருக்கி, நம் உடலிலுள்ள நோயை நீக்கி உடலை தேற்றுகிறது. சதை மற்றும் நரம்புகளை சுருங்க செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ குணங்களாகும்.

இதன் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு  உள்ளவர்களின் தொப்புள் மீது பற்று போட நீர் கட்டுகள் நீங்கி உடல் நலம் பெறும். மேலும் இதன் இலைகளை சாறெடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால், காதுகளில் சீழ் வடிதல் நிற்கும்.

கதிர்விடாத இதன் இலையை இடித்து சாறு பிழிந்து அத்துடன் சம அளவு நீர் கலந்து காய்ச்சி ஆறிய பின் தினமும் மூன்று வேளைகள் மூன்று மி.லி. அளவு ஐந்தாறு நாட்கள் சாப்பிட்டு பால் அருந்த தடைபட்டிருந்த சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்கு செயல்படும். சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது.  சூதகக்கட்டு மற்றும் மாதவிலக்கு தடைபடுவது போன்றவை நீங்கும். உடலிலுள்ள பித்தம், பாண்டு, உடம்பில் நீர் கோர்த்தல், ஊதுகாமாலை, குருதி மூலம் ஆகியவை குணமாகும்.

இதன் இலையை அரைத்து நெல்லிக்காயளவு எருமைத் தயிரில் கலந்து, காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணப்படும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு மற்றும் பேதிகள் குணமாகும். ஆறாத புண்களான, ராஜ பிளவை மற்றும் விஷக்கடி ஆகியவற்றிக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வர குணம் காணலாம்.

இதன் இலையைப் பருப்புடன் சேர்த்து சமைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர நுரையீரலில் உள்ள சளி நீங்கும், இருமல் குணமாகும்.

விட்டுவிட்டு வரும் ஜுரத்திற்கு  நாயுருவி  இலைகளுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்திக் கொடுக்க அவை குணமாகும்.

மூல நோய்க்கு,  நாயுருவியின் இலைக் கொழுந்தைப் பறித்து அதனுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து மூலத்தில் வைத்து கட்டி வர இதம் தரும்.

இதன் இலைச்சாறு நூறு மி.லியுடன் நூறு மி.லி. நல்லெண்ணை சேர்த்து காய்ச்சி சாறு சுண்டியவுடன் வடித்து சொட்டு மருந்தாக இரு வேளை காதில் விட காதில் வலி, புண், செவிடு ஆகியவை குணமாகும். இதை கண்கூடாகக் காணலாம். மூக்கில் ஒழுகும் சளி, மற்றும் புண்களுக்கும் இச்சொட்டு மருந்தைப் பயன் படுத்தலாம்.

அதிகாலைப் பனித்துளி படர்ந்த இதன் இலைகளை சிறிது பறித்து அங்கேயே கசக்கி, பிழிந்த சாற்றை தேமல், பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர குணமாகும்.

இதன் இலையை சாறு பிழிந்து முப்பதிலிருந்து ஐம்பது மி.லி. அளவு பருகி, ஏழு நாட்களுக்கு உப்பில்லாப் பத்தியம் இருக்க வெறி நாய்க்கடி, பாம்புக்கடி விஷம் முதலியவை தீரும். இலைகளை அரைத்து கடிவாயிலும் வைத்துக் கட்டலாம். 

இதன் இலையுடன் சம அளவிற்கு துளசி சேர்த்து அரைத்து நெல்லிக்காயளவு இருவேளை சாப்பிட்டுவந்தால் வண்டு மற்றும் பிற பூச்சிக்கடிகள் குணமாகும்.

நாட்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், நாயுருவி இலைகளை குடிநீரில் போட்டு அருந்தி வந்தால் பேதியாகும்.

இதன் இலைச்சாறில் ஏழுமுறை ஒரு வெள்ளைத் துணியை நனைத்து அதை நிழலில் உலர்த்தி திரி சுற்றி விளக்குத்திரியாகப்  போட்டு, நெய் தடவி எரியும் புகையை அதில் படியுமாறு பிடிக்கவும். அந்த புகைக் கரியை ஆமணக்கு  நெய் விட்டு மத்தித்து கண்களில் தீட்டிக்கொண்டால், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

இதன் இலையை பத்து கிராம் எடுத்து அரைத்து, சிறிது நல்லெண்ணெய் கலந்து இரண்டு  வேளையாக பத்து நாட்கள் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.

இதன் இலையுடன் குப்பைமேனி இலையையும் சம அளவில் எடுத்து கசக்கி சாறு எடுத்து தேள் கடி பட்டவர்களுக்கு கடிவாயில் தேய்க்க கடுகடுப்பு நீங்கி விஷம் உடனே இறங்கும்.

துத்திக்கீரை வதக்கலில் நாயுருவி விதைச் சூரணம் இருபது கிராம் கலந்து உணவுடன் சாப்பிட அனைத்து மூல வியாதிகளும் தீரும்.

வயிற்றுவலி, அஜீரணம், புளித்த ஏப்பம், உடல் வீக்கம் உடையவர்கள் நாயுருவி வேரைக் காஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது.

நாயுருவி வேரால் பல் துலக்க, பல் தூய்மையாகி முகத்திற்கு வசீகரத் தன்மை கிடைக்கும், மனோசக்தி அதிகமாகும், நினைத்தவையெல்லாம் நடக்கும், ஆயுள் மிகும்.  குறிப்பு: இப்படி செய்யும்பொழுது காப்பி, டீ, புகை, புலால் இவற்றை விலக்கவும்.

இதை காயவைத்து பஸ்மமாக்கி அந்த சாம்பலுடன் கடுகெண்ணையும் சிறிது உப்பும் சேர்த்து பல்  துலக்கினால் பல் பலம் பெறும். வலியிருந்தால் குறையும். இதன் சாம்பலில் பொட்டாஷ் உள்ளதால் இதை அழுக்குத் துணி துவைக்கப் பயன் படுத்துவர்.

இதனை எரித்த சாம்பலை ஐந்து கிராம் தேனில் கலந்து காலையில் கொடுக்க மாத விலக்குத்தடைகள் நீங்கும்.

நாயுருவிச் சாம்பல், ஆண் பனையின்பூவின் பாளைச் சாம்பல் சம அளவு சேர்த்து, நீர் விட்டுக் கரைத்து ஒரு பொழுது ஓய்வாய் வைத்திருக்க, அடுத்த நாள் அந்த நீர் தெளிந்திருக்கும். அதை அடுப்பிலேற்றிக் காய்ச்சினால் ஒருவகையான உப்பு கிடைக்கும். இவ்வுப்பில் இரண்டு அரிசிகள் எடை தேன், நெய், மோர், வெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து கொடுக்க என்புருக்கி, நீரேற்றம், குன்மம், பித்தப்பாண்டு, ஆஸ்துமா ஆகியவை தீரும். தூதுவளை, கண்டங்கத்தரி, ஆடாதொடை இவற்றின் குடிநீர்களை துணை மருந்தாக எடுத்துக்கொள்ளலாம்.

சிறுநீர் அடைப்பு உள்ளவர்கள் நாயுருவி சமூலத்தை குடிநீரிலிட்டு அறுபது மி.லி. முதல் நூற்றியிருபது மி.லி. வீதம் அருந்தி வர சிறுநீர் பெருகும். மலச்சிக்கல், பசியின்மை, செரிமானமின்மை (அஜீரணம்)  போன்றவற்றுக்கு  இது சிறந்த மருந்தாகிறது. பால்வினை நோய்களால் ஏற்படும் புண்கள், மூலம், இருமல், தோலரிப்பு, உடல் சுறுசுறுப்பு குறைதல், தொழுநோய் போன்றவற்றை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.  

காதுவலி,  பல்வலி, சிறுநீரடைப்பு போன்றவற்றுக்கான மருந்துகளிலும் இது சேர்க்கப்படுகிறது.   பற்களில் தங்கியுள்ள  நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுகள் வலித்தல், ஈறுகளில் வீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பற்களைப் பாதுகாத்து பளிச்சென்ற  வெண்மை நிறத்தைக் கொடுப்பது நாயுருவி என்ற இந்த அற்புத மூலிகை. இச்செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவி பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி பல் துலக்கப் பயன்படுத்தலாம்.

நாயுருவி பற்பொடி

நாயுருவி வேர் &- 100 கிராம்

கடுக்காய் -& 50 கிராம்

நெல்லிக்காய் &- 50 கிராம் 

தான்றிக்காய் -& 50 கிராம்

ஏல அரிசி -& 20 கிராம்

கிராம்பு -& 50 கிராம்

சுக்கு -& 50கிராம்

கருவேலப்பட்டை &- 50கிராம்

இந்துப்பு -& 50 கிராம்

நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டால் பசி எடுக்காது. மீண்டும் பசி எடுக்க, சிறிதளவு மிளகு எடுத்து அதை வறுத்து, இரவில் ஒரு கோப்பை தண்ணீரில் ஊற வைத்து காலையில் கொதிக்க வைத்து,  வடிகட்டி அருந்த வேண்டும்.

இதன் வேர்ப்பட்டை, மிளகு சம அளவாக எடுத்துப் பொடி செய்து 1/4 கிராம் எடுத்து சிறிது தேனில் கலந்து இருவேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும். நாயுருவி விதையை பத்து கிராம் எடுத்தரைத்து இரண்டு வேளை இரண்டு நாட்கள் சாப்பிட்டு வர பேதி நிற்கும்.

இவ்வளவு மருத்துவப் பயன்மிக்க எளிதான நம் பாரம்பரிய மருத்துவத்தை அதிகமாக உபயோகப்படுத்தி நம் மனநலம் மற்றும் உடல்நலத்தை பேணிக்காப்போம்.

கி. ராஜகோபாலன்


Spread the love
error: Content is protected !!